வியாழன், 23 ஏப்ரல், 2020

மதவெறி கூடாது- பகுதி 2


தமிழகத்தில் கொரோனாத்தொற்று நோயும் இசுலாமிய மக்களும்....(ஏப்ரல்10, 2020)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் கொரோனத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற ஒரு இசுலாமிய மாநாட்டில் பங்கேற்கச் சென்றவர்களாக இருப்பது ஒரு எதிர்பாராத விபத்து. இதில் ஐயமே இல்லை. இது எந்தவொரு திட்டமிட்ட சதியும் இல்லை. மனித உணர்வோடு சிந்தித்துப் பார்த்தால், இது தெளிவாகும்.
எல்லா மதத்தினரும் தங்களுடைய மத விழாக்களிலோ அல்லது பரப்புரை ஊர்வலம், மாநாடு ஆகியவற்றிலோ கூட்டமாகக் கூடுவது பொதுவாக நடக்கும் ஒரு செயல்தான். அவ்வாறு நடைபெற்ற டெல்லி மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து இசுலாமிய நண்பர்கள் பங்கேற்றுள்ளார்கள். அப்போது கொரோனாத் தொற்றுநோய்பற்றிய விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத ஒரு காலகட்டம். அந்த மாநாடு தடைசெய்யப்பட்ட ஒரு மாநாடு இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
அந்த மாநாட்டில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அரபு நாடுகளிலிருந்தும் நண்பர்கள் பங்கேற்றுள்ளார்கள். அவர்கள் இந்தியாவுக்கு விமானங்களில்தான் வந்திருக்கிறார்கள். அப்போது இந்திய அரசு கொரோனாத் தொற்று நோயின் தொற்றல்பற்றி முழுமையாகப் புரிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஒரு காலகட்டம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருந்தால், , விமானநிலையங்களிலேயே அவர்கள் தடுக்கப்பட்டிருப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது மாநாடு முடிந்தவேளையிலாவது தொற்று நோயின் ஆபத்து தெரிந்துகொள்ளப்பட்டிருந்தால், தடுப்புக்கான நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது. மாநாடு முடிந்தபிறகு, பங்கேற்ற நண்பர்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்கு விமானங்கள் அல்லது இரயில், ஊர்திகள் மூலம்தான் திரும்பியிருக்கிறார்கள். கொரோனாத் தொற்றுக்கு தாங்கள் உட்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல்தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிய சில நாள்களுக்குப்பிறகுதான், கொரோனாத் தொற்றல் நோயின் பாதிப்பு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தெரியவந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் சாதாரண மக்களுக்குத் தொற்றுநோயின் பரவல்பற்றி முதலில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளிப்படையாகப் பாதிக்கப்படும்போதுதான் அவர்களுக்குத் தெரியவருகிறது. எனவே மாநாட்டில் பங்கேற்ற நண்பர்கள் தங்கள் இடங்களிலேயே இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் நாடு அரசாங்கத்தின் எச்சரிக்கை, வேண்டுகோள் ஆகியவற்றைக் கண்ட அந்த நண்பர்கள் 24 மணிநேரத்திலேயே தங்கள் விவரங்களை அரசாங்கத்திற்குத் தெரிவித்து , தங்களைச் சுகாதாரத் துறையின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளார்கள். இதுதான் நடந்த உண்மை.
ஆனால் கொரோனாப் பாதிப்புக்கு உட்பட்டவர்களில் பெரும்பான்மையாக இவர்கள் இருப்பதால் ... இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு... பிற மதங்களில் உள்ள ''மத வெறியர்கள்'' ... '' இசுலாமிய '' மக்களுக்கு எதிராகப் பேசுவது சரியல்ல. இசுலாமிய நண்பர்களும் மனிதர்கள்தானே. தமிழர்கள்தானே. அவர்கள் என்ன, திட்டமிட்டு, தங்களைத் தற்கொலைப்படையாக மாற்றி ... . கொரோனாத்தொற்றைத் தங்கள் உடலில் ஏற்றிக்கொண்டு ... தமிழகத்தைத் ''தாக்க'' புறப்பட்டுவந்தவர்களா? சாதாரண மக்கள் அவர்கள்! அவர்களை எதிரிகளாகப் பார்த்து... இதுதான் சமயம் என்று... தங்களது ''மதவெறியை'' - மிகப்பெரிய சமூகத் தொற்று நோயான ''மதவெறியை'' - இசுலாமியத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாமா? கொரோனத் தொற்று தனக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்த எந்த ஒரு இசுலாமிய நண்பரும், அதை வெளியில் தெரிவிக்காமல்.. தங்கள் குடும்பத்தினரோடு இருந்திருப்பாரா? அவர்களுக்கும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு இருந்திருக்காதா?
வெளிநாட்டிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் '' சுற்றுலா விசாவில்'' வந்தவர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் நண்பர்கள், தங்கள் பயணத்தின் குறிப்பிட்ட நோக்கத்தைக் கூறித்தான் விசா வாங்கவேண்டும். இதுதான் எல்லா நாடுகளும் பின்பற்றுகிற ஒரு விதி. ஐயமில்லை. ஆனால் , சாதாரணவேளைகளில் .... இதுபோன்ற மாநாடு, விழாக்களில் பங்கேற்ற விரும்புவர்கள்.... ''அந்த அடிப்படையில் விசா பெறவேண்டும் என்றால் நாள்கள் ஆகும் ... பல வினாக்களுக்கு விடைகள் தரவேண்டும்'' என்ற அச்ச அடிப்படையில் ... ''சுற்றுலா விசா பெறுவது எளிது''
என்ற அடிப்படையில். அந்த விசாவையேப் பெற்றுக்கொள்வார்கள். விசாக்கள் பெற்றுத் தரும் முகவர்களும் இவ்வாறே மக்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். இது தவறுதான். ஐயமில்லை. ஆனால் இவ்வாறு தவறான விசாபெற்று வந்தவர்கள் ... நிலைமை தெரிந்தபிறகு ... தங்கள் விவரங்களை அரசுக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் ... அதனால் தங்களது எதிர்காலப் பயணங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி... தங்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளார்கள். அவ்வளவுதான். அவர்களும் திட்டமிட்ட '' தற்கொலைப் படையினர் '' இல்லை! எனவே அவர்களைச் சில ஊடகங்கள் '' பதுங்கி இருப்பவர்கள்'' என்ற அடிப்படையில் செய்திகள் அளிப்பது மிகமிகத் தவறு. அவர்களும் விசா பெற்று வந்தவர்கள்தான். ஆனால் தவறான விசா பெற்று வந்தவர்கள். அதற்கான எதிர்விளைவுகளைத் தற்போது அவர்கள் சந்திக்கிறார்கள். இதுவும் ஒரு எதிர்பாராத விபத்துதான்!
என்னைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட இசுலாமிய நண்பர்களை எதிர்க்கிறார்கள் என்று நினைக்கத் தேவையில்லை. மாறாக, இந்த விபத்தைப் பயன்படுத்திக்கொண்டு... ''மத வெறி'' உடையவர்கள்... இசுலாமிய நண்பர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அவ்வளவுதான்! இசுலாமியத் தமிழர்களும் இந்துத் தமிழர்களும் அடுத்தடுத்து வீடுகளில் வசிப்பவர்கள்தான். ஒன்று சேர்ந்து உழைப்பவர்கள்தான். எனவே இந்த எதிர்பாராத ''விபத்தைப்'' பயன்படுத்திக்கொண்டு.. இசுலாமியத் தமிழர்களின் குடும்பம், தொழில் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் செயல்படுவதை இன உணர்வு உடைய தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது. மனிதர்களாக வாழ்வோம். மனித உணர்வு.. இன உணர்வு.. வர்க்க உணர்வு .. ஆகியவற்றையே aமுன்னிலைப்படுத்தவேண்டும். இவற்றிற்குப் பின்னர்தான் மத நம்பிக்கையுள்ளவர்களும் தங்கள் மத உணர்வை வைக்கவேண்டும்! ''மதவெறி'' கூடவேகூடாது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India