''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!
-------------------------------------------------------------------
தமிழகத்தில் நீடிக்கிற இரண்டு முதன்மையான ''மூடநம்பிக்கைகள்'' !
மேற்கூறிய இரண்டின் ''தகுதிகளும்'' சட்டங்களால் கொடுக்கப்படவில்லை! திணிக்கப்படவில்லை!
பிறப்பு, இறப்பு, திருமணம், பெண்குழந்தைகளின் பருவ முதிர்ச்சி, புதுமனைபுகுவிழா, 60 அகவை நிறைவுவிழா , குடமுழுக்குவிழா . . . இவ்வாறு எந்தவொரு ''விழாவாகவும்'' இருந்தாலும் , "கடவுள்களோடு'' தொடர்பு ஏற்படுத்த . . . வடமொழி (வேதங்கள்) தேவை! மேலும் அவற்றை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர , வேறு எவருக்கும் ''உரிமை'' கிடையாது!
அதுபோன்று, பள்ளிகளில், கல்லூரிகளில், உயர் ஆய்வில் . . . ''அறிவைப்'' பெறுவதற்கு ஆங்கிலமே தேவை என்ற ஒரு நிலை!
மேற்கூறிய ''தகுதிகளை'' வடமொழிக்கும் ஆங்கிலத்திற்கும் அளிப்பதில் மக்களுக்கே பங்கு மிகுதி!
இந்திமொழி ''ஆட்சிமொழியாக'' திணிக்கப்படுவதை எதிர்த்து, அதைத் திணிக்கிற ''ஆட்சியாளர்களை'' எதிர்த்துப்போராடவேண்டியுள்ளது!
ஆனால் மேற்கூறப்பட்ட வடமொழி, ஆங்கிலமொழி இரண்டையும் நம்மீது நாமேதான் திணித்துக் கொள்கிறோம்! மொழிபற்றிய மிகப்பெரிய மூடநம்பிக்கையே இதற்கு அடிப்படை! சமுதாய அமைப்பும் சூழலும் இதற்கு அடிப்படை என்பதையும் நான் மறுக்கவில்லை!
ஆனால் இதற்கான போராட்டம் . . . யாருக்கு எதிரான, யாருடைய போராட்டம்? நமக்கு எதிராக நாமே போராடவேண்டிய போராட்டம்!
-----------------------------------------------------------------------------------------------
என்னைப் பொறுத்தவரையில் . . . இன்றைய தமிழ்மொழியானது இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான தகுதிபெற்ற மொழியாகவே நிலவுகிறது. அதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை!
ஆனால் அதன் செயல்பாடுகளைக் குறைக்கும்வகையில் ஆங்கில மேலாண்மையும் வடமொழி உட்பட பிறமொழிகளின் மேலாண்மையும் நீடிக்கின்றன. இது புறச்சூழல் சார்ந்த ஒரு சிக்கலாகும். இதன் விளைவாகப் பிறமொழிச்சொற்களின் மேலாண்மை தமிழ்மொழியில் நீடிக்கிறது. இச்சிக்கலைத் தீர்ப்பதில் தமிழர்களின் தாய்மொழி உணர்வும் தேவை; ஆட்சியாளர்களின் திட்டமிட்ட மொழிமேம்பாட்டுத் திட்டங்களும் தேவை; மொழிபற்றி அறிவியல் அடிப்படையான கருத்துக்களும் தேவை.
எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தத் தேவையான இலக்கண வளமும் சொல்வளமும் தமிழில் நன்றாகவே இருக்கின்றன. சொற்களஞ்சியம் மேலும் திட்டமிட்டு வளர்க்கப்படவேண்டும். தமிழ்மொழிமீது வடமொழித் தாக்கம் எனபது பல நூற்றாண்டு வரலாறு உடையது; அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற காரணிகளால் ஏற்பட்டவை இவை; ஆங்கிலத்தாக்கம், ஏனைய பிறமொழிகளின் தாக்கம் ஆகியவை கடந்த சில நூற்றாண்டுகளில் அந்நியர் படையெடுப்புக்கள், ஆட்சிகளால் ஏற்பட்டவையேயாகும்.
இவை எல்லாவற்றையும் அகற்றி, தமிழ்மொழி தனக்கே உள்ள வளர்ச்சித்தடத்தில் இயங்க . . . முன்னேறிச் செல்ல (1) மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தாய்மொழி, தன் இனமொழி என்ற உணர்வு தேவை. (2) புறத்திலும் மொழிக்குள்ளும் தமிழ்மீது நிலவுகிற அரசியல் மேலாண்மை, மொழி மேலாண்மை இரண்டும் அகற்றப்படவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக