வியாழன், 23 ஏப்ரல், 2020

கொரோனாவும் பொருளாதார நெருக்கடியும் - பகுதி 6

ஊரடங்கு நீடிப்பு ..... வெளிப்படும் அரசியல் பொருளாதாரம்!(ஏப்ரல் 12, 2020)
-------------------------------------------------------------------------------------------------------------
ஊரடங்கு நீடிக்கக்கூடாது என்பதில் சாதாரண மக்களைவிட... தொழில் அதிபர்களே உறுதியாக இருப்பார்கள்.
கணினிநிறுவனங்கள் தங்களுடைய பணிகளை ... பொறியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே செய்வதற்கு அனுமதிக்கமுடியும். அதிலும் பல சிக்கல்கள் அவர்களுக்கு உண்டு. குறிப்பிட்ட பணிகளை முடித்தால்தான், அந்த நிறுவனங்களின் முதலாளிகள், தாங்கள் சார்ந்துள்ள நுகர்வாளர் நிறுவனங்களிலிருந்து பணம் பெறமுடியும். ஆனால் வீடுகளில் பொறியாளர்களுக்குத் தேவையான இணைய இணைப்பு போன்ற வசதிகள் போதுமானதாக இருக்காது. எனவே அதிக நேரம் பணிசெய்யப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தபடுகிறார்கள். இது ஒருபுறம்.
மற்றொரு புறம்... பெரிய ஆலை, பொருள் உற்பத்தி நிறுவனங்கள்.... இந்த நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்களைத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்து, உற்பத்தியைத் தொடரமுடியாது. எனவே ஒவ்வொரு நாளும் தற்போது அவர்களுக்கு... அவர்கள் நோக்கில்... இழப்புதான்! எனவே அவர்களே அரசாங்கத்திற்கு நெருக்கடிகொடுத்து, ஊரடங்கை விரைவில் விலக்க வைத்துவிடுவர்கள். நமக்குக் கவலை வேண்டாம்!!!. முதலில் ''முக்கிய'' தொழில்கள் இவை இவை என்று முடிவுசெய்து, அவற்றைத் திறக்க வைப்பார்கள். பின்னர், அதற்குத் தேவையான ''சார்தொழில் '' நிறுவனங்களையும் திறக்கவைப்பார்கள். பின்னர் உற்பத்தி செய்த பொருள்களை மக்கள் வாங்கினால்தானே அவர்களுக்கு லாபம் ... பணமாக ... கிடைக்கும். எனவே வணிக நிறுவனங்களும் திறக்கப்படும். கவலை வேண்டாம்!
இங்குதான் அரசியல் பொருளாதாரமே வெளிப்படுகிறது!

மேலும் இந்தியப் பொருளாதார உற்பத்தியுடன் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள் பின்னிப்பிணைந்த்துள்ளன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு இந்திய மக்களின் உழைப்பும்('உழைப்பு சக்தி'') தேவை... வாங்கும் சக்தியும் .. சந்தையும் தேவை! எனவே தற்போது அவற்றிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்களின்மீது ஏற்றும் என்பதில் ஐயம் இல்லை!

கொரோனாவும் தமிழ் நாட்டு மக்களும்...
-------------------------------------------------------------------------------------
பிசிஆர் சோதனையில் 10-க்கு 1 என்று அடிப்படையில் நோய்த்தொற்று உறுதியாகக்கொண்டிருக்கிறது. 10,655 சோதனையில் 1075 நபர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் நோய்க்கடுமைக்கு உட்பட்டவர்கள் அதிகம் இல்லை என்பதும் ஒரு ஆறுதல் தரும் செய்தி. தொற்று உள்ளவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவம் மூலம் குணமடைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் சென்னைகோவை, சேலம்,என்று நகர்ப்புறங்களில்தான் ... வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றால் தொற்று உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்றும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 1200 பேரில் ஏறத்தாழ 750 பேர்களுக்கு தொற்று உறுதியாக உள்ளது. புறநகரங்கள், கிராமப்புறங்களில் பாதிப்பு இல்லை என்பதாகத் தெரிகிறது.
அங்கு எல்லாம் ஊரடங்குப் பிரச்சினைதான் தொழில்களை மிகவும் பாதித்துள்ளது. சிறு, நடுத்தர விவசாயிகள்( காய்கனிகள், பூக்கள் ....) பிற அமைப்புசாராத் தொழில் வினைஞர்கள் மிகவும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நகர்ப்புறங்களிலும் அமைப்புசாராத் தொழில்களில் உள்ளவர்கள் ( மின்வேலை செய்பவர்கள், தண்ணீர்க்குழாய் வேலைசெய்பவர்கள், ஊர்தி ஓட்டுபவர்கள், இரயில் நிலையங்கள் போன்றவற்றில் சுமைத்தூக்கும் தொழிலாளிகள் போன்ற வேலைகளில் உள்ளவர்கள்) வேலையின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெரிய ஆலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகள் பிரச்சினை வேறு! அது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் என்பதோடு, உழைப்புச்சக்திச் சுரண்டலும் இனி அதிகமாகும். வேலையில்லா மக்கள் கூட்டம் பெருகும். இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, ஆலை அதிபர்கள் குறைந்த ஊதியத்தில் தொழிலாளிகளைப் பயன்படுத்த முனைவார்கள்.
எனவே தமிழ் நாட்டில் ... நோய்த்தொற்று தொடர்பாக அதிக அச்சம் தேவையில்லை.. கவனமும் தூய்மையும் கூடல் இடைவெளியும் தேவை. விரைவில் தொற்று அச்சத்திலிருந்து வெளிவந்துவிடலாம். பொருளாதாரச் சிக்கல்கள்தான் அதிகமாகும்!

நடுத்தர வர்க்கங்களுக்கு உள்ள மற்றொரு பிரச்சினை ... கடன் அட்டைப் பிரச்சினை ஆகும்! குளிர்சாதனங்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், துணிமணிகள், நகைகள் போன்ற நுகர்பொருள்களை உற்பத்திசெய்பவர்கள்... தங்கள் பொருள்களை விற்றால்தானே... லாபம் ஈட்டமுடியும்? அதற்கு மக்களுக்கு வாங்கும் சக்தி தேவையல்லவா? ஆனால் மக்களுக்கு வருமானம் போதுமான அளவில் இல்லை! அதனால் உற்பத்தியாளர்களே வங்கிகளின் ''உதவிகளோடு'' கடன் அட்டைகளை வழங்குதல், மாதத்தவணைகளில் வாங்குதல் போன்றவற்றின்மூலம் மக்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகிறார்கள். மக்களின் ''வாங்கும் சக்தியை '' கூட்டுவதற்காக இந்தக் கடன் அட்டைகள் வழங்கியுள்ளார்கள். மேலும் வீட்டுமனை நிறுவனங்கள் இவர்களுக்கு வங்கிகள்மூலம் கடன் உதவி அளித்து வீடுகளை வாங்கவைக்கிறார்கள். இவற்றில் சிக்கிக்கொண்ட நடுத்தரவர்க்க மக்கள் தற்போது மிகவும் இன்னல் அடைகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான்!

//அவசர நிலையில் பொருளாதாரம்
கரோனாவால் அமெரிக்காவில் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் 1.7 கோடி போ் வேலையிழப்புக்கான நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ளனா். ‘அமெரிக்காவின் பொருளாதாரம் அவசர நிலையில் உள்ளது. ஆபத்தான வேகத்தில் மோசமடைந்து வருகிறது’ என ஃபெடரல் ரிசா்வ் வங்கித் தலைவா் ஜெரோம் ஹெச்.பவல் தெரிவித்திருக்கிறாா். பொருளாதார சரிவை ஈடுசெய்வதற்காக 2 டிரில்லியன் டாலா் புதிய கடன் திட்டங்களை அமெரிக்காவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.//

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India