பேச்சுத்தமிழை இயற்கையாக நாம் கற்றுக்கொள்வதால் பிழை, தவறுகள் வராது. ஆனால் எழுத்துத்தமிழை நாம் 5 வயதுக்குப்பிறகுதான் பள்ளிகளில் முறைசார் கல்வியில் பயில்கிறோம். இதனால் ஒரு சிக்கல், மாணவர்களின் எழுத்துத்தமிழில் பேச்சு வழக்கு கலந்துவரும். இதைத் தவிர்ப்பதற்குத் தனியாகவே சில பாடங்கள் இருக்கவேண்டும். அடுத்து, எழுத்துத்தமிழில் முறைசார் இலக்கணத்தை அனைவரும் பயில்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தவறுகள் நேர்வது இயல்பே. ஒரு மருத்துவர் தம் துறையில் மிகச் சிறந்த வல்லுநராக இருக்கலாம். ஆனால் எழுத்துத்தமிழ் இலக்கணத்தை முறைசார் கல்வியில் முழுமையாக அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். . இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். எனவே தமிழ்மொழித்துறை சார்பான மாணவர்கள், ஆசிரியர்களுக்குமட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது?
ஒருவர் தமது எழுத்துக்களில் தவறு இல்லாமல் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார் . . . ஆனால் முறையான இலக்கணத்தைப் பெற அவருக்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற வேளைகளில் கணினி மென்பொருள்கள் உதவலாம். யாரும் தவறாக எழுதவேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். ஆனால் தவறாக எழுதிவிட்டால் மற்றவர்கள் குறைசொல்வார்களே என்று பலர் தமிழில் எழுதாமலேயே இருந்துவிடுவார்கள்.
இதைத் தவிர்க்க ஒரே வழி . . . ஒருவர் தவறாக எழுதினாலும் பல முனைகளில் அதைத் திருத்தித்தரும் தமிழ் மென்பொருள்கள் இருந்தால் போதும். இச்சிக்கலைத் தீர்க்கலாம். இதுவே தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். எனக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் முறையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறு இருக்கலாம் என்று கருதி, ஆங்கில மென்பொருள்களைப் பயன்படுத்தி எனது ஆங்கிலப் பிழைகளைச் சரிசெய்துகொள்கிறேன்.
மேலும் வேறுபட்ட நோக்கங்களைக்கொண்ட வேறுபட்ட ஆங்கில எழுத்துக்களுக்கு . . . கடிதம், கட்டுரை, ஆய்வுக்கட்டுரை என்று . . . பல தரப்பட்ட கருத்தாடல்களுக்கு ஏற்ப ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு இன்று செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் - ChatGPT. Gemini, Meta ai, Claude என்று பல மென்பொருள்கள் கிடைக்கின்றன. நான் தற்போது பல உதவிகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். இதுபோன்று தமிழுக்கும் இருந்தால் . . . ? உறுதியாக, தமிழ் அனைவரின் உரைகளிலும் தவறுகள் இல்லாமல் இடம் பெறும்.
ஆனால் ஒரு எச்சரிக்கை! மேற்கூறிய மென்பொருள்களையே நமக்கு வேண்டியதை எழுதித்தரச் சொல்லக்கூடாது. நாம் முதலில் நமது உரையை நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, பின்னர் அதை மேற்கூறிய மென்பொருள்கள்கொண்டு திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நமக்கு இருக்கிற ஆங்கில அறிவும் மறந்து . மறைந்து விடும்.
சிலர் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர் ''மேற்குறிப்பிட்ட மென்பொருள்கள் கதை எழுதும், கவிதை இயற்றும்''என்று. இந்தக் கருத்து தவறானது. உதவிக்குத்தான் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தவேண்டும். அவற்றையே சார்ந்து இருக்கக்கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக