வியாழன், 13 அக்டோபர், 2022

எனது மொழிக்கொள்கை (2)

 

எனது மொழிக்கொள்கை (2)

-----------------------------------------------------------------------------------------------------------------------

மொழிக்கொள்கைபற்றிய எனது முகநூல் பதிவையொட்டி நண்பர் திரு. மாலன் அவர்கள் அனைவருக்கும் எழக்கூடிய ஐயங்களைக் கேட்டுள்ளார்கள்.

 ஐயம்: 1. // இன்னொரு இந்திய மொழி பேசும் சக இந்தியரோடு உரையாட, உறவாட, வணிகம் செய்வதற்கான தொடர்பு மொழி எது? //

 பதில்: எனது மொழிக்கொள்கையில் நான் தெளிவாக முன்வைத்திருப்பது : தமிழகத்தில் . . . தமிழர்கள் . . . தங்களது அனைத்துப் பணிகளையும் தங்களது தாய்மொழியாகிய தமிழில்தான் மேற்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.

 ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி - இந்த மூன்று தகுதிகளையும் ஒரு இனத்தின் தாய்மொழி பெறவேண்டுமா கூடாதா என்பதுதான் இங்கு அடிப்படையாகப் பேசப்படுகிறது.

 ஆட்சிமொழி . . . இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப்பணிகளில் தமிழர்கள் இந்திய ஒன்றிய அரசோடு தமிழிலேயே தொடர்புகொள்ளும் உரிமை வேண்டும். அதற்குத் தேவை - தமிழும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். ''ஆட்சிமொழி'' அதாவது அரசாங்கப் பணிகளுக்கான மொழி!

 பயிற்றுமொழி . . . தமிழகத்துக் கல்விக்கூடங்களில் மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த அறிவைத் தாய்மொழிவழியே பெறும் நிலைமை ஏற்படவேண்டும். தமிழகத்துக் கல்விநிறுவனங்களில் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும்.

 பொருளாதார உற்பத்தி , வணிகம் ஆகியவற்றிற்கான மொழி . . . தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்களது வணிகம் உட்பட பிற பொருளாதார நிறுவனங்கள், நிலையங்களில் தமிழ்வாயிலாகத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை வேண்டாமா? இங்கு விற்கப்படும் பொருள்களைப்பற்றித் தமிழிலே தெரிந்துகொள்ளும் உரிமை வேண்டாமா?

ஒரு இனம் தனக்குத் தொடர்புள்ள ஆட்சிப்பணிகளைத் தன் தாய்மொழிவழியாக மேற்கொள்ள உரிமை இல்லாத ஒரு இனமாக நீடிக்கவேண்டுமா?

ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்களது தாய்மொழிவழியாக அறிவுத்துறைகளில் பயிற்சிபெற உரிமை வேண்டாமா?

இவற்றை உள்ளடக்கியதுதான் நான் முன்வைத்துள்ள மொழிக்கொள்கை!

ஆனால் வணிகம், அரசியல் தொடர்புகாரணமாக, பிறமொழி பேசுபவர்களிடமும் உரையாடல் செய்யவேண்டியிருக்குமே! அப்போது என்ன செய்வது?

 இதுதான் நண்பர் மாலன் அவர்களின் ஐயம்!

இங்குச் ''சக இந்தியர்'' என்றால் யார் ? 20 மொழிகளுக்குமேல் பேசக்கூடிய ''இந்திய ஒன்றியத்தில்'' இந்தச் ''சக இந்தியர்களின்'' - அதாவது தமிழரைத்தவிர - தாய்மொழிகள் ஒன்று இல்லை! பல. அதில் ஒன்று இந்திமொழி. தமிழர்கள் தெலுங்கர்களோடு உறவாட, வணிகம் செய்யத் தேவையானது தெலுங்குதான்.

ஆனால் இந்தத் ''தமிழர்'' தெலுங்கரோடு மட்டும் அல்லாமல், கன்னடர்கள், மலையாளிகள், வங்காளிகள் , இந்திமொழி பேசுகிறவர்கள் என்று பலமொழி பேசுகிறவர்களோடு ''உறவாடத்'' தேவை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, தெலுங்குமட்டும் போதாதே. அப்போது என்ன செய்வது? ஏதாவது ஒரு மொழியைப் பொதுமொழியாகக்கொண்டால் நல்லதுதானே என்ற எண்ணம் உருவாகுவது இயற்கைதான்! அந்த இணைப்புமொழியாக இந்தியோ ஆங்கிலமோ இருக்கலாம் அல்லவா? இதுதான் நண்பர் மாலன் அவர்கள் முன்வைக்கிற ஐயம்!

என்னைப்பொறுத்தவரை இந்த ஐயம் ஒரு தேவையான ஐயம் என்றாலும் கல்வித்துறை, ஆட்சித்துறை, தமிழக உள்மாநில பொருளாதாரத்துறை ஆகியவற்றிற்கு வெளியே உள்ள தனிநபர் வணிகத்துறை, பொருளாதாரத்துறை தொடர்பான ஐயம் இது!

இந்தப் பிற மாநிலங்களோடு ஏற்படும் வணிகத் தொடர்புக்காக, எந்த மொழி தேவையோ அந்த மொழியைத் தேவைப்படுகிறவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இதற்காக அனைத்து தமிழர்களையும் தாய்மொழி அல்லாத பிற இனத்தின் - அந்நிய இனத்தின் மொழியைப் படிக்க ஏன் கட்டாயப்படுத்தவேண்டும்?

பிற மொழி தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும்! அதைத் தடுக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை! நான் முன்வைப்பதெல்லாம் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான . . . அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டிய வேண்டிய மொழிக்கொள்கை!

ஐயம் 2: //ஆங்கிலமும் இந்தியும் அயல் மொழி, தேவையான அயல் மொழிகளைக் கற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிறீர்கள். மெத்தசரி. அது இந்திக்கும் பொருந்தும்தானே? விரும்புவோர் அதனைப் படிக்க அரசுக் கல்வி நிறுவனங்கள் உட்பட வாய்ப்பும் வசதியும் செய்து தரப்பட வேண்டும்தானே?//

பதில் : நான் இதில் தெளிவாக இருக்கிறேன். பிற மொழிகள் தேவைப்படுகிறவர்கள் தமிழகத்தில் அதைக் கற்றுக்கொள்வதற்கு . . . விருப்பத்தின் அடிப்படையில் . . . தேவையானவற்றை அளிப்பதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை! ஆனால் அதைக் கட்டாயமாக்கக்கூடாது! விருப்பப்பாடமாக வையுங்கள்! தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்ளட்டும்!

ஐயம் 3 : //"பஞ்ச பூதத்தின் செயல்கள் அவை சார்ந்த தொழில்நுட்பங்கள் மூத்த வளருது மேற்கே. அவை குறித்த தகவல்கள் தமிழ் மொழியில் குறைவு. தமிழ் மட்டுமே அறிந்தோர் தங்களை இற்றைப்படுத்திக் கொள்ள யாது செய்தல் வேண்டும்?"//

பிறநாடுகளில் - பிறமொழிகள் பேசும் நாடுகளில் - வளர்கின்ற அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தமிழிலிலேயே தமிழர்கள் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசும் அளிக்கவேண்டும்.

நண்பர் மாலன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் 2, 3 -க்காகத் தமிழக மக்கள்மீது இந்தியையோ அல்லது ஆங்கிலத்தையோ சட்டங்களின்வாயிலாகத் திணிப்பது. . . கட்டாயமாக்குவதைத்தான் நான் எதிர்க்கிறேன்!

 எனது முக்கியக் கோரிக்கைகள் . . .

பலமொழிகள் பேசும் பல மாநிலங்களின் ஒன்றிய அரசாக இருக்கும் இந்திய அரசு . . . தனது அரசியல் சட்டத்தில் . . .

ஒரு மொழியைமட்டும் . . .

இந்திமொழியைமட்டும் . . .

ஆட்சிமொழியாகத் தக்கவைப்பது சரி இல்லை!

இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள அத்தனை இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாகச் சட்டத்தில் இடம்பெறவேண்டும்! இந்திய ஒன்றியமானது இந்திமொழி பேசும் இனத்தின் அரசு மட்டும் இல்லையே!

எனவே, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பொருளாதார - வணிக மொழி என்ற மூன்று தகுதிகளையும் தமிழுக்குச் சட்டத்தின்வழியே அளிக்கப்படவேண்டும்!

ஒரு இனத்தின்மீது பிற இனங்களின் மொழிகளையோ பண்பாடுகளையோ அரசியல் சட்டங்களின் வழி திணிக்கக்கூடாது!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India