வெள்ளி, 8 மே, 2020

முன்னொட்டு பற்றிய ஒரு விவாதம்


முன்னொட்டு பற்றிய ஒரு விவாதம்
--------------------------------------------------------------
முன்னொட்டு என்பது வேறு. பண்புத்தொகை அல்லது வேற்றுமைத் தொகையில் முதலில் வருகிற பெயர்ச்சொல் வேறு. தமிழில் முன்னொட்டு கிடையாது. ஆனால் தற்காலத்தமிழில் முன்னோடி, முற்போக்கு, முற்காலம் போன்ற சொல்களில் வருகிற முன் என்ற சொல் அதிகமான சொல்களுக்கு முன்னால் ஒட்டிவருவதால் முன்னொட்டு என்று அழைக்கலாம் என்பது ஒரு கருத்து.
தமிழில் அகராதிச்சொல்களுடன் இணையும் இலக்கணச்சொல்களைப் பொதுவாக ஐந்துவகைகளாகப் பிரிக்கிறார் பேரா. பொற்கோ அவர்கள். வேற்றுமை, எண், பால், திணை, காலம், எச்சங்கள் ஆகியவற்றைப் பின்னுருபு (suffix) என்றும் வேற்றுமைப் பின்னுருபுகளுக்குப் பின்னர் வரும் பற்றி, முன், பின், மீது, மேல் போன்றவற்றைப் பின்னொட்டு (Post positions) என்றும் பிறகு, உடன் (வந்தபிறகு, வந்தவுடன்) ஆகியவற்றை வினையொட்டு (Verbal Particles) என்றும் ஆ,ஏ, தான், மட்டும் போன்றவற்றை (அவனா, அவனே, அவன்தான், அவன்மட்டும் ) மிதவையொட்டு என்றும் சாரியைகளை (மரத்தை, மரத்தின் ஆகியவற்றில் வருகிற -அத்து, இன்) நிரப்பி (Filler) என்றும் வகைப்படுத்துகிறார். இவை அனைத்தும் அகராதிச்சொல்களுக்குப்பின்னர்தான் வரும். இவற்றில் எதுவும் அகராதிச்சொல்களுக்கு முன்னர் வராது. வடமொழியில் நீதி - அநீதி, நியாயம்-அநியாயம் என்று எதிர்மறைகாட்டும் 'அ ' என்பது, அல்லது ஆங்கிலத்தில் possible-impossible, certain-uncertain , tolerable - intolerable போன்றவற்றில் வரும் im-, un- in- என்பவை முன்னொட்டு என்று அழைக்கப்புடுகின்றன. ஆனால் தமிழில் இதுபோன்று அகராதிச்சொல்லுக்குமுன் விகுதிகள் இலக்கணச்சொல்கள் வருவதில்லை. எனவே தமிழில் முன்னொட்டு அல்லது முன்னுருபு கிடையாது. ஆனால் ஒரு சொல் - அகராதிப்பொருண்மையைக் குறிக்கும் ஒரு சொல்-- கால வளர்ச்சியில் பல சொல்களோடு இணைந்து ஒரே பொருளைத் தரும்போது, அதைப் பின்னொட்டு என்று சொல்வதில் தவறு இல்லை என்பது சிலரின் கருத்து. அந்தவகையில் முன், பின் போன்றவையெல்லாம் (முற்காலம், முன்னோடி, முற்போக்கு, பிற்போக்கு, பிற்காலம் ) முன்னொட்டு என்று சிலர் கருதுகின்றனர். இது மேலும் ஆய்வுக்கு உரியது. பொதுவாக மொழியியலில் affix என்ற இலக்கண ஒட்டுகளை அல்லது இலக்கணவிகுதிகளை முன்னொட்டு (prefix), உள்ளொட்டு (infix), பிரியொட்டு( circumfix) , பின்னொட்டு (suffix) என்று வகைப்படுத்துகின்றனர். தமிழைப்பொறுத்தமட்டில் அனைத்து இலக்கணச்சொல்களும் பின்னொட்டு அல்லது பின்னுருபு என்ற வகையில்தான் அடங்குகின்றன. இதுபற்றிய விளக்கத்தைக் கூறப்போனால், பதிவு நீளும். ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மொழியாய்வில் ஆய்வுசெய்கிறவர்களின் நோக்கங்களைப்பொறுத்து சில வகைப்பாடுகள், கருவிகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும். அதற்கான பெயர்களும் வேறுபடும். மரபு இலக்கணத்தில் பின்பற்றப்படும் இலக்கணவகைப்பாடுகளும் அவற்றிற்கான பெயர்களும் அப்படியே எல்லாக் காலங்களிலும் பின்ப்பற்றப்படவேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று நினைக்கிறேன். மொழியில் புதிய இலக்கப் பண்புகள் தோன்றலாம். அவற்றிற்கான புதிய இலக்கணவிகுதிகள் அல்லது ஒட்டுகள் அல்லது உருபுகள் தோன்றலாம். வினைக்கூறு (aspectuals) , வினைநோக்கு (modals) , வினைப்பாங்கு (voices) போன்றவையெல்லாம் பெரும்பாலும் பிற்காலங்களில் தோன்றியவைதாம். தற்கால மொழியியலானது எந்தவொரு மொழியையும் ஆய்வதற்கான ஒரு அறிவியல்துறை. எனவே சில பொது இலக்கணவகைப்பாடுகளும் கலைச்சொல்களும் அதில் பயன்படுத்தப்படும். அவற்றில் சில மரபு இலக்கணத்தில் காணப்படும் கலைச்சொல்களிலிருந்து வேறுபடலாம். இது ஒரு பிரச்சினையே இல்லை என்பது எனது கருத்து. எவ்வளவு நுட்பமாக ஆய்வுசெய்கிறோமோ , அந்த அளவுக்கு இலக்கணக்கூறுகளும் இலக்கணக் கலைச்சொல்களும் அதிகரிக்கும். மொழியியல் வளர்ச்சியில் முன்வைக்கப்படுகின்றவற்றை எல்லாம் ஆங்கிலத்தின் செல்வாக்கு என்று கூறுவதும் சரியல்ல. மொழியியல் அனைத்து மனிதமொழிகளையும் ஆய்வுசெய்யும் ஒரு துறை. எடுத்துக்காட்டாக முன்னர் குறிப்பிட்ட circumfix, infix ஆகியவை ஆங்கிலத்தில் கிடையாது. ஆனால் வேறு சில மொழிகளில் உள்ளன.
இலக்கணமயமாதல் என்ற செயற்பாடு அநேகமாக எல்லாமொழிகளிலும் நடைபெறுகிறது. சமுதாயம் வளர வளர ... மக்களின் சிந்தனை வளர வளர ... அகராதிச்சொல்கள் சில இலக்கணமயமாதலும் இரண்டு அகராதிச்சொல்கள் இணைந்து சொல்மயமாதலும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ள shall, will உட்பட பல அகராதிச்சொல்கள் பின்னர் இலக்கணச்சொல்களாகவும் பயன்படுகின்றன. தமிழில் உள்ள பின்னொட்டுகள் ( அதாவது வேற்றுமை உருபுகளுக்குப் பின்னர் அமைந்து மேலும் பல வேற்றுமை உறவுகளை வெளிப்படுத்தப் பயன்படுகின்றவை - பற்றி, குறித்து, விட, மூலமாக ) இவ்வாறு தோன்றியவைதான். அதுபோல வினைக்கூறுகள் ( வா, போ, விடு, பார் போன்றவை) , வினைநோக்குகள் ( முடியும் , முடியாது, வேண்டும், வேண்டாம், கூடும் , கூடாது போன்றவை) வினைப்பாங்குகள் ( வை .. செய்யவை ) ஆகியவை எல்லாம் அவ்வாறு தோன்றியவையே ஆகும். தனி
வினை அகராதிச் சொல்களாக இருந்த இவை, பின்னர் இலக்கணச்சொல்களாகவும் அமைகின்றன. . இதை மொழியியலில் grammaticalization என்று அழைக்கிறார்கள். இதற்கு எதிர்மாறான ஒரு செயல் சொல்மயமாக்கம் (lexicalization ) . இரண்டு அகராதிச்சொல்கள் இணைந்து ஒருபுதிய பொருளைத் தரும் அகராதிச்சொல்லாக மாறுகிற ஒரு செயல்பாடு. வான் + ஒலி = வானொலி . இங்கு வான் என்கிற சொல் தருகிற பொருளையும் ஒலி என்கிற சொல் தருகிற பொருளையும் சேர்த்தால் , வானொலி (radio) என்ற சொல்லின் பொருள் கிடைக்காது. அது ஒரு புதுப்பொருள். இதுபோலத் தான் செங்கல், பச்சிலை போன்ற சொல்களும் தோன்றி நீடிக்கின்றன. . கூட்டுச்சொல் ( compounds) என்பவை வேறு. மலர்ப்பந்தல் = மலர் + பந்தல்; இங்கு மலர் என்பதின் பொருளையும் பந்தல் என்பதன் பொருளையும் கூட்டினால், மலர்ப்பந்தல் என்ற சொல்லின் பொருள் கிடைக்கிறது. வாழும் எந்த ஒரு மொழியிலும் இந்த இரண்டு செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். எனவே இவற்றையெல்லாம் மனதில்கொண்டுதான் இன்றைய தமிழ் இலக்கணம் எழுதப்படவேண்டும். தமிழ் தன் வரலாற்றில் தொடர்ந்து மாறியும் வளர்ச்சியும் அடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்பவர்கள், நிச்சயமாக இந்த இலக்கண வளர்ச்சியையும் மனதில் கொள்ளவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India