திரு. இராமசாமி செல்வராஜ்
----------------------------------------------------
இரட்டை வழக்கு மாற்றப்படவேண்டிய ஒன்று என்று இங்கே நீங்கள் கூறுவது சிறுவியப்பை அளிக்கிறது ஐயா. இதற்கு முன்னர் எழுத்துவழக்கில் தான் எழுதவேண்டும், பேச்சுவழக்கில் பேசவேண்டும் என்று நீங்கள் கூறியதாக நினைவு. இது மாற்றமா? இருவழக்கையும் நெருங்கக்கொண்டுவரவேண்டும் என்பதற்கான தேவை என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------
நண்பரே. நான் என் நிலையை மாற்றவில்லை. இன்றைய இரட்டைவழக்குச் சூழலில் எழுத்தில் எழுத்துத்தமிழ், பேச்சில் பேச்சுத்தமிழ்தான் இருக்கவேண்டும். ஆனால் ஒரு நீண்ட கால வரலாற்றில் எவ்வாறு இரட்டை வழக்குச் சூழல் தோன்றியதோ அது போன்று எதிர்கால வரலாற்றில் இந்த இரட்டைவழக்குச் சூழல் மறையும். இன்றைய பொதுப்பேச்சுத்தமிழைத் தனிநபர்கள் உருவாக்கவில்லை. சமூக வளர்ச்சிதான் உருவாக்கியுள்ளது. அதுபோல பண்டித எழுத்துத் தமிழும் இன்று சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் தமிழாக மாறியுள்ளது. தமிழ்மொழியின் இந்த இயங்கியல் வளர்ச்சி எதிர்காலத்தில் இண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும். இந்த இடைவெளிக் குறைப்பைத்தான் " இரட்டைவழக்குச் சூழல் மறைவு" என்று கூறுகிறேன். இதுபற்றித் தனியே ஒருபதிவு இடுகிறேன்.
திரு. இராமசாமி செல்வராஜ்
------------------------------------------------
சிறுகேள்விகளுக்கும் விரிவாக நீங்கள் கருத்துகளை முன்வைத்து விளக்குவது மிகவும் சிறப்பு. போற்றத்தக்கது. எழுதுங்கள் ஐயா, தெரிந்துகொள்கிறோம்.
ஒருவகையில் முந்தைய காலத்து உரைநடையைவிட இப்போது எளிமையாகியிருப்பது உண்மையே. இதன் தொடர்ச்சியாக இன்னும் எளிமையாகும்; அது பேச்சுத்தமிழுக்கு நெருங்கும் எனில் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது மாற்றப்படவேண்டிய ஒன்று என்று சொன்னதால் தான் எனது ஐயத்தை எழுப்பினேன். எல்லோரும் அணுகும்விதத்தில் மொழி எளிமைப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துத்தான். சங்க இலக்கிய காலத்துத்தமிழைப் பலரால் இயல்பாகப்படித்துப் புரிந்துகொள்ள இயலாதுதான். ஆனால், தற்காலத்தமிழ் எளிமையானது தானே. அதைக் கற்று, எழுதி, பழகி, சிறப்பாகக் கையாள முடியவேண்டும் தானே? ஆனால், அதற்கான குறைந்தளவு முயற்சியும் கைக்கொள்ளாமல், இயல்பானது பேச்சுத்தமிழே; செந்தமிழ் எல்லாம் தேவையில்லை என்று மேம்போக்காகக்கூறிச்சென்றுவிடும் சிலருக்காக (அது பலராகவும் இருக்கலாம்), மொழியின் சிறப்பை, அழகை விட்டுக்கொடுக்கவேண்டுமா எனும் ஆதங்கத்தில் எழும் கேள்வி.
எனது அனுபவத்தில் இதைப்போன்றே முன்னர், இலக்கணம், ஒற்றுப்பிழை எல்லாம் முக்கியமில்லை; கருத்துவெளிப்பாடுதான் முக்கியம் என்று சிலர் என்னிடம் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அதை ஏற்க இயலவில்லை. அதுபோன்றே இரட்டைவழக்கு மாறவேண்டும் எனில் அது யாருக்காக, எதற்காக, ஏன், என்று கேள்விகள் எழுகின்றன. காலப்போக்கில் இயல்பாக இதன் வேறுபாடுகள் மறையும் என்றால் அது சரியே. (என் கற்பனைக்கு அது சற்று எட்டாததாய் இருக்கிறது 🙂 ).
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------
நன்றி நண்பரே. உறுதியாக எழுத்துத்தமிழின் அமைப்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. சிலர் எழுத்துத்தமிழே வேண்டாம், பேச்சுத்தமிழையே எழுதுவோம் என்று கூறலாம். அது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதப்பட்ட இலக்கியங்கள், இன்றைய எழுத்துத்தமிழில் உள்ள நூல்களை எதிர்காலத்தில் எவ்வாறு படிக்கமுடியும்? அதுபோன்று பேச்சுத்தமிழைக் கைவிடச்சொல்லி, எழுத்துத்தமிழையே அனைவரும் நடைமுறை உரையாடல்களுக்கும் பயன்படுத்தவேண்டும் என்று கூறுவதும் போகாத ஊருக்கு வழிகூறுவதுபோலவே அமையும். எனவே, இந்த இரட்டைவழக்குப் பிரச்சினையைச் சற்றுக் குறைக்கச் சில திட்டமிட்ட மொழிவளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளலாம். அவ்வளவுதான். நான் முன்பேகூறியதுபோல, எதிர்காலச் சமுதாய வளர்ச்சியில் இந்த இரட்டைநிலை வழக்கு இல்லாமல் போகலாம். ஆனால் அது எப்போது நடைபெறும், எப்படி நடைபெறும் என்பதுபற்றியெல்லாம் இப்போது ஒன்றும் நாம் கூறமுடியாது.
வங்காளமொழியில் ஒரு கட்டத்தில் இரட்டைவழக்குச் சூழல் நிலவியதாகவும் (சாது பாஷா, சலித் பாஷா) , பின்னர் தாகூர் காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் அதில் இரட்டைவழக்குச் சூழல் மாறியதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று, தெலுங்கிலும் இரட்டைவழக்குச் சூழல் தோன்றி நீடிப்பது தடுக்கப்பட்டது என்று பேராசிரியர் பி. எச். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். கன்னடத்திலும் உயர்வழக்கு என்பது பிராமணியச் சமுதாயத்தின் வழக்காக இருந்ததாகவும் பேச்சுவழக்கு மற்றவர்களின் வழக்காக இருந்ததாகவும், பின்னர் இந்த நிலை மாறிவிட்டது என்றும் பேரா. எச்.எம். நாயக் கூறியுள்ளார்.
இரட்டைவழக்குச் சூழலால் சில பாதிப்புகள் உண்டுதான். முறைசார்ப் பள்ளிக்கல்வி பெறாதவர்கள் எழுத்துத்தமிழைப் படிக்கவோ, அதில் எழுதவோ முடியவில்லை என்பது ஒரு பிரச்சினை. இதனால் முதியோர் கல்வியில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கின்றனர். அதுபோன்று தமிழ்க் குழந்தைகள் பிறந்து வளரும்போது இயற்கையாகப் பேச்சுத்தமிழைப் ''பெற்றுக்கொள்கின்றனர்''. ஆனால் பள்ளிக்குச் செல்லும்போது பாடங்கள் எழுத்துத்தமிழில் இருப்பதால், அதை ஒரு பிறமொழிபோன்று படிக்கிறார்கள். இருப்பினும் 10,12 ஆண்டுகள் படித்தபிறகும் எழுத்துத்தமிழில் தவறு இல்லாமல் எழுதமுடியவில்லை. அதுபோன்று தமிழைக் கற்றுக்கொள்ள வருகிற பிறமொழிக்காரர்கள் இரண்டு வழக்குகளையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஒரு வழக்கைமட்டும் கற்றுக்கொண்டு, மற்றொரு வழக்கையும் கையாளுவதில் சிக்கல் உண்டு. இந்தச் சிக்கல்களை எல்லாம் ஆய்ந்து, அவற்றின் பாதிப்பைக் குறைப்பதற்கான மொழிவளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
முதலில் மாற வேண்டியது . . . இரண்டுவழக்குகள்பற்றிய மக்களின் சமூகநோக்கு. காலையிலிருந்து இரவு வரை பேசுகிற பேச்சுத்தமிழைக் கொச்சைத்தமிழ் என்றும் எழுத்துத்தமிழே உயர்தமிழ் என்றும் கருதுகிற மனப்பாங்கு அகலவேண்டும். இரண்டுமே தமிழ்தான், சரியான தமிழ்தான் என்ற கருத்து ஓங்கவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக