"மூலமொழி'' ''மூல இனம்'' கோட்பாடுகள்பற்றி எனது கருத்துக்கள். . .
----------------------------------------------------------------------
''மூலமொழி (Proto-language) '' என்ற கோட்பாடு , மொழிகளில் நிலவும் ஒற்றுமைக்கூறுகளை - குறிப்பாக, ஒலியியல் (phonetic) , ஒலியனியல் (Phonemic) கூறுகளை - ஒன்று திரட்டி, அவற்றிலிருந்து ''மூலச் சொற்களை (Proto-forms) '' அமைத்துக்காட்டும் ஒரு ஆய்வுமுறை. இதன் முடிவுகள் கருதுகோள்களாகத்தான் (Hypothesis) இருக்கமுடியும். தொல்வரலாறு (Archeology, Ancient History) , மானிடவியல் (Anthropology) போன்ற பிற துறை கண்டுபிடிப்புக்களும் நமக்குத் தேவை.
இல்லையென்றால், ''மூல மொழிகள்'' ஆய்வை . . . ''மூல இனங்கள் ("Primitive Races") '' என்ற நிலைக்கு எடுத்துச்சென்று , சமுதாயப் போராட்டங்களில் சரியான ஒரு நிலைபாடு எடுப்பதில் குழப்பத்தைத்தான் உருவாக்கும். உண்மையான தேசிய இனங்கள் (Nationalities) இன அடிப்படையில் தங்களை ஒன்றுபடுத்திக்கொள்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்தும். இதைத்தான் நான் கூற வருகிறேன்.
''தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தின்'' இன்றைய பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம்!
''மூலமொழி '' என்ற ஒப்பீட்டுமொழியியலே (Comparative Linguistics) வேண்டாம் என்று நான் கூறவரவில்லை! ஒப்பீட்டுமொழியியல், வரலாற்றுமொழியியல் (Historical Linguistics) , மானிடவியல்மொழியியல் ( Anthropological Linguistics) போன்ற பல துறை அறிவுகளும் இணைந்துசெயல்படவேண்டும்.
''மூலமொழி'' கோட்பாடும் ''மூல இனம்'' கோட்பாடும் ஆய்வுக்கு உரியவை என்பதே எனது கருத்து.
----------------------------------------------------------------------------------------------
"மூலமொழி'' ''மொழிக்குடும்பம்''பற்றிய ஆய்வுகள், அவற்றின் கருதுகோள்கள் ஆகியவற்றையும் . . . இன்றைய தேவையான தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் நான் வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கிறேன். முதல் ஆய்வுகள் . . . மொழிகள்பற்றிய ஒப்பீட்டுமொழியியல் கருதுகோள்கள்! அவை கருதுகோள் தகுதியிலிருந்து புறவய உண்மைகளாக எதிர்காலத்தில் மாறலாம்! இரண்டாவதான தேசிய இனத்தின் போராட்டம் என்பது இன்றைக்குத் தேவையான அரசியல் தளச் செயற்பாடுகள்! தேசிய இனங்களின் தன்னுரிமைகளுக்கான போராட்டங்கள்! இரண்டையும் இணைத்து நாம் குழம்பிவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
-----------------------------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக