செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா?

 எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் திரு மாலன் அவரகளும் நானும் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் . . .

------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன் அவர்கள்:
தமிழ்ச் சமூகம் குறுகியது அல்ல உலகளாவியது பேச்சு வழக்கில் உள்ளதைப் போன்று எழுத்து வழக்கிலும் வேற்பாடு இருக்கும் பேச்சு வழக்கிற்கு அருகில் எழுத்து வழக்கைக் கொண்டு வருவதுதான் உகந்தது பேச்சு வழக்கில் வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக இடம் பெறுவதில்லை எடுத்துக்காட்டாக என் வீடு, உன் பணம் அஃறிணைக்குரிய விகுதிகள் உயர்திணைக்குப் பயன்படுத்தப்படுகின்றன உதாரணம் என் மனைவி ஒருமை பன்மை மங்குகின்றன எடுத்துக்காட்டு: விருதுகள் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் அனுமதிப்பவர்கள் அல்லது கண்டும் காணாதிருப்பவர்கள் ஒற்றுப் பிழைகளுக்கு, ஒற்று விடுபடலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். மொழி அடிப்படையில் மக்களுடையது அவர்கள் வழக்கிற்கு ஏற்ப இலக்கணம் அமைய வேண்டும் காலுக்குத்தான் செருப்பு.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
தமிழ்மொழிபற்றிப் பேசும்போது, தமிழ் ஒரு இரட்டைவழக்குமொழி (Diglossic language) என்பதை மனதில் கொள்ளவேண்டும். எழுத்துவழக்கு, பேச்சுவழக்கு என்று இரண்டு இரட்டைவழக்குக்கள் நிலவுகின்றன. தமிழ்மொழிச் சமுதாயம் இந்த இரண்டையும் பயன்படுத்துகிறது.
ஆனால் மிகத் தெளிவாக, பேச்சுவழக்கை எங்கெங்கே பயன்படுத்தவேண்டும், எழுத்துவழக்கை எங்கே பயன்படுத்தவேண்டும் என்பதை வரையறுத்து வைத்துள்ளது. சில மொழிச்செயல்பாடுகளில் இரண்டும் கலந்துவரும். கட்டுரைகள், நூல்கள், பாடங்கள் போன்றவற்றிற்கு எழுத்துத்தமிழைத்தான் பயன்படுத்தவேண்டும்; அன்றாட உரையாடல் போன்றவற்றிற்குப் பேச்சுவழக்கைத்தான் பயன்படுத்தவேண்டும். யாரும் தனது வீட்டில் அல்லது உறவினர்கள், நண்பர்களிடம் எழுத்துவழக்கைப் பேசமாட்டார்கள். இந்தச் செயல்பாட்டுப் பங்கீட்டைத் (Functional distribution) தனிநபர்கள் தீர்மானிப்பதில்லை. தமிழ்ச் சமுதாயமே தீர்மானித்துவைத்துள்ளது.
உண்மையில் இரட்டைவழக்குச் சூழல் ஒரு பிரச்சினைதான் (language problem). ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நீடித்துவருகிறது. இந்த இரண்டுவழக்குக்களுக்கும் இடையில் சொல் அளவில் அமைப்பு வேறுபாடு (Structural difference) உண்டு. தொடர் அளவில் இது குறைவுதான். மக்களுடைய நோக்கும் (Social attitude) வேறுபடுகிறது. காலையிலிருந்து இரவுவரை பேசுகிற பேச்சுவழக்கைத் தாழ்வானதாகவும் எழுத்துவழக்கை உயர்வாகவும் கருதுகிறது. code mixing என்ற ஒரு நிலையும் இங்குக் காணப்படுகிறது. இரண்டுவழக்குக்களும் சில இடங்களில் கலந்துவரும்.
பேச்சுவழக்கைப் பயன்படுத்தும்போது, உரையாடுபவர்கள் நேரில் இருப்பதால் , பல மொழிக்கூறுகளை - சந்தி, சில ஒலியன்கள், சில சொல் அல்லது தொடரமைப்பு விதிகளை- பயன்படுத்தாவிட்டாலும் உரையாடுபவர்களுக்குப் பொருளைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் எழுத்துவழக்கு அப்படிப்பட்டது இல்லை. எழுதுபவர்களுக்கும் அதை வாசிப்பவர்களுக்கும் இடையில் இடம், காலம் போன்றவை உண்டு. எனவே சில இலக்கணக் கூறுகளை எழுதுபவர் பின்பற்றினால் கருத்துப்பரிமாற்றம் தடையின்றி இருக்கும்.
பேச்சுமொழியிலும் சந்தி, சாரியை போன்றவை இடம்பெறத்தான் செய்கின்றன. யாரும் பேச்சுவழக்கில் 'மரத்தை' என்பதை 'மரமை' என்று கூறமாட்டார்கள். 'மரத்தெ' என்று கூறும்போதும் சாரியை இடம்பெறுகிறது. அதுபோன்று 'படிச்சுப்பார்' என்றுதான் பேசுகிறோம். 'படிச்சு பார்' என்று கூறுவதில்லை. இதுபற்றிப் பேச்சொலியியல் அடிப்படையில் ஆய்வுசெய்தால் உணரலாம். எனவே, பேச்சுத்தமிழில் சந்தி இல்லை என்று கருதவேண்டாம். சந்தியை விட்டுவிட்டாலும் உரையாடுபவர்கள் பேச்சுச்சூழலை வைத்துக்கொண்டு புரிந்துகொள்வார்கள். ஆனால் எழுத்துத்தமிழில் அவ்வாறு இல்லை. 'அவன் வேலை பார்க்கிறான்' 'முக்கிய தலைவர்' 'நாளை காலை(ப்)பார்க்கலாம்' போன்றவற்றில் சந்தி இல்லையென்றால் குழப்பம் ஏற்படும். எனவே ''ஒற்று விடுபடலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.'' என்று கூறுவது சரி இல்லை எனக் கருதுகிறேன்.
'செருப்புக்குத் தகுந்த கால்' என்பது சரிதான். ''பேச்சுத்தமிழுக்குத் தகுந்த இலக்கணம், எழுத்துத்தமிழுக்குத் தகுந்த இலக்கணம் '' என்று இருக்கவேண்டும். இரண்டும் ஒரே வழக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு எழுத்துத்தமிழைத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். பேச்சுத்தமிழை இல்லை. பேச்சுத்தமிழ் குழுந்தைகளுக்குத் தானாக உருவாகக்கூடியது.
எனவே எழுத்துத்தமிழின் கட்டமைப்பைக் கைவிடுவது சரி இல்லை. ஆனால் இந்த இடத்தில் ஒரு கருத்தை வலியுற்றுத்த விரும்புகிறேன். பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டுமே தொடர்ந்து மாறிக்கொண்டுதான் வருகின்றன. சொல்வளம் மட்டுமல்லாமல், இலக்கண வளமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே அதைக் கருத்தில்கொண்டு, இன்றைய எழுத்துத்தமிழில் நிலவுகிற இலக்கணத்தை ஆராய்ந்து முன்வைக்கவேண்டும். தொல்காப்பியம், நன்னூல்மட்டுமே போதும் என்று கருதக்கூடாது. விதிகள் மாறலாம். ஆனால் விதிகளே கூடாது என்று கருதுவது சரியல்லை என்பது எனது கருத்து.
குழந்தைகள் வளர வளர, அவர்களின் உடைகளின் அளவும் (செருப்பு உட்பட) மாறித்தான் ஆகவேண்டும். இது ஒரு இயற்கையின் இயற்கை விதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India