நண்பர் திரு. மாலன் அவர்கள்
--------------------------------------------------------------------------
' தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ள கால கட்டம் இது' எங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது? தமிழ் நாட்டிற்கு வெளியே எங்காவது தேசிய இனம் பற்றிய விவாதங்கள், முழக்கங்கள், செயல்பாடுகள், உண்டா? திராவிடம் என்பது ஓர் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல். கால்டுவெல் உட்பட அந்த அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஒரு வாக்கு வங்கியைக் கட்டமைக்க அரசியல்வாதிகள் உருவாக்கிய கருத்தியல் இது. இன்று நேற்றல்ல, இந்தியா முழுவதிலும் ஒரே விதமான விழுமியங்கள், பண்பாடுக்க் கூறுகள்தான் இருந்தன. சங்க இலக்கியங்கள் சாட்சி.
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
இந்திய நாட்டில் தேசிய இனப் பிரச்சினையே இல்லை என்று தாங்கள் கருதுவது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று கூறுவதுபோல் இருக்கிறது.
பிரிவினையைக் கேட்பதுதான் தேசிய இனப்பிரச்சினை என்று தாங்கள் கருதுவதுபோல் இருக்கிறது. அவ்வாறு கிடையாது. தேசிய இனப்பிரச்சினை பல்வேறு வகைகளில் வெளிப்படும். மொழி உரிமைப் போராட்டம், நீர்ப்பங்கீடு போராட்டம், மாநிலங்கள் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரும் போராட்டம், முதன்மையாக ஒரு மொழி இருக்கிற மாநிலத்தில் பிற மொழிக்காரர்களை எதிர்க்கும் போராட்டம், தங்களுக்குச் சிறப்புத்தகுதி வேண்டும் என்று ஒரு மாநிலத்தின் மக்கள் தொடுக்கும் போராட்டம் என்று பல வகைகளில் தேசிய இனப்பிரச்சினை வெளிப்படும்.
மேலும் இந்தியக் குடியரசு பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு நாடு என்பது வரலாற்று உண்மை. இவ்வாறு கூறுவது ''பிரிவினைவாதம்'' என்று நினைப்பது தவறு. எனவே ''பிரிவினை'' கேட்கப்படுகிற நாடுகளில்தான் ''தேசிய இனங்கள்'' உண்டு என்று நினைப்பது தவறு.
தமிழ்த் தேசிய இனம் என்பதையும் ''திராவிடம்'' என்பதையும் போட்டுக் குழப்பவேண்டாம். முந்தையது ஒரு வரலாற்று விளைபொருள். உலகில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்காலகட்டத்தில் தோன்றும் ஒரு வரலாற்று விளைபொருள். நிலம், மொழி, பண்பாடு, பொருளாதார அமைப்பு போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய ஒன்று. பிந்தையது - திராவிடம் - மொழிக்குடும்ப ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தியல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக