சிலர் இலக்கணம் என்று கருதுவது மொழியில் இருக்கிற இலக்கணத்தை ஆய்ந்து எழுதப்படுகிற இலக்கணநூலைக் (தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள்) குறிக்கிறது எனக் கருதுகிறேன். இலக்கண ஆசிரியர்கள் ஒரு மொழியின் இலக்கணத்தை உருவாக்கவில்லை. மாறாக, அதை ஆராய்ந்து எழுதுகிறார்கள். பேச்சுத்தமிழுக்கு முழுமையான இலக்கணம் உண்டு. ஆனால் அதை ஆய்ந்து எழுதப்பட்ட இலக்கண நூல்கள் குறைவு. பேராசிரியர்கள் குமாரசாமி ராஜா, முத்துச்சண்முகம், ஹெரால்ட் ஷிப்மேன், வாசு இரங்கநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர். நானும் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் கொடுத்துள்ளேன்.
இலக்கணம் இல்லாமல் எந்தவொரு மொழியும் - பேச்சுமொழி உட்பட - இருக்கமுடியாது. நாம் பேச்சில் '' நான் வருவான்' 'மரமெ பாத்தேன்' 'நாளெய்க்கு வந்தேன்' என்றெல்லாம் பேசமாட்டோம். எனவே பேச்சுத்தமிழுக்கும் இலக்கணம் முழுமையாக உண்டு. எழுத்துத்தமிழிலிருந்து வேறுபடும் இடங்களில்கூட குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில்தான் பேச்சுமொழி மாறி அமைகிறது. எழுத்துத்தமிழ் ' இலை' என்பது பேச்சுத்தமிழில் 'எலெ' என்று மாறுகிறது. அதாவது 'இ' என்பது 'எ' என்று மாறுகிறது. ஆனால் 'இரும்பு' என்பது 'எரும்பு' என்று மாறாது. எழுத்துத்தமிழில் 'இ' அல்லது 'உ' என்று அமைகிற சொற்கள், அவற்றையடுத்து ஒரு மெய்யும் 'அ' அல்லது 'ஐ' வந்தால்தான் 'எ' என்று மாறும். 'இரும்பு' என்பதில் 'இ' -யை அடுத்து ஒரு மெய் வந்தாலும் , அதையடுத்து 'உ' வருவதால் அது, 'எ' என்று மாறுவதில்லை. 'உலகம் என்பது 'ஒலகம்' என்று மாறுகிறது. ஆனால் 'உண்மை' என்பது 'ஒண்மை' என்று மாறாது.
எனவே, பேச்சுத்தமிழுக்கு எழுத்துத்தமிழ் போன்று முழுமையான இலக்கணம் உண்டு. அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள். மற்றவர்கள் அதைப் புரியமுடியாது.
இன்னும் சொல்லப்போனால், பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றுதான். சொற்களின் ஒலியன் அமைப்பில்தான் வேறுபாடு உண்டு. அதனால்தான் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்வியில் படிக்காதவர்கூட, எழுத்துத்தமிழை நாம் வாசிக்கும்போது அதைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களால் எழுத்துத்தமிழில் எழுதமுடியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம், பேச்சுத்தமிழ் குழந்தை பிறந்து வளரும்போது இயற்கையாக 'வளர்கிறது'. ஆனால் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்வியில்தான் குழந்தை 'கற்றுக்கொள்கிறது'.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக