சனி, 25 ஏப்ரல், 2020

கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை


கொரோனாத் தொற்று நோய் பிரச்சனையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை
-------------------------------------------------------------------------------------------------------------------------------
1)
கொரோனா வைரசு தொற்று ஒருவருக்கு ஏற்படுவதாலேயே , அவருடைய உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ... நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சியக்கமே முழுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பில் சென்று முடியும் என்று நினைப்பது சரியல்ல. மாறாக, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அந்த வைரசை எதிர்த்துப் போராடி , அந்த வைரசின் தொற்றிலிருந்து அவர் விடுதலை அடையலாம்.
2) அடுத்து, அந்த நபர் தொற்று என்று தெரிந்தவுடனேயே மருத்துவர் கண்காணிப்புக்குச் சென்றுவிட்டால், அவருடைய உடல் எதிர்ப்பு ஆற்றலுக்குத் துணையாக, பிற மருத்துவ உதவிகளை மருத்துவர் அளித்து, அவரை அத்தொற்றிலிருந்து காப்பாற்றலாம். இதுவே தற்போது பெரும்பாலும் நடைபெறுகிறது. அதாவது, இந்த வைரசால் ஏற்படும் தீவிர நோயையே வரவிடாமல் தடுத்துவிடலாம்.
3) இதையும் தாண்டி, அவருக்கு இந்த வைரசால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டாலும், தகுந்த மருத்துவ உதவிகளைக் கொண்டு, அவரைக் காப்பாற்றி, குணப்படுத்தமுடியும். இதற்கு அவரது உடம்பும் சற்று உதவவேண்டும். வயது முதிர்ச்சி, உடம்பில் ஏற்கனவே நீடிக்கிற பிற பாதிப்புகள் இந்த வைரசின் நோயைத் தாங்கமுடியாமல் உடலைப் பாதிக்கலாம். ஆனால் இதைவிட மோசமான நோய்களைக்கூட இன்றைய மருத்துவம் குணமாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
4) எனவே கொரோனா வைரசுப் பிரச்சினையில் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது.... ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டால், அவரைத் தகுந்த மருத்துவத்தால் குணப்படுத்தமுடியும். ஆனால் அவரால் இந்த வைரசு பிறருக்குத் தொற்றுவதை .. பரப்புவதைத்... தடுப்பதுதான் பெரிய பிரச்சினை! இதில் பெரும்பங்கு மக்கள் கைகளில்தான் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடமிருந்து இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்குத் தேவையானவற்றையும், அதுபோலத் நோய்த்தொற்று இல்லாதவர்கள் நோய் உள்ளவரிடமிருந்து தங்களுக்குப் பரவாமல் இருப்பதற்குத் தேவையானவற்றையும் கடைப்பிடித்தால் போதும். சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படவேண்டும். இதில் அரசின் பங்கும் உண்டு.
5) மேற்குறிப்பிட்டவகையில் மக்கள் செயல்பட்டால், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால்தான் இதற்கு விடிவு என்று நினைக்கவேண்டியதில்லை. ஊரடங்கும் தேவையில்லை. தொழில்களை மூடவேண்டியதும் இல்லை!
6) தடுப்பூசி போன்று மற்றொரு வழியும் இதற்கு உண்டு. ஆனால் அதனால் சற்று இழப்பு அதிகம் ஏற்படும். மக்கள் ( பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் இருவரும்) மேற்கூறப்பட்ட எதையும் பின்பற்றமாட்டோம் என்று கூறினால்... வைரசு பாதித்தால் பாதிக்கட்டும் என்று நினைத்தால்.... வைரசுத் தொற்று அதிகமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்கள் அதை எதிர்த்துப் போராடி, வெளிவந்துவிடுவார்கள். முடியாதவர்கள் பாதிப்புக்கு உட்பட வேண்டியிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் ''மந்தை அல்லது சமுதாய நோய்த் தடுப்பாற்றல்'' ஏற்பட்டு, தடுப்பூசி செய்கிற பணியை இந்த இழப்பு செய்யும். ஆனால் இதைச் செய்யலாம் என்று பரிந்துரைப்பது முறையல்ல. எனென்றால் யார் பாதிக்கப்படுவார்கள், யார் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சொல்லமுடியாது. ''நானோ எனது குடும்பத்தாரோ பாதிக்கப்படக்கூடாது, மற்றவர்கள் பாதிக்கபடுவது பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்று யாராவது சொன்னால் அது, மனிதத் தன்மை இல்லையே!
7) எனவே, தற்போதைய தீர்வு .... நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்துநிறுத்துவதே ஆகும். இது முறையாக நடந்தால்... நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்து.. குணப்படுத்தி .. வெளிக்கொணரமுடியும்! இந்த வைரசு தொற்றுப் பரவலின் சங்கிலியைத் துண்டிப்பதே இன்றைக்குச் சிறந்த. நம்முன் இருக்கிற.. ஒரே வழி!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India