திராவிட ஒப்பீட்டுமொழியியலில் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ள மொழியியல் பேராசிரியர் முனைவர் காமாட்சி அவர்களின் ஒரு சரியான பதிவையொட்டி நான் இட்ட ஒரு பதிவு இது.
------------------------------------------------------------------------
(1) மூலதிராவிட மொழி என்று ஒன்று உண்டு,
(2) அதிலிருந்துதான் பின்னர் 24-க்கும் மேற்பட்ட மொழிகள் தோன்றின,
(3) மூலதிராவிடம் பேசியவர்கள் திராவிடர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்,
(4) எனவே இந்த 24 -க்கும் மேற்பட்ட மொழியைப் பேசுபவர்கள் ஒரே இனத்தை - ''திராவிட இனத்தை''- சேர்ந்தவர்கள் என்று race கருத்து அடிப்படையில் ஏற்றுக்கொள்வது
(5) தமிழ்ச் சமுதாய வரலாற்றில் புறவயமாகத் தோன்றி நீடிக்கிற தமிழ்த் தேசிய வகை அல்லது தேசிய இனம் என்பதற்குமேல் ''திராவிட இனம்'' என்ற ''கற்பனை இனம்'' ஒன்றை உயர்த்திப்பிடிப்பது -
இவையெல்லாம் மொழியியல் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
அதுபோன்றதுதான் ''ஆரிய இனம்'' என்ற ஒரு கற்பனைக் கருத்தியலே இந்தியச் சமுதாயத்தில் உண்மையில் தோன்றி நீடிக்கிற பிராமணியம் என்று கூறுவதும் ஆய்வுக்கு உரியது.
மொத்தத்தில் ''ஆரிய மொழிகள்'' ''திராவிட மொழிகள்'' இரண்டுக்கும் மூதாதையர்கள் ''ஆரியர்'' ''திராவிடர்'' என்ற இரண்டு ''இனங்கள்'' என்ற ''கருத்தியல்'' உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ''திணிக்கப்பட்டது'' என்பதில் எனக்கு ஐயம் இல்லை!
மேலும் இந்த ''இரண்டு மொழிக்குடும்பங்களுக்கும் - ஆரியம், திராவிடம்' இரண்டுக்குமே '' மேற்கத்திய மொழிகளே மூலம்'' என்பதை ''நிரூபிப்பதும்'' ஆங்கிலேய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் ''ஆய்வாளர்கள்'' கருத்து.
''மூலமொழி ஒன்றே, இறைவன் மக்கள் ஒன்றுபட்டு இருக்கக்கூடாது'' என்பதற்காக வேறுபட்ட மொழிகளை மூலமொழியிலிருந்து உருவாக்கினார் என்ற ஒரு கதையும் உண்டு.
தென்னகத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளி என்ற நான்கு தேசிய வகைகளும் (தேசிய இனங்களும்) 20-க்கும் மேற்பட்ட பழங்குடிக் குலங்களும் இருக்கின்றன என்பதுமே உண்மை. மேற்கூறிய நான்கு தேசிய வகைகளும்கூட வரலாற்றில் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியையொட்டியே தோன்றின என்பதும் உண்மை. இதுபற்றி மிக ஆழமான ஆய்வு தேவை என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அது வேறு.
ஆனால் அதற்காக ''ஒரு மூல மொழியிலிருந்துதான்'' தற்போதைய மொழிகள் எல்லாம் தோன்றின என்பதையும், அந்த ''மூலமொழிகளின்'' அடிப்படையில் ''ஆரிய இனம், திராவிட இனம் '' என்ற கருத்தியலைத் திணிப்பதும் சரி இல்லை.
ஆனால் ஒன்று. 100 ஆண்டுகளுக்குமேலாக நீடிக்கிற இந்தத் தவறான ''கருத்தியல்'' இன்று ஒரு ''கடுமையான கருத்துமோதலாக'' மாற்றப்பட்டுள்ளதற்கும் ஒரு ''அரசியல் '' உண்டு என்பதில் ஐயம் இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக