ஞாயிறு, 16 அக்டோபர், 2022

எனது மொழிக்கொள்கை (6)

 எனது மொழிக்கொள்கை (6)

------------------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன் அவர்கள் இந்திமொழிக்குமட்டுமே இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள்ப்பற்றிச் சில விளக்கங்களை அளித்துள்ளார். நான் புரிந்துகொண்டவரையில், பின்வரும் கருத்துக்களே அவர் கூறுகிறார் என நினைக்கிறேன். எனது புரிதலில் தவறு இருக்கலாம்.
(1) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிரான மக்களின் விடுதலைப் போராட்டங்களில் இந்திமொழி பேசும் பகுதிகளே முன்னணி வகித்தன.
(2) மேலும் ஆங்கிலம் படிக்க வாய்ப்புக்கிடைத்த தலைவர்களே விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கினார்கள்.
(3) ஆங்கிலேய மேலாண்மை முடிவுக்கு வந்து, இந்திய ஒன்றிய அரசு அமைக்கப்படும்போது, இந்திமொழி பேசாத மாநிலங்களின் விடுதலைப் போராட்டங்களை மேற்கொண்டவர்கள்கூட - இராஜாஜி போன்றவர்கள்கூட - இந்தியாவுக்கும் பொது மொழி ஒன்று வேண்டும்; அது இந்தியாகவே இருக்கலாம்; அப்படி ஒரு பொதுமொழி இல்லையென்றால் இந்தியா என்பது மேலும் பல பிரிவினைகளுக்கு உட்பட்டுவிடும் என்று மறைந்த அண்ணல் அம்பேத்கார்கூட கருதினார்;
மேற்கூறிய காரணிகள் எல்லாம் செயல்பட்டு, இந்திமொழியைப் பொதுமொழியாகக்கொண்டு, அதற்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டது என்று திரு. மாலன் அவர்கள் கூறுகிறார். அவரது வாதம் ... ''அன்றைய அரசியல் சூழல்'' காரணமாக அவ்வாறு நடைபெற்றது!
(4) அதுபோன்று இந்திமொழிமட்டுமே ஆட்சிமொழி என்பதில் பேராயக் கட்சிக்கும் பா ஜ கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது; ஆனால் அதைச் செயல்படுத்தும் அணுகுமுறையில் வேறுபாடு உள்ளது; இன்றைய பா ஜ கட்சி அரசாங்கம் இந்திபேசாத மாநிலங்களில் அந்த மாநிலங்களின் மொழிகளின் முழுமையான பயன்பாட்டுக்கு - கல்விக்கொள்கை உட்பட - உதவி செய்கிறது என்பதும் அவரது கருத்து.
எனது கருத்துக்கள் . . . இந்தி பேசும் மாநிலங்களில் அன்றைய ''விடுதலைப் போராட்டத்தில்'' ஈடுபட்ட அன்றைய பேராயக் கட்சியின் ''தலைவர்கள்'' இரண்டு முதன்மையான காரணங்களுக்காகவே ஈடுபட்டார்கள்:
(1) ஆங்கிலேய அரசிடம் இங்குள்ள மேல்வர்க்கத்தினரும் படித்த இடைத்தட்டுவர்க்கத்தினரும் பலவகை சலுகைகளைப் பெறுவதற்கான ''மனு போடும்'' அமைப்பாகவே பேராயக்கட்சியை நடத்திச் சென்றனர். இவர்களே அன்றைய ''பேராயக் கட்சியின் மிதவாதிகள்'' - கோகலே போன்றவர்கள்!
(2) முகலாயப் பேரரசர்களால் ''இந்து மதம்'' பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் , அந்தப் ''பாதிப்பிலிருந்து'' இந்துமதம் மீண்டுவந்து, மீண்டும் இங்கு ''இந்துமத அரசு'' நிறுவப்படவேண்டும். அதற்குத் தேவையிருந்தால் , அந்நிய ஆங்கில அரசு அகற்றப்படவேண்டும். பாலகங்காதார திலகர் போன்றவர்கள் ((''பேராயத் தீவிரவாதிகள்'') இதில் உறுதியாக ஒரு கட்டும்வரை இருந்தனர்.
(3) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிராக - உண்மையான விடுதலைப்போராட்டங்களுக்காக - பல முனைகளில் மக்கள் முன்னுக்கு வரும்போதெல்லாம், மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினர்களும் அதை வளரவிடாமல் தவிர்த்தனர்; தடுத்தனர்.
(4) அதேவேளையில் தமிழகத்தைச் சேர்ந்த வ உ சி போன்றவர்கள் அரசியல் பொருளாதார அடிப்படையில் ஆங்கிலேய மேலாண்மையை எதிர்த்துப்போராட முன்வந்தனர். ஆனால் அவர்களைப் பேராயக்கட்சியே ஆங்கிலேய அரசின் உதவியுடன் ''செயலற்றவர்களாக'' ஆக்கினர். வ உ சி, பாரதி போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
(5) முதல், இரண்டாவது உலகப் போர்களினால் உலக அளவில் ஏகாதிபத்திய அரசுகள் காலனி நாடுகளில் தங்களுது பொருளாதார மேலாண்மையைத் தக்கவைக்க ... புதிய ''வழிமுறைகளை'' முன்வைத்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் ஆங்கிலேய அரசும் பேராயக் கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்து, ''1947 - அரசியல் மாற்றத்தை'' ஏற்படுத்தினர்.
இதுதான் உண்மையான வரலாறு!
பேராயக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் இந்திமொழி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தததாலும், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததாலும் ...
பிற இனங்களின் நலன்களையோ, மொழிகளையோ மதிக்காதவர்களாக இருந்ததாலும் . . .
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழியைமட்டுமே ஆட்சிமொழியாக ஆக்கினார்கள். இந்தி முதல் மொழி ... ஆங்கிலம் இரண்டாவது மொழி. இதுதான் அன்றைய நிலைபாடு!
எனவேதான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான முரண்பாடாக . . . மொழிக்கொள்கையில் இந்திமொழியா ஆங்கிலமா என்பதே முன்வைக்கப்படுகிறது.
இவையெல்லாம் 70 ஆண்டுகளுக்குமுன் நிலவிய ''மொழி அரசியல்''!
அந்த ''வரலாறு எல்லாம்'' ஒருபுறம் இருக்கட்டும்!
இன்று இந்திமொழிக்குமட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ''ஆட்சிமொழித் தகுதி'' தமிழ்போன்ற பிற மொழிகளுக்கும் கொடுப்பதற்கான தடைகள் என்ன?
அன்று ''தவறுகள்'' நடைபெற்றதால், அவை இன்றும் நீடிக்கவேண்டும் என்ற தேவை இல்லையே!
இந்திமொழி பேசும் மக்கள் தங்கள் தாய்மொழியை வளர்ப்பதற்காக ஆங்கிலத்தை அகற்ற முயல்வது உண்மையில் வரவேற்கத் தக்கது!
ஆனால் அதேவேளையில் தமிழ்நாடு போன்ற பிறமொழி மாநில மக்கள் தங்கள் மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி கேட்பதில் என்ன தவறு?
அதற்கு என்ன தடை?
எந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன?
எந்தக் கட்சிகள் ஆதரிக்கின்றன?
இதற்குத் தெளிவான விடைகளை அரசியல் கட்சிகள் அளிக்கவேண்டும்!
வடமாநில மக்கள் ''இந்திமொழியா ஆங்கிலமா'' என்ற வினாவுக்கு . . . ''இந்திமொழியே ... எங்களது தாய்மொழியே'' என்று கூறும்போது . . .
நாமும் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் , தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அரசியல் சட்டத்தில் இணைக்கவேண்டும்; இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை வாய்ப்புக்களும் தமிழுக்கும் அளிக்கப்படவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு?
பிற இனங்கள் தங்கள் மாநிலங்களில் தங்கள் தாய்மொழிகளை ''வளர்க்க'' உதவிசெய்கிறோம்'' என்று கூறுகிற இந்திய ஒன்றிய அரசு . . . முதலில் இந்த மொழிகளுக்கு ''ஆட்சிமொழித்தகுதி'' அளிப்பதில் என்ன சிக்கல்?
அதைவிட்டுவிட்டு, ''புதிய கல்விக்கொள்கையில்'' மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல '' செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்'' அமைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்றுவேலைதானே!
தமிழ்மொழி உட்பட அனைத்து இந்திமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, மற்றவைபற்றி யாரும் பேசலாம்!
அவ்வாறு ஆகிவிட்டாலே, மற்ற எல்லா மொழிச்சிக்கல்களும் தீர்ந்துவிடும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India