திங்கள், 18 மே, 2020

பேராசிரியை வீ.சு. இராஜம்

பேராசிரியை வீ.சு. இராஜம் … வீரவநல்லூர் சுந்தரம் அவர்களின் புதல்வி. தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். கணிதத்தில் இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர், தமிழார்வத்தில் மதுரையில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேர்ந்து (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். 1963 – 75 வரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மொழியியலில் சான்றிதழ் (1974), பட்டயப் படிப்புகளையும் (1975) அங்கேயே மேற்கொண்டார். பாத்திமா கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தபின்னர், அமெரிக்கா சென்றார். 1977 –இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் 1981 –இல் முனைவர் பட்டமும் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் இரண்டிலும் பல ஆண்டுகள் விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்க மாணவர்களுக்குப் பலநிலைகளில் தமிழ்மொழி பயிற்றுவித்துள்ளார். பல ஆராய்ச்சித்திட்டங்களுக்கு அமெரிக்காவில் நிதி உதவிபெற்று, தமிழாராய்ச்சியை மேற்கொண்டார். வரலாற்றில் நிலைத்துநிற்கக்கூடிய அவருடைய ஒரு மிகப் பெரிய ஆய்வு நூல் - “ A Reference Grammar of Classical Tamil Poetry ( 150 B.C. – pre-fifth / sixth centuryA.D.) “. இந்நூலை American Philosophical Society (1992) வெளியிட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்து, அதன் ஒரு படியை எனது பேரா. செ.வை. சண்முகம் அவர்களிடமிருந்து பெற்றுப் படித்தேன். மொழியியல் அடிப்படையில் தமிழ்மொழியை அவர் ஆழமாக ஆராய்ந்து, தமிழின் சிறப்பை வெளிக்கொண்டுவந்துள்ளார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஒரு நூல், அவரும் ஜீனி ஹெயின் ( Jeanne Hein) என்பவரும் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள 16 – ஆம் நூற்றாண்டில் Fr. Henriques என்பவரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கணம் ( ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது) . முனைவர் ராஜம் அவர்கள் பழம்பெரும் புலவர்களான பேராசிரியர் இலக்குவனார், உரைவேந்தர் துரைசாமிப்பிள்ளை, பேரா. தமிழண்ணல் போன்றோரின் மாணவி. பேரா. அ. கி. ராமானுஜன், பேரா. எமனௌ ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர். ராமானுஜன் தனது சங்கப் பாடல்களின் மொழிபெயர்ப்புகளைச் சரிபார்க்க முனைவர் ராஜம் அவர்கள் துணையை நாடினார் (நன்றி: திரு. மணி மணிவண்ணன்) .பேராசிரியை அவர்கள் கணினி நிரல் ஆக்கத்திலும் வல்லவர். கணினித்தமிழ் என்ற ஒரு தொடர் தமிழகத்தில் புழங்குவதற்கு முன்னரே தமிழ்மொழிக்குப் பல நிரல்கள் எழுதியுள்ளார். அதுபற்றிய விவரங்களை http://www.letsgrammar.org/ என்ற இணையதளத்தில் காணலாம். தமிழகமும் தமிழ் ஆய்வுலகமும் இவருக்குச் சிறப்புசெய்யக் கடமைப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India