சனி, 15 அக்டோபர், 2022

எனது மொழிக்கொள்கை (4)

 

எனது மொழிக்கொள்கை (4)

--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமே ஆட்சிமொழித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது !

தமிழ் உட்பட பிற இந்தியமொழிகளுக்கு அரசியல் சட்டத்தில் அந்தத் தகுதி கொடுக்கப்படவில்லை!

ஏன்?

இதுதான் இன்றைய அடிப்படை வினா!

இந்திய ஒன்றிய அரசில் மாற்றி மாற்றி அமர்கிற பேராயக்கட்சியும் பா ஜ கட்சியும் இதற்கு விடை தரவேண்டும்!

அதற்கு என்ன தடை என்பதை விளக்கவேண்டும்!

அதை விட்டுவிட்டு . . .

'' மாநிலங்களை மூன்றாக வகைப்படுத்தியுள்ளோம்! அதன்படி, இந்தியைமட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் ஒரு வகை!

அவ்வாறு முழுமையாகக்கொள்ளாமல், 30 விழுக்காடு மக்கள்மட்டுமே இந்தியைப் பயன்படுத்துகிற மாநிலங்கள் இரண்டாவது வகை!

 இந்திமொழியே பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மூன்றாவது வகை!''

'' இந்த மூன்றாவது வகைப்பட்ட மாநிலங்கள் தங்கள் தாய்மொழிகளிலேயே கல்வியை மேற்கொள்ளலாம். அதற்கு எவ்விதத்தடையும் கிடையாது! இந்தி மொழியைப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை!''

இவ்வாறு இன்று அனைத்துமொழிகளுக்கும் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்ற மையமான கோரிக்கை பின்தள்ளப்பட்டு . . . மறைக்கப்பட்டு . . . மறக்கடிக்கப்பட்டு ..

கல்விக்கூடங்களில் இந்தித் திணிப்பு உண்டா இல்லையா என்பதுபற்றிய பேச்சாக . . . மொழிச்சிக்கல் இன்று திசை திருப்பப்படுகிறது!

 இது சரி இல்லை! அடிப்படைச் சிக்கலை மறைக்காதீர்கள்!

தமிழகத்தில் கல்விக்கூடங்களில் ஆங்கிலமா அல்லது இந்திமொழியா என்ற வாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இதுவும் தவறு!

தமிழகத்துக் கல்விக்கூடங்களில் தாய்மொழியாகிய தமிழா அல்லது . . .

ஆங்கிலம், இந்தி போன்ற அந்நியமொழிகளா என்ற வினாவைநோக்கிப் பேச்சு திரும்பவேண்டும்!

எனவே இந்திய ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமல்லாமல், அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்பதில்தான் முழுக்கவனமும் செலுத்தப்படவேண்டும்!

அந்தத் தகுதி தமிழுக்குக் கிடைத்துவிட்டாலே . . . கல்விக்கூடங்களில் தமிழ்மொழி முழுமையான மேலாண்மையைப் பெற்றுவிடும்!

இந்திமொழி இன்று பெறுகிற அத்தனை வசதிகளையும் தமிழ்மொழி பெற்றுவிடும்!

ஒரு சிக்கலில் பல உள் சிக்கல்கள் இருக்கலாம்! அவற்றில் ஒரு சிக்கலே அடிப்படையாக இருக்கும். அதனால்தான் மற்ற உள் சிக்கல்கள் நீடிக்கும். அந்த அடிப்படைச் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டால், ஏனைய சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிடும்!

இங்கு இந்திமொழி தவிர பிறமொழிகளுக்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படாததே அடிப்படைச் சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டால், ஏனைய சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடும்!

அது தீர்க்கப்படாதவரை . . . பிற உள் சிக்கல்கள் தீராது!


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India