திங்கள், 4 மே, 2020

நமது உடம்பின் இயற்கையான பாதுகாப்புக் காவலர்கள் .... போர்வீரர்கள் ....

நமது உடம்பின் இயற்கையான பாதுகாப்புக் காவலர்கள் .... போர்வீரர்கள் ....
( பொதுமக்களுக்கான ஒரு பதிவு இது ! அறிவியல் துறைகளை - குறிப்பாக மருத்துவத் துறைகளை - சார்ந்தவர்களுக்கு இது இல்லை) -பகுதி 1
--------------------------------------------------------------------------------------
இன்று கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தடுத்த நிறுத்த நமது மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களான செவிலியர்கள், சளி, இரத்தம் ஆகியவற்றை எடுத்து ஆய்வுசெய்யும் தொழில்நுட்பத் துறையினர், , தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து ... மிகக் கடுமையாக நமக்காகப் போராடுகிறார்கள். தங்கள் நலன், தங்கள் குடும்ப நலன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்.... நமக்காக இரவும் பகலும் செயல்படுகிறார்கள். இது ஒருபுறம்!
மறுபுறம்... கொரோனா வைரசு நமது உடம்பில் புகுந்தவுடனேயே அதை நமது உடம்பு எதிர்த்துப் போராடி வெற்றிபெறத் தேவையான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதில் உலகில் இன்று 70-க்குமேற்பட்ட மருந்துதயாரிப்பு நிறுவனங்கள்... கோடியே கோடி டாலர்களை முதலீடு செய்து.... நூற்றுக்கணக்கான மருத்துவயியல் விஞ்ஞானிகளை ஈடுபடுத்தி.. தடுப்பூசியை விரைவில் வெளிக்கொணர ... இரவும் பகலும் ஆய்வுமேற்கொண்டுவருகின்றனர் !
இவர்களுக்கெல்லாம் நாம் கைதட்டி... வானத்தில் விமானங்கள்மூலம் மருத்துவமனைகள்மீது மலர்கள் தூவி... நன்றி செலுத்திவருகிறோம்!
ஆனால்... மேற்கூறியவர்கள் எவ்வளவுதான் உழைத்தாலும்.. அவர்களுக்கு நமது உடம்புக்குள் உள்ள இயற்கையான பாதுகாவலர்கள் -- '' நோய் எதிர்ப்புப் போராளிகள்'' கைகொடுத்தால்தான்... ஒத்துழைத்தால்தான் கொரோனா மறையும். இந்த '' நோய் எதிர்ப்புப் போராளிகளைச் '' செயல்பட வைக்கத்தான் மேற்கூறியவர்கள் எல்லாம் உழைக்கிறார்கள்! அப்படியென்றால் ... உடம்புக்குள் நேரடியாக கொரோனா வைரசை எதிர்த்துநின்று போராடுகிற நமது உடம்புக்கு எவ்வளவு மரியாதை நாம் செலுத்துவேண்டும் என்பதை விளக்கவே இந்தப் பதிவு!
குழந்தை தன் தாயின் கருவறையில் இருக்கும்போதே, தொப்பூள்கொடிவழியே இந்த '' நோய் எதிர்ப்புப் போராளிகள் '' ... அக்குழந்தையை எந்தவொரு நோய்க்கிருமியும் பாதித்துவிடாமல் பாதுகாக்கின்றனர். அடுத்து, குழந்தை பிறந்தவுடன் தாய் தனது தாய்ப்பால்மூலம் இந்த ''நோய் எதிர்ப்புப் போராளிகளை '' அனுப்பி, குழந்தையை நோய்க் கிருமிகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றார்.
பின்னர் நாம் வளர்ந்தவுடன் ... நமது தோல், வியர்வை, சளி, உமிழ்நீர், கண்ணீர் போன்றவை எல்லாம் வெளியிலிருந்து நமது உடம்புக்குள் நோய்க்கிருமிகள் தொற்றிவிடாமல் பாதுகாக்கின்றன. இவைதான் நமது உடம்புக்கு முதல்நிலைக் காவலர்கள் ! இவர்களைத் தாண்டி, உடம்புக்குள் கிருமிகள் நுழைந்தால் ... அவற்றை எதிர்த்து நின்று ஒழிக்க... உடம்புக்குள் இருக்கிற பல்வேறு உறுப்புகள் .. மண்ணீரல், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், எலும்பில் உள்ள மஞ்சள்சதை, வயிற்றில் சுரக்கிற அமிலங்கள் போன்றவைை எல்லாம் இரண்டாம்நிலைக் காவலர்களாகச் செயல்பட்டு, நமது உயிரைக் காப்பாற்றுகின்றன. உடம்பில் ஒரு காயம் ஏற்பட்டவுடன் , அது வழியாக எந்தவொரு நோய்க்கிருமியும் உடம்புக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க இந்தத் தடுப்பாற்றல் காவலர்கள் அக்காயத்தைச்சுற்றி ... வீக்கம், நிணநீர் கட்டுதல் போன்றவைமூலம் தடுக்கின்றனர். காய்ச்சல் என்பதுகூட இந்தப் போர்வீர்கள் ஏதோ ஒரு நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது! வாந்தி, சளி பிடித்தல் , ஒவ்வாமை ஆகியவையும் உடம்பின் இயற்கையான போர்வீரர்களே. இவையெல்லாம் ... ''உடம்புக்குள் எதிரிகள் புகுந்துவிட்டார்கள் ... அதை எதிர்த்துத் தான் போராடிக்கொண்டிருக்கிறேன்'' என்று நமது உடம்பு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நமக்கு எச்சரிக்கை அளிக்கிறது!
மேற்கூறியவையெல்லாம், மனிதர்கள் அனைவருக்கும் வெளியிலிருந்து நுழையும் சில நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட ... இயற்கையின் இயக்கத்தில் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள். ஆங்கிலத்தில் இதை " innate immunity " என்று அழைக்கிறார்கள்!
ஒரு காலத்தில் ரோமன் அரசின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு அவர்களுக்குத் குற்றத் தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லே இந்த immune என்ற சொல். அதுபோன்று, உடம்புக்கு நோய்களிலிருந்து விடுபடும் உரிமையை அளிக்கிற செயலே இந்த " immunity system" !
நாம் மேலே பார்த்த இந்தப் பாதுகாப்பு அரண் மட்டுமே நமது உடம்புக்குப் போதாது. ஏனென்றால் புதுப் புதுக் கிருமிகள் அவ்வப்போது நமது வாழ்கின்ற இயற்கைச் சூழல், செயற்கைபாதிப்பு ஆகியவற்றிலிருந்து தோன்றி. நமது உடம்பைப் பாதிக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராட, இயற்கையாகப் பிறப்பிலிருந்து உடம்பில் செயல்படும் மேற்குறிப்பிட்ட "innate immunity" போதாது. எனவே நமது உடம்பு .. நமது வாழ்வின்போது... மற்றொரு பாதுகாவல்படையை உருவாக்கிக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் "acquired / adaptive immunity" என்று அழைப்பார்கள்.
ஒரு புதிய நோய்க்கிருமி நமது உடம்புக்குள் நுழைந்தவுடன் ... அதை எதிரி என்று கண்டறிந்து.. அதை ஒழித்துக்கட்ட நமது உடம்புக்குள் உள்ள சில உறுப்புகளாலும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களாலும் செயலூக்கம் உள்ள படைவீரர்கள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களை ஆங்கிலத்தில் "anti-body" என்று அழைக்கின்றனர். இதில் வியப்புக்குரிய ஒன்று... ஒவ்வொரு நோய்க் கிருமிக்கும் (antigen) ஒவ்வொரு வீரர் உருவாக்கப்பட்டு, பொறுப்பு ஏற்கிறார். குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்ட போர்வீரர்... அவர் போராடிய எதிரியின் பண்புகள், வீரியம் ஆகியவற்றையும் ... அவற்றை எதிர்த்து அவர் எவ்வாறு போராடினார் என்பதையும் நமது உடம்பின் ''தடுப்பாற்றல் இயக்கம் '' தன் நினைவில் வைத்துக்கொள்ளும். பின்னால் ஒரு காலத்தில் அந்த நோய்க்கிருமி மீண்டும் உடம்புக்குள் நுழைந்தால், அந்தக் குறிப்பிட்ட போர்வீரர் உடனடியாகச் செயல்பட்டு, எதிரியை வீழ்த்தி விடுவார்! இதுபோன்ற ஒவ்வொரு நோய்க்கிருமிக்கும் நமது உடம்பு நோய்க்கிருமிகளுக்கு எதிரான தனது போராட்டத்தில் ... தானே முனைந்து ... செயல்பட்டு... போராட்டத்தின் ஊடேயே .. உருவாக்குகிற இந்தத் திறனை ''முனைப்புள்ள தடுப்பாற்றல் ''active immunity " என்று அழைப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உண்டு! இந்தத் தடுப்பாற்றலே மிக மிக முக்கியமானது. இந்தத் தடுப்பாற்றல் இயற்கையாக உடம்பில் உருவாகுகிறது. அதாவது, நமது உடம்பே உருவாக்கிக்கொள்கிறது.
தற்போது கொரோனாத் தொற்றல் பாதிப்புக்கு உட்படுகிற பெரும்பாலான மக்கள் .... சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஏன் அந்த கொரோனா வைரசு அவர்கள் உடம்பை - நுரையீரலையோ அல்லது பிற உறுப்புகளையோ - தாக்கி... பாதித்து ... உயிரிழப்பை ஏற்படுத்துவது இல்லை ? மேற்கூறிய முனைப்புள்ள தடுப்பாற்றல் செயலினால் .... உடம்பு தனது போராட்டத்தின்போது ... உருவாக்கிய போர்வீரர்களே காரணம்! இதைத்தான் " acquired active immunity என்று அழைக்கிறார்கள்!
கொரோனா வைரசை இனம்கண்டு... அதை எதிர்த்துப் போராடுகிற திறனை நமது உடம்பே உருவாக்கிக்கொள்கிறது! இவ்வாறு உடம்புக்குள் ஒரு நோய்க்கிருமி புகுந்தபின்னர்தான் .. அதன் பண்புக்கூறுகளைப் புரிந்துகொண்டு... அதை எதிர்த்துப் போராடுகிற போர்வீரர்களைத் தடுப்பாற்றல் இயக்கம் உருவாக்கும்! அவ்வாறு இல்லாமல்... உடம்பை முன்கூட்டியே அதற்கான போர்வீரர்களை உருவாக்க வைக்கமுடியாதா? தேவையில்லாமல் ஏன் அந்த வைரசு வருகிறவரை காத்திருக்கவேண்டும் ? என்று நாம் நினைக்கலாம் அல்லவா? இதுபற்றி நாளை தொடர்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India