திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்:
ஐயா ஒரு ஐயம்.
know என்பதை பேச்சுமொழியில் சரியாகச்சொல்ல தேவைப்படும் அறிவை மாற்றுவிதிகளின் எண்ணிக்கைக்குள் கொண்டுவரவேண்டுமா?
ந. தெய்வ சுந்தரம் :
ஆங்கிலத்தில் எழுதுவதை அப்படியே பல நேரங்களில் வாசிக்கமுடியாது. cat, cut, car என்பதை உச்சரிக்கும்போது c" ஐ ''k" என்று உச்சரிக்கிறோம். ஆனால் city, cipher போன்றவற்றை உச்சரிக்கும்போது , "c" என்பதை "c" என்றே உச்சரிக்கிறோம். Psychology என்பதை உச்சரிக்கும்போது, "p" ஐ விட்டுவிடுகிறோம். 'creche" என்பதை "krush" என்று வாசிக்கிறோம். இதன் காரணமாகத்தான் ஆங்கில அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அடைப்புக்குறிக்குள் உச்சரிப்பைத் தருகிறார்கள். உச்சரிப்புக்கான தனி அகராதிகளும் Daniel Jones, Gimpson போன்றவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு மாறியமைகிறது என்பதற்கான காரணங்களுக்கு இப்போது நான் செல்லவில்லை.
ஆனால் தமிழில் எழுதுவதை அப்படியே வாசிக்கலாம். மாற்றொலி விதிகள்மட்டும் தெரிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, சொல்முதலிலும் சொல் இடையில் இரட்டித்துவரும்போது 'க' என்பது ஒலிப்பில்லா வல்லினமாகவும் (கடல், அக்காள்) , சொல் நடுவில் மெல்லினத்திற்குப்பின் வரும்போது ஒலிப்புள்ள ஒலியாகவும் ( தங்கை, பங்கம்) , சொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போது சற்று உரசல் தன்மையுடனும் உச்சரிக்கப்படுகிறது. இதற்கு இவ்வாறு தெளிவான விதிகள் இருப்பதால் எழுதுவதை அப்படியே வாசிக்கமுடியும். இந்தச் சிக்கலும்கூட வல்லினங்களுக்குமட்டும்தான் உண்டு. முற்றுகரம், குற்றுகரத்திற்கும் உண்டு. மற்றபடி சிக்கல் இல்லை.
தாங்கள் கூறியுள்ள know என்பதில் உள்ள k உச்சரிக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற வேறுபாடுகளுக்கும் சில விதிகளைக் கூறலாம். c என்ற எழுத்துக்கு அடுத்துப் பின்னுயிர்கள் a, u போன்றவை வந்தால் k என்று உச்சரிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் முன்னுயிர்கள் வந்தால் c என்றே உச்சரிக்கப்படும். மேலும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கும்போது, அவற்றின் உச்சரிப்புகளையும் சேர்த்து கடன் வாங்கிவிடுகிறது.
அடுத்து, தமிழில் ஒலியன்களுக்குமட்டும் எழுத்துகள் இருப்பதால் , அயல்மொழிச்சொற்களைக் கடன் வாங்கும்போதும் , ஒலிப்புள்ள ஒலியாக இருந்தாலும், தமிழில் உள்ள எழுத்துகளையே பயன்படுத்துகிறோம். குண்டு (bomb), குண்டு (stout) ; பாவம் (expression) , பாவம் (sin) , பால் (ball), பால் (milk) போன்ற சொற்களைப் பார்த்தால் இது வெளிப்படையாகத் தெரியும். இந்தச் சொற்களை வாசிக்கும்போது குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்படலாம். ஆனால் பெரியவர்களுக்கு இந்தச் சிக்கல் பெரும்பாலும் வராது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக