மொழிக்குடும்பம், இனம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சமுதாய அமைப்பில் நீடிக்கிற வர்க்க நலன்களுக்கும் இடையில் உறவுகள் உண்டா?
-------------------------------------------------------------------------------------------------------
மொழிக் குடும்பம் பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய முதலாளித்துவ வளர்ச்சி, காலனித்துவ நீடிப்பு, அப்போது பல முதலாளித்துவ நாடுகளின் மதமாக நீடித்த கிறித்தவ மதம் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகள் ஆகியவைபற்றிய மிக ஆழமான ஆய்வு தேவை.
வெறும் உணர்ச்சி அடிப்படையிலும் விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் மொழிக்குடும்பங்கள், அவற்றின் இனங்கள் ஆகியவை உண்மையே அல்லது பொய்யே என்று கூறுவது அறிவியல் ஆகாது. மேலும் மொழிக்குடும்பம், இனம் என்ற இரண்டு கருத்தாக்கங்களுமே சமுதாயங்களின் அரசியல் பொருளாதார அமைப்புக்களுடன் தொடர்பு உடையவையே! இவ்வாறு பிணைத்துப் பார்க்காமல் பிரித்துப் பார்ப்பது தவறு என்பதே எனது கருத்து.
இவ்வாறு சமுதாயத்தின் அரசியல் பொருளாதார அமைப்புக்களுடன் மொழிக்குடும்பம், இனம் என்ற இரண்டுமே தொடர்பு உடையதால் - வர்க்க நலன்களுடன் தொடர்பு உடையதால் - இவை தொடர்பான ஆய்வுகளும் கருத்துக்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படும் என்பதில் ஐயம் இல்லை!
இயற்கைபற்றிய அறிவியலில்கூட - பிரபஞ்சம் இயற்கையாகத் தோன்றி நிலவுகிற ஒன்றா, அல்லது படைக்கப்பட்ட ஒன்றா- உயிர் இயற்கை நிகழ்வில் விளைந்த ஒன்றா அல்லது படைக்கப்பட்டதா - மழை, புயல் போன்ற நிகழ்வுகள் இயற்கையின் இயல்பான செயல்பாடுகளா அல்லது ஏதோ ஒரு ''சக்தியினால்'' தோன்றுகின்றவையா - என்று ''வர்க்க நலன்கள்'' அடிப்படையிலான மோதல்கள் நிலவுகின்றன!
அவ்வாறு இருக்கும்போது , மொழி, இனம் ஆகியவைபற்றிய கருத்துக்களுக்கும் வர்க்க நலன்களுக்கும் எவ்வாறு தொடர்பு இல்லாமல் இருக்கமுடியும்?
எந்தவொரு மொழியிலும் - அவற்றின் மொழி அமைப்பிலும் - வர்க்கப் பண்புகள் கிடையாது! ஒரு சமுதாயத்தின் மொழி அச்சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் பயன்படுகிற ஒன்றே!
ஆனால் குறிப்பிட்ட மொழிகளைத் தூக்கிப்பிடிப்பதிலும் குறிப்பிட்ட மொழிகளை அடக்குவதிலும் வர்க்க நலன்கள் உண்டு. எனவே மொழிபற்றிய கருத்துக்கள் வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டவை என்று கருதுவது தவறு.
தற்போது தமிழகத்தில் இது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது! அவ்வளவுதான்! திராவிடமா- தமிழா? மூல திராவிடமா - தமிழா? திராவிடனா - தமிழனா?
இவற்றில் இன்றைய சமுதாய அமைப்பில் இரண்டுவகைக் கருத்துக்கள் நீடிக்கவே செய்யும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக