மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (1)
---------------------------------------------------------------------
முகநூல் பதிவுகளில் தற்போது மொழிபற்றிய பதிவுகள் மிக அதிகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. வரவேற்கவேண்டிய ஒரு வளர்ச்சி இது. இந்த வளர்ச்சியை அடுத்த உயர்கட்டத்திற்குக் கொண்டுசெல்ல . . .
1) மொழியைக் கற்பித்தல் (முதல், இரண்டாம், மூன்றாம் மொழி கற்றல் & மொழித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மொழி கற்பித்தல்)
2) மொழியைக் கற்றல்
3) மொழிப் பயன்படுத்தம்
4) ஆட்சிமொழி, பயிற்றுமொழி , மொழி வளர்ச்சித்திட்டம் போன்ற மொழிக்கொள்கை தொடர்பான ஆய்வு
5) குறிப்பிட்ட மொழியின் இலக்கணத்தைக் கற்பித்தல்
6) குறிப்பிட்ட மொழியின் இலக்கண ஆய்வு
7) குறிப்பிட்ட மொழியின் சொல்லாக்க விதிகள்
8)குறிப்பிட்ட மொழியின் வேர்ச்சொல் ஆய்வு
9) குறிப்பிட்ட மொழியின் வரலாற்று இலக்கண ஆய்வு
10) மொழிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவுகள்
11) மொழிக்கும் மனித மூளை, மனம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகள்
12) மொழிபெயர்ப்புத் துறை
13) அகராதியியல் துறை
14) கணினிமொழியியல்
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் மொழியியல் துறை அறிவு மிகவும் பயன்படும். இதனால் மொழிகளின் உலகப்பொதுமை தெரியவரும். மொழியியல் துறைகளிலும் பல பிரிவுகள் உள்ளன. (1) கோட்பாட்டு மொழியியல், (2) செயற்படுத்த மொழியியல், (3) மொழிக்கும் பிற துறைகளுக்கும் இடையில் உள்ள உறவுகள் என்று அவை அமையும்.
ஒருவர் மேற்கண்ட எல்லாப் பிரிவுகளிலும் முழுமையான அறிவு பெறுவது என்பது கடினம். ஏனென்றால் மொழித்துறை என்பது ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது.
இருப்பினும் மொழி ஆய்வின் எந்தப் பிரிவில் ஒருவர் ஈடுபட்டாலும், தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதி பற்றிய அறிவு உறுதியாகத் தேவை. இந்த அறிவு இல்லாமல் ஒருவர் மொழி ஆய்வுத்துறையிலோ அல்லது மொழி பயிற்றல் துறையிலோ பணிசெய்யமுடியாது. அதுபோன்று மொழியியல் துறையின் மாணவரோ ஆசிரியரோ தம் தாய்மொழியின் இலக்கணம், அகராதித் துறையில் அடிப்படை அறிவு இல்லாமல் மொழியியல் ஆய்வில் ஈடுபடமுடியாது.
இவற்றையெல்லாம் நான் இங்குப் பதிவிடுவதற்கான காரணம் . . . மொழிபற்றிய பதிவுகளை இடுபவர்கள் முதலில் தெளிவாகத் தாங்கள் எந்தப் பிரிவுபற்றிப் பதிவிடுகிறோம் என்பதில் தங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்; மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்தவேண்டும். தாங்களும் குழம்பிக்கொண்டு, மற்றவர்களையும் குழப்பிவிடக்கூடாது. ஒவ்வொரு அறிவியலும் தனக்குள் தற்போது பல்வேறு நுட்பப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. அதுபோன்றே மொழி அறிவியலும் ஆகும். எனவே தமிழ்மொழி ஆய்வில் இந்தத் தெளிவோடு எந்தவொருப் பதிவும் முகநூலில் அமைந்தால் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது எனது கருத்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக