மொழிபற்றி வரவேற்கவேண்டிய பதிவுகள் . . . (2)
--------------------------------------------------------------------------
//இலக்கியத்தில் இலக்கியப்படைப்பு, இலக்கிய ரசிப்பு, இலக்கிய ஆய்வு என்று பிரிவுகள் இருப்பதுபோல . . . மொழி ஆய்விலும் ஒரு மொழியைத் தெரிந்திருப்பது அல்லது பயன்படுத்துவது வேறு, மொழியைப்பற்றிய ஆய்வை மேற்கொள்வது வேறு; மொழியின் சிறப்பை உணர்ந்து மகிழ்வடைவது வேறு; மொழி உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் வேறுபடுத்தியும் பார்க்கவேண்டும் - ஆய்வுநோக்கில்!//
//எடுத்துக்காட்டாக, அன்பிற்குரிய இராமகி ஐயா அவர்கள் நாம் அயல்மொழிச்சொல் என்று கருதிக்கொண்டிருக்கிற ஒரு சொல் தமிழ்ச்சொல்தான் என்று ஆய்வின் அடிப்படையில் கூறும்போது நான் மகிழ்வடைவேன். அதேவேளையில் அவர் அந்த முடிவை தனது விருப்பத்தின் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது ஆய்வின் அடிப்படையில் கூறுகிறாரா என்பதையும் கருதிப்பார்க்கவேண்டும். அவரது முடிவுகள் எல்லாம் தெளிவான ஆய்வுமுறைகளின் அடிப்படையில் இருப்பதால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஒன்று தமிழின் பெருமை; மற்றொன்று தெளிவான ஆய்வுவிதிகளுக்கு இந்தக் கருத்து உட்பட்டு இருத்தல்.//
//இவ்விடத்தில் ஒன்றை மிக அழுத்தமாகத் தெரிவிக்கவிரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணம் (தொல்காப்பியம். நன்னூல், Wren and Martin English Grammar) என்பது வேறு. எந்தவொரு மொழியையும் பொதுவாக ஆய்வு செய்வதற்கான கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் என்பது வேறு. மொழியியல் இந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தது. அது எந்தவொரு மொழியின் குறிப்பிட்ட இலக்கணம் இல்லை. இந்தத் தெளிவு முதலில் தேவை. இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.//
//எந்தவொரு அறிவியலும் தொடர்ந்து மாறும்; வளரும். அதற்கு அடிப்படை . . . ஆய்வுக்கு உட்படுகிற அனைத்துமே - இயற்கையோ, சமுதாயமோ - மாறக்கூடியவை; வளரக்கூடியவை. அதுபோன்று அறிவியல் ஆய்வுமுறைகளும் மாறும்; வளர்ச்சி அடையும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு அறிவியலும் கிடையாது. உயிருள்ள எந்தவொரு மொழியும் அந்த மொழிச்சமுதாயத்தின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப மாறத்தான் செய்யும். மாறவும் வேண்டும். மொழி ஆய்வுமுறையும் தனது எல்லை விரிவடைய விரிவடைய மாறத்தான் செய்யும். தமிழ்மொழி ஒரு உயிருள்ள மொழி; தொன்மையோடு தொடர்ச்சியாக நீடித்துவருகிற ஒரு மொழி. எனவே மாற்றமும் வளர்ச்சியும் அதற்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் தமிழ்மொழி ஆய்வும் அமையவேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு உயிர் அணுவிற்கு வளர்-சிதை - மாற்றம் தொடர்ந்து நடைபெறுவதுபோல, மொழிக்கும் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' நடைபெறும். இது நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது இல்லை. புறவயமான உண்மை.//
0 கருத்துகள்:
கருத்துரையிடுக