தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம்
மொழி – மனித இனத்திற்கே உரிய ஒரு சிறப்பான ஊடகம். உயிரியல்
அடிப்படையில் மனித மூளை உருவாக்கித் தந்துள்ள தனித்துவம்மிக்க ஒன்று. ஒரு சமூகத்தின்
உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்துப்புலப்படுத்தச் செயல்களுக்காகப் பயன்படுத்துகிற
பலவித ஊடகங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள புற உலகத்தைப் பற்றிய அறிவைப்
பெறுவதற்கும் அதைத் தங்களது மூளையில் சேமித்துவைக்கவும் உதவுகிறது.
மனித மூளையின் அல்லது மனத்தின் ஒரு பகுதியாகவே மொழி விளங்குகிறது. ஒருவரின்
மொழியறிவானது அவரது பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு வெளிப்பாட்டுத்
திறன்களால் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த
நான்கு வெளிப்பாட்டுத் திறன்களுக்கும் மனிதரின் வாய், காது, கண், கை ஆகிய
நான்கு உடல் உறுப்புகளும் பயன்படுகின்றன. இவ்வாறு மூளை உட்பட ஐந்து
உடல் உறுப்புகளை அடிப்படையாகக்கொண்ட மனித மொழிகள் ஒவ்வொன்றும் தன்னைத் தாய்மொழியாகக்கொண்ட
சமூகத்தின் தேவைகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது வளர்த்துக்கொள்கிறது. தனது
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பிற உற்பத்திசக்திகளோடு தானும் ஒரு முக்கிய சக்தியாகப்
பயன்படுகிறது. சமூக வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளில் தன்னையும் வளர்த்துக்கொள்கிறது.
எழுத்து உருவாக்கம்
வரலாற்றில் மனிதமொழிகள் அனைத்தும் பேச்சுமொழிகளாகவே தொடக்கத்தில் இருந்திருக்கமுடியும். பின்னர்
பல்வேறு சமுதாயங்கள் தங்களின் வளர்ச்சிப் படிநிலையில் தங்களது மொழிகளுக்கு வரி வடிவங்களை – எழுத்துகளை – உருவாக்கிக்கொண்டன. அதன்
பயனாக, எழுத்துகளை உருவாக்கிக்கொண்ட சமுதாயங்கள் தங்களது அனுபவங்களை – அறிவுகளை- காலம்
கடந்து, இடம்கடந்து சேமித்துவைக்கும் திறனைப் பெற்றன. பாறைகளிலும்
பானைகளிலும் கற்களிலும் ஓலைகளிலும் எழுத்துகள்வழியே அச்சமுதாயங்களின் அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், இலக்கணம்
ஆகியவை பொறிக்கப்பட்டன. எழுத்துகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அவற்றை எழுதப் பயன்படும்
ஊடகங்களிலும் கருவிகளிலும் வளர்ச்சி ஏற்பட்டன. இன்று
எழுத்துகள் அச்சு வடிவில் ஏறியதோடு மட்டுமல்லாமல், மின்னணுக்
கருவியான கணினியிலும் எழுத்துரு என்றவொரு வடிவத்தில் ஏறிவிட்டன. ஒரு மொழியின்
எழுத்துகளின் வடிவங்களும் தாங்கள் பொறிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஊடகங்களைப்
பொறுத்துத் தொடர்ந்து மாறிவந்துள்ளன.
ஒரு மொழியின் எழுத்து வடிவங்களும் அவை பொறிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற
ஊடகங்களும் மாறியும் வளர்ந்தும் வருவதற்கு அடிப்படை அம்மொழி பேசும் சமுதாயத்தின் வளர்ச்சியே
ஆகும். அச்சமுதாயத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைபொருளேயாகும்.
மொழி வளர்ச்சி
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம்மொழியின் எழுத்துவடிவங்களிலும் அவை எழுதப்படுகிற
ஊடகங்களிலும் ஏற்படுகிற
வளர்ச்சி மட்டுமல்ல; அம்மொழியின் சொற்கள், தொடர்கள்
போன்றவற்றில் ஏற்படுகிற மாற்றங்களும் வளர்ச்சியும் அடங்கும். குறிப்பிட்ட
மொழி பேசும் சமுதாயத்தின் கருத்துப்புலப்படுத்தத் தேவைகளுக்கேற்ப அம்மொழியின் அமைப்பும் – சொற்கள், தொடர்கள்
ஆகியவையும் – மாறுகின்றன அல்லது வளர்ச்சியடைகின்றன. சமுதாயப்
பொருள் உற்பத்தித்தேவை, கலை, இலக்கியத்தேவை , தத்துவ
வளர்ச்சித்தேவை என்று பல வகைத் தேவைகளையொட்டி ஒரு சமுதாயத்தின் மொழி மாற்றமடைகிறது: வளர்ச்சியடைகிறது. புதியபுதிய
சொற்களும் புதியபுதிய தொடரமைப்புகளும் தோன்றி நிலவுகின்றன.
தமிழ்மொழிவளர்ச்சி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி நிலவுகிற தமிழ்மொழியின் சிறப்பு, அதன்
தொன்மை மட்டுமல்ல; தனது வரலாற்றில் எந்த ஒரு காலகட்டத்திலும் தொடர்ச்சி அறுந்துபோகாமல்
இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருவது அதன் தனிச்சிறப்பாகும். தொன்மை, தொடர்ச்சியோடு
தமிழ்மொழியானது தொடர்ந்து தமிழ்ச்சமுதாயத்தின் தேவைகளையொட்டி மாறியும் வளர்ந்தும் வருகின்றது
என்பது அதனுடைய மற்றொரு சிறப்பாகும். தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி
என்ற மூன்று பண்புகளுமே தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளாகும்.
இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய தமிழ்மொழி தனது வரலாற்றில் தமிழ்ச்சமுதாயத்தின்
தேவைகளை – வளர்ச்சிகளை – ஒட்டித் தானும் வளர்ந்து
வந்துள்ளது என்பது உண்மை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப
வளர்ச்சி, தகவல்தொடர்புத்துறையின் வளர்ச்சி ஆகியவை இன்றைய தமிழை அடுத்த
கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சொல்ல ஒரு அவசியத்தை உருவாக்கியுள்ளது.
மொழிவளர்ச்சித்திட்டம்
பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் பல நாடுகளில் மொழிகள் திட்டமிட்டு
வளர்க்கப்படுகின்றன, வளப்படுத்தப்படுகின்றன. மொழி
வளம் அல்லது ஆதாரம் ஒரு நாட்டின் பிற செல்வ ஆதாரங்களுக்கு இணையான ஒரு ஆதாரமாக விளங்குகிறது. மொழியியல்
துறையின் வளர்ச்சியானது மொழிகளைத் திட்டமிட்டு எவ்வாறு வளப்படுத்துவது என்பதுபற்றிப்
பல சிறப்பான கருத்துகளை முன்வைத்துள்ளது. அதனடிப்படையில் புதிதாக
விடுதலையடைந்த நாடுகளில் பாதிக்கப்பட்டிருந்த மொழிகள் எல்லாம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுவருகின்றன.
பிறமொழி ஆதிக்கம்
மனித சமுதாய வரலாற்றில் புராதானப் பொதுவுடமைச் சமுதாய அமைப்பைத் தவிர பின்னால்
தோன்றிய வர்க்கப்பிரிவினைகளின் அடிப்படையிலான சமுதாயங்களின் வளர்ச்சிகளையொட்டி, ஒரு மொழியின்
ஆதிக்கம் பிறமொழிகளின்மீது திணிக்கப்படுகிற ஒரு மொழிச்சூழலும் தோன்றியது. ஆதிக்க
வர்க்கங்கள் தாங்கள் சார்ந்த இனங்களின் மதங்கள் , பண்பாடுகள், மொழிகள்
ஆகியவற்றைத் தங்களுக்கு அடிமைப்பட்ட வர்க்கங்களின் இனங்களின்மீது திணித்தன. இன ஒடுக்குமுறைகளின்
ஒரு பகுதியாக மொழி ஒடுக்குமுறையும், மொழி
ஆதிக்கமும் தோன்றி நிலவின. ஆதிக்க இனங்கள் தங்கள் மொழிகளை உயர்த்திப்பிடிக்கவும் வளர்க்கவும்
முயற்சிக்கின்ற அதேவேளையில் அடிமைப்பட்ட இனங்களின் மொழிகளை அடக்கவும் அழிக்கவும் முயன்றன. சில நூற்றாண்டுகளுக்குமுன்னர்
தமிழ்மீதும் பிராகிருதம்,பாலி , சமசுகிருதம் ஆகிய மொழிகள் ஆதிக்கம் செலுத்த முயன்றன. அதை எதிர்த்து, தமிழகத்தில்
‘சைவக்குரவர்கள்’ போர்க்குரல்
எழுப்பினர். இதற்குச் சமய அடிப்படை காரணமாகயிருந்தபோதும், தமிழின்
உரிமையைத் தக்கவைக்க இது உதவியது.
ஆங்கிலேயர் வருகைக்குப்பின்னர் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இன்றுவரை
அந்த ஆதிக்கம் நீடித்துவருகிறது. பிறமொழிகளின் ஆதிக்கம் மட்டுமல்லாமல், தமிழ்மொழிக்குள்ளேயே
சமசுகிருதம், பாரசீகம் மொழிகளின் ஊடுருவலும் அதிகரித்தன. அதையெதிர்த்தும்
மறைமலையடிகள், தேவநேயப்பாவணர் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தை முன்வைத்தனர். இவற்றோடு
இன்று இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழி / நிர்வாகமொழி (Official Language) என்ற அரசியல்சட்டத்தில் – பிரிவு 343(1) - அளிக்கப்பட்டுள்ள
உரிமையைப் பெற்றுள்ள இந்தியும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. தமிழகத்தில்
இதையெதிர்த்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி, ஆங்கிலத்தைப்
பயன்படுத்தும் உரிமை – தமிழைப் பயன்படுத்தும் உரிமையல்ல - தற்காலிமாகத்
தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் என்பது ஆதிக்க வர்க்கங்கள்
விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திமொழியின்
ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது எதிர்த்துப்போராடுகிற தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப்
பிரித்துப் பார்க்கலாம். ஒரு பிரிவினர் இந்திமொழிக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் – அரசியல்
சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகமொழி உரிமை உட்பட- தமிழுக்கு
அளிக்கப்படவேண்டும்; தமிழ்மொழியே தமிழகத்தில் உயர்கல்விஉட்பட அனைத்துக் கல்விநிலையிலும்
பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதித்துறைகளிலும் தமிழே வழக்காடு
மொழியாக இருக்கவேண்டும் , ஆட்சி நிர்வாகமொழியாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பல
மொழிஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகின்றனர். மற்றொரு
பிரிவினர், தமிழுக்குப்பதிலாக ஆங்கிலமே மேற்கூறிய துறைகளிலெல்லாம் நீடிக்கவேண்டும்
என்று வலியுறுத்துகின்றனர். உலக அளவில் ‘மொழி
ஏகாதிபத்தியமாக’ ஆங்கிலமே தற்போது நீடித்துவருகிறது. அந்த ‘மொழி
ஏகாதிபத்தியத்தின்’ திட்டமிட்ட நடவடிக்கைளின் ஒரு பகுதியே தமிழகத்திலும் ஆங்கிலத்தை
உயர்த்திப்பிடிக்கும் குழுவை உருவாக்குவதாகும். அதில்
தற்போது ‘ஆங்கில மொழி ஏகாதிபத்தியம் ‘ வெற்றிபெற்றதாகவே
அமைந்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தமிழகத்தில் ஒருபுறம் உலக ஏகாதிபத்தியத்தின் ஆங்கில மொழி ஆதிக்கம்; மறுபுறம் அவர்களின் இந்தியத் தரகர்களின் இந்தித்திணிப்பும்
ஆதிக்கமும்! இதற்கிடையில் தமிழ் இனத்தின் தமிழ்மொழி தவித்துக்கொண்டிருக்கிறது. ஆங்கிலமோகம்
தற்போது தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலம்
தெரிந்தவர்களே அறிவு உள்ளவர்கள் என்ற ஒரு மாயை செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் – குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து
சென்று வேலை பார்ப்பதையே தங்களது வாழ்க்கையின் ‘ இலட்சியமாகக்
கொண்ட’ மத்தியதர வர்க்கக் குடும்பத்தினர் , ஆங்கில
அறிவு தங்களது குழந்தைகளுக்கு இல்லையென்றால் , அவர்களுக்கு
எதிர்கால வாழ்க்கையே இல்லை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத்
தவறான , பொய்யான கருத்தியல் திட்டமிட்டு இங்குப் பரப்பப்பட்டுள்ளது. இதன்
விளைவு, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலமொழி, ஆங்கிலப்
பண்பாடு ஆகியவற்றைநோக்கித் திருப்பிக்கொண்டிருக்கின்றனர்.
மொழித்தகுதிக்கான திட்டம் ( Status Planning)
தற்போது தமிழகத்தில் தமிழ்மொழிக்கு அனைத்துவகை உரிமைகளையும் பெறுவதற்காகவும், ஆங்கிலம்
, இந்தி உட்பட பிறமொழிகளின் ஆதிக்கமும் ஊடுருவலும் முழுமையாக
அகற்றப்படுவதற்காகவும் தொடர்ந்து தமிழ் இயக்கங்கள் போராடவேண்டியுள்ளது. தமிழுக்குச்
சட்டரீதியான அனைத்து மொழி ஜனநாயக உரிமைகளையும் வழங்கப்படவேண்டும் என்ற இந்த வேண்டுகோளானது
மொழி வளர்ச்சித்திட்டத்தில் முதல் படியாகும். இந்திய
நடுவண் அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழும் இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும். இதுவே
இந்தியமொழிகளில் மிகத்தொன்மையான, அதேவேளையில் வரலாற்றில்
தொடர்ச்சி அறுந்துவிடாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மொழியாக நீடித்துவருகிற தமிழ்மொழி
பெறவேண்டிய முதல் தகுதி ஆகும். இத்தகுதிக்கான இயக்கத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும்
அனைத்துப் பிரிவு மக்களும், தமிழ்நாடு அரசும் உட்பட இணைந்து போராடவேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசின் நிர்வாகமொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
நடைமுறையில் ஆங்கிலமே நீடிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்று
கல்வித்துறையிலும் அரசுப்பள்ளிகளிலும்கூட ஆங்கிலப் பயிற்றுமொழிக்கொள்கையைப் பின்பற்ற
அண்மையில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. உயர்கல்வியில்
பெயரளவிற்குச் சில பாடங்களுக்குத் தமிழ் பயிற்றுமொழி என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்குரிய ஊக்கம் தமிழில் படித்தவர்களுக்கு அரசு அளிக்காததால், உயர்கல்வியில்
தமிழ் பயிற்றுமொழி என்பது உதட்டளவு வெற்று முழக்கமாகவே இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில்
தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள்
போராடி வருகிறபோதிலும், அதற்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால்
இன்னும் அளிக்கப்படவில்லை.
இவ்வாறு தமிழ்நாடு அரசு நிர்வாகமொழி, பயிற்றுமொழி, நீதிமன்றமொழி, வணிக
மொழி, வழிபாட்டுமொழி என்று அனைத்துத் தளங்களிலும் தமிழுக்குத் தமிழகத்தில்
முழு மதிப்பு அல்லது தகுதி அளிக்கப்பட அனைவரும் தமிழகத்தில் இணைந்து போராடவேண்டும். .
மேற்கூறியவாறு தமிழுக்கு முழு மதிப்பை – அரசியல்
சட்ட அங்கீகாரம் உட்பட – பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மொழித்தகுதித் திட்டத்திற்கான (Status
planning) நடவடிக்கைகளாகும். இந்த
நடவடிக்கைகளின் வெற்றியைப் பொறுத்தே தமிழின் எதிர்கால வளர்ச்சி அமையும். இதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தின் அரசியல்கட்சிகள், அரசாங்கம்
ஆகியவை ஈடுபடுவதோடு மக்களும் ஈடுபடவேண்டும். இந்திமொழி
ஆதிக்கத்தை எதிர்த்த தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்கள் போராட்டங்களே இந்திமொழியை நாடுமுழுவதும் ஒரே ஆட்சிமொழியாக நீடிக்கவழிசெய்யும்
இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையைத் தற்காலிகமாக தடுத்துநிறுத்தி வைத்துள்ளது என்பதைக்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்திமொழியை இந்திய அரசியல்சட்டமானது இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக அங்கீகரித்ததன் பயனாக, இந்தியைத் திட்டமிட்டு வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும்
இந்திய அரசியல்சட்டத்திலேயே (பிரிவு
351) அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கென்று
ஒரு பாராளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திவளர்ச்சியைத்
திட்டமிட்டு வளர்ப்பதற்கான செயல்முறைகளை அது வரையறுத்துக் கொடுக்கும். இதுவரை
அக்குழு எட்டு விவரமான அறிக்கைகளைக் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது. அதனடிப்படையில்
இந்திமொழியைத் திட்டமிட்டு வளர்த்து, இந்திய நடுவண் அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகப்
பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய நடுவண் அரசின்
உள்துறை அமைச்சகத்தின்கீழ் ஆட்சிமொழித்துறை என்ற ஒரு துறை தனியாக அமைக்கப்பட்டு, இந்திமொழியின்
வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதேவேளையில் வழக்கிழந்த சமசுகிருத மொழிக்கும் இந்திய அரசு தனது முழுமையான ஆதரவை
அளித்துவருகிறது. இதற்குத் தெளிவான அரசியல், மதப்
பின்னணி உண்டு. தமிழகத்திலும் ‘மத நம்பிகையின் ‘ அடிப்படையில்
வழிபாட்டுமொழியாகவும், திருமணம், இறுதிச்சடங்கு, புகுமனை புகுதல் போன்ற
பல்வேறு விழாக்கள், சடங்குகளில் உச்சரிக்கப்படுகிற சடங்கு மொழியாகவும் சமசுகிருதமே
ஆதிக்கம் செலுத்திவருகிறது.
ஆனால் ஆட்சிமொழிகளாக அறிவிக்கப்படாத ஏனைய 22 மொழிகளுக்கும் ( தமிழ்
உட்பட) அரசியல் சட்டத்தின் கீழ் எந்தவொரு வளர்ச்சிக்கான நடவடிக்கையும்
கிடையாது. இந்த 22 மொழிகளின் சிறப்புகளையும் இந்திமொழிக்குக் கொண்டு சேர்க்கவேண்டுமென்று
கூறி, அரசியல்சட்டத்தின் 8-ஆவது
பின்னிணைப்பில் இந்த மொழிகள் அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 22 மொழிகளைச் சேர்ந்த அறிஞர்களின் கருத்துகளை இந்திமொழிக்கான
குழு உள்வாங்கி, இந்தியை மேற்கொண்டு வளர்க்கவேண்டுமென்று அரசியல் சட்டமே கூறுகிறது. இதைவிட
இந்திமொழி மொழி ஏகாதிபத்தியம் இந்தியாவில் நீடிக்கிறது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை
மொழி வளர்ச்சி அல்லது மேம்பாட்டுத் திட்டம் ( Corpus Planning):
ஒரு மொழி தனக்குரிய மதிப்பை அல்லது தகுதியைப் பெற்றபிறகு, பெற்ற
தகுதிகளுக்கேற்ப அந்த மொழியைத் திட்டமிட்டு வளர்ப்பது அல்லது மேம்படுத்துவதே மொழி வளர்ச்சி
அல்லது மேம்பாட்டுத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஏற்கப்பட்டவுடன், நீதிமன்றத்தின்
தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான சட்டச் சொற்களஞ்சியம் உட்பட பல்வேறு
மொழி ஆதாரங்களைத் திட்டமிட்டு உருவாக்கவேண்டும். அப்போதுதான்
நடைமுறையில் சிக்கலின்றி, தமிழானது நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்படமுடியும்.
சொல், தொடர், கருத்தாடல் என்று பல முனைகளில் தமிழ் வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான்
தமிழானது முழுமையாக நிர்வாக மொழியாக, பயிற்றுமொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டுமொழியாக, நீதித்துறைமொழியாக
நடைமுறையில் நீடிக்கமுடியும்.
மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெறும் தமிழ் உணர்வு மட்டும் போதாது. தமிழ்மொழியை
அறிவியல் அடிப்படையில் அணுகும் நோக்கும் அதனடிப்படையில் தமிழ்மொழியின் சொற்களஞ்சியம், இலக்கணம் , கலைக்களஞ்சியம் , பயிற்றுநூல்கள், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்
ஆகிய துறைகளுக்குத் தேவையான பாடநூல்கள் போன்றவை உருவாக்கப்படவேண்டும். தமிழ்ச்
சமுதாயம் எதிர்பார்க்கிற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் திறனுடையதாகத் தமிழ் வளர்க்கப்படவேண்டும்.
‘தமிழ்
வாழ்க’ என்ற வெற்று முழக்கங்களால் தமிழ் தனக்குரிய மேம்பாட்டைப்
பெற்றுவிடமுடியாது. தமிழைச் செம்மொழி என்று பெருமையாகக்கூறி, அதைக்
‘காட்சியகத்தில்’ வைத்து
நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. வாழும் மொழியாக, வளரும்
மொழியாகத் தமிழ் நீடிக்கவேண்டும்.
பண்டைக் காலத்தில் அன்றைய தேவைக்கேற்ப இலக்கியமொழியாகவும், தத்துவமொழியாகவும்
இருந்த தமிழ் இன்றைய தேவைகளுக்கேற்ப அறிவியல் மொழியாகவும் கணினிக்கேற்ற மொழியாகவும்
வளர்ந்து நிற்கவேண்டும். அதற்கேற்றவகையில் தமிழின் சொல்வளமும் இலக்கணவளமும் செழுமைப்படுத்தப்படவேண்டும். திட்டமிட்ட
செயல்பாடுகள் இதற்குத் தேவை.
இதற்கான பணிகளை மேற்கொள்வதற்குத் திறன்படைத்த தமிழ்மொழி, மொழியியல்
அறிஞர்களைக்கொண்ட ஒரு உயர்மட்டக்குழு நிறுவப்பட்டு, அதன்
வழிகாட்டுதலில் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ்
எழுத்துச் சீர்திருத்தத்திலிருந்து கலைச்சொல் உருவாக்கம், மொழித்
தரப்படுத்தம் வரை பல பணிகளை மேற்கொள்ளவேண்டும். உலகத்தரத்தில்
இன்றைய தமிழுக்கான ஒரு முழுமையான இலக்கணம் எழுதப்படவேண்டும். தொல்காப்பியமும்
நன்னூலும் தமிழ் வரலாற்றில் மிகச் சிறந்த இலக்கணங்கள். இதில்
மாறுபாடு ஏதும் இல்லை. ஆனால் அவை தோன்றிய காலத்தில் நீடித்த தமிழ்மொழி, இன்று
மாறாமலும் வளர்ச்சியில்லாமலும் இல்லை. மாறியும் வளர்ந்தும் உள்ளது. எனவே
இன்றைய தமிழுக்கான புது இலக்கணங்கள் உருவாக்கப்படவேண்டும். இன்றைய தமிழுக்கான பல வகை அகராதிகள் உருவாக்கப்படவேண்டும். தமிழ்மொழி வளர்ச்சியை வரலாற்றுநோக்கில் ஆய்ந்து ஒரு மிகச்சிறந்த
வரலாற்று இலக்கணம் எழுதவேண்டும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்றுவரை தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்கான
அகராதி உருவாக்கப்படவேண்டும்
.
பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமுன்னர்
உருவாக்கிய தமிழ் லெக்சிகன் விரிவாக்கப்படவேண்டும். கடந்த
சில ஆண்டுகளில் இதற்காகப் பல இலட்சங்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கியும்
எதிர்பார்த்த பலன் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுபோன்று
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
1965-இல் பேராசிரியர் அ. சிதம்பரம்
செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட மிகச்
சிறந்த ஆங்கிலம் – தமிழ் அகராதியின் புதிய பதிப்பு வெளிவரவேண்டும்.
தற்போதைய கணினியுகத்தில் பிற மொழிகளுக்கு இணையாகத் தமிழைக் கணினியில் செயல்படுத்தத்
தேவையான செயல்களை மேற்கொள்ளவேண்டும். பலவகை அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், இலக்கணங்கள்
போன்றவை உலகத் தரத்திற்கு உருவாக்கப்படவேண்டும். இன்றைய
தமிழுக்கான தரவகமொழியியல் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மின்தரவகம் உருவாக்கப்படவேண்டும். தமிழர்களுக்குத்
தேவையான பலவகைத் தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட வழிவகை செய்தல் வேண்டும். இதற்கான
சில பணிகளைத் தற்போது தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்
இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டுவருகிறது.
இந்திமொழிக்கும் சமசுகிருதமொழிக்கும் கணினிமொழியியல் அடிப்படையில் வளர்ச்சிப்
பணிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கிவருகிறது. இந்தி
பேசாத மாநிலங்களிலும் இந்தியை ஆட்சிமொழியாக நிலைநாட்டுவதற்காக, இந்தியை
அடிப்படையாகக்கொண்டு தானியங்கு கணினிமொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கத்திற்குப் பல
கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுவருகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமசுகிருதக் கணினிமொழியியல்
துறை என்ற ஒரு தனித்துறையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்
அதுபோன்ற பணிகளைப் பிறமொழிகளுக்கு இந்திய அரசு மேற்கொள்வதில்லை.
தமிழக அரசானது தமிழ் வளர்ச்சிக்காக ஒரு துறையை 30 ஆண்டுகளுக்கு
முன்பே உருவாக்கி, அதற்கு ஒரு இந்திய அரசுப்பணிச் செயலரையும் நியமித்துவருகிறது. அவரது
நிர்வாகத்தின்கீழ், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் தமிழ் முழுமையாக நிர்வாகமொழியாகப்
பின்பற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘தமிழ்
வளர்ச்சி இயக்ககம் ‘ என்ற ஒரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப்
பணி, அரசு அலுவலகங்களில் கோப்புகள் தமிழில் உருவாக்கப்படுகிறதா, கையொப்பம்
தமிழில் இடப்படுகிறதா என்பதையெல்லாம் கண்காணிப்பதேயாகும். அத்தோடு, நிர்வாகத்திற்குத்
தேவையான ஆட்சிச்சொல் அகராதியை உருவாக்குவதாகும். இந்தப்
பணிகூட பல ஆண்டுகளாகத் தோய்வடைந்துதான் இருக்கிறது. மேலும்
தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், தமிழ் நூல்களுக்கு விருது வழங்குதல், தமிழறிஞர்களுக்கு
ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகளையே செய்துவருகின்றது. பிற மாநிலங்களில்
பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி, இலக்கியங்களைக்
கற்பிப்பதற்கான பேராசிரியர்களை உருவாக்கவும் நிதி ஒதுக்குகிறது. ஆனால்
நாம் முன்னர் குறிப்பிட்ட தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டமிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்வதில்லை. தேவநேயப்
பாவாணரின் வழிகாட்டுதலில் நிறுவப்பட்ட செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் திட்டத்திற்கான இயக்ககம்
ஓரளவு தனது பணியை நிறைவேற்றியுள்ளது. அதுவும் அடுத்த கட்டத்திற்குச்
செல்லவேண்டும்.
இந்திய நடுவண் அரசானது தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதி அளிக்கவேண்டுமென்ற தமிழ்மக்களின்
வேண்டுகோளின் அடிப்படையில் தமிழுக்குத் தற்போது செம்மொழித் தகுதியை ஒரு அரசாணையின்மூலம்
அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ‘செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம்’ ஒன்று சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த
நிறுவனத்தின்வாயிலாக கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியம், இலக்கணம்
ஆகியவற்றைப்பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆண்டுதோறும் சில கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. தமிழறிஞர்கள், ஆய்வாளர்களுக்குச்
சில விருதுகளையும் வழங்கிவருகிறது. இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி
ஆக்கப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்குப் பதிலாக , தமிழர்களை ‘அமைதிப்படுத்தவே’ ‘ திசைதிருப்பவே’ இத்திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கான
எந்தவொரு குறிப்பிட்ட சிறப்பான பணியையும் மேற்கொள்ள அந்த நிறுவனத்தால் இயலவில்லை என்பதே
உண்மை. இந்நிலையை மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக, நீதித்துறைமொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டுமொழியாக, ஊடகமொழியாக
முழுமையாகத் தமிழகத்தில் நீடிப்பதற்குத் தேவையான அனைத்துவகை மொழிவளங்களையும் உருவாக்குவதே
மொழிவளர்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால்
அந்தத் திசையில் தமிழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்பது
வருந்தத்தக்கது.
உலக அளவில் தமிழ் பரப்பலுக்கான திட்டம் ( Acquisition Planning) :
ஒரு மொழியின் சிறப்பு, அம்மொழி பேசும் நாட்டைத் தாண்டி, உலக அளவில்
கொண்டுசெல்லப்படவேண்டும். ஆனால் அதன் நோக்கம், பிறமொழிகளின்மீது
ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக்கூடாது. பிறமொழிகளின்மீது ஆதிக்கம்
செலுத்த முயலும் . ‘மொழி ஏகாதிபத்திய’ நடவடிக்கையாக இருக்கக்கூடாது. இதில்
நாம் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால், ஆங்கிலத்தை
அவ்வாறு கொண்டுசெல்லப் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ என்ற
ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் கிளைகள் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ளன. இந்த
நிறுவனத்தின் முக்கிய நோக்கம், தனது முந்தைய காலனி நாடுகளில் ஆங்கிலத்தைத் தொடர்ந்து கல்வி, பண்பாடு, தொழில்
ஆகியவற்றில் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தேவையான
பணிகளை மேற்கொள்வதாகும். அதற்கான பல திட்டங்களை இந்நிறுவனம் உலகெங்கும் செயல்படுத்திவருகிறது. இதுபோன்ற
ஒரு நிறுவனத்தை – ‘மாக்ஸ்முல்லர் கழகம் / நிறுவனம் ஒன்றை – ஜெர்மனி
அரசு உலகெங்கும் நிறுவியுள்ளது. பிரெஞ்சுமொழியை இதுபோன்று உலகெங்கும் பரப்ப ‘அலையன்ஸ்
பிரான்சிஸ்’ என்ற ஒரு நிறுவனத்தைப் பிரஞ்சு அரசாங்கம் நிறுவியுள்ளது. இவை போல
அல்லாமல், தமிழின் சிறப்பை உலகெங்கும் எடுத்துச் சொல்வதற்கும் அங்குள்ள
தமிழர்களுக்கு மொழிசார்ந்த பணிகளில் உதவிசெய்வதற்கும் செயல்படுகிற நிறுவனமாகத் தமிழ்மொழி
நிறுவனம் பல நாடுகளில் நிறுவப்படவேண்டும்.
இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழியாகிய இந்திமொழிக்கு இதுபோன்ற நிறுவனம் பல வெளிநாடுகளில்
இந்தியத் தூதரகங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால்
தமிழுக்கோ அல்லது அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழியாக அங்கீகாரம் பெறாத மற்ற மாநில மொழிகளுக்கோ வெளிநாடுகளில் இந்தியத் தூதரகங்களில்
இது போன்ற அமைப்பு கிடையாது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை, மொரிஷியஸ்
போன்ற நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்களைக்கூட இந்திய நடுவண்
அரசுமூலம்தான் தமிழ்நாடு அரசு அளிக்கமுடியும்.
எனவேதான் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக்குள்ளேயே ‘உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம்’, ‘உலகத் தமிழ்ச்சங்கம்’ போன்ற
நிறுவனங்களை நிறுவி, சில பணிகளை மேற்கொள்ள முயல்கிறது. ஆனால்
அந்த நிறுவனங்களும் இந்தப் பணிகளைக் குறிப்பிடத்தக்கவகையில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட மூன்று வகை மொழிவளர்ச்சித்திட்டங்களோடு – மொழித்தகுதிக்கான
திட்டம் ( Status Planning), மொழி மேம்பாட்டுக்கான திட்டம் ( Corpus Planning) , மொழி பரப்பலுக்கான திட்டம் ( Acquisition Planning) ஆகிய மூன்றோடு – ஒரு மொழியின் மதிப்பைக்
கூட்டவும் அதன் சிறப்பை வெளிப்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொள்வதைச் ‘சிறப்பு/ மதிப்பு
கூட்டும் திட்டம்’ ( Prestige
Planning) என்று மொழிவளர்ச்சித்திட்டத்
துறையினர் அழைக்கின்றனர்.
மேற்கூறிய நான்குவகையான மொழிவளர்ச்சித் திட்டங்களையும் தமிழ்மொழிக்குச் செயல்படுத்தவேண்டும். அதுவே
தமிழ்மொழியை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
ஆனால் தமிழகத்தில் மேற்கூறியவகையில் திட்டமிட்டுத் தமிழ்வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்
வளர்ச்சிக்கான ஒரு தெளிவான மொழிக்கொள்கையை உருவாக்கத் தமிழ்மக்கள், அரசியல்
கட்சிகள், அரசுகள் இணைந்து முனையவேண்டும். அதற்கு
அடுத்த கட்டமாக, சரியான
முறையில் – அறிவியல் அடிப்படையில் – தமிழ்மொழி
வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கவும் அதற்குரிய பணிகளைக் கண்காணிக்கவும் தமிழ்மொழி, மொழியியல்
ஆய்வாளர்களைக்கொண்ட சுயேச்சையான ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு நிறுவவேண்டும். அதன்கீழ்
மேற்கூறிய பணிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படவேண்டும். மொழிக்கொள்கை, மொழிவளர்ச்சி
என்று தெளிவாக இரண்டாகப் பிரித்து, அவரவர்கள் செய்யவேண்டிய பணிகளை முறையாக மேற்கொள்ளவேண்டும். மொழிவளர்ச்சிக்கான
குழுவில் தமிழ்மொழி, மொழியியலாளர்கள் போன்ற துறை வல்லுநர்கள் மட்டுமே இருத்தல்
வேண்டும்.
திட்டமிட்ட வளர்ச்சி தேவை
எனவே தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் கொண்ட தமிழ்மொழியானது 21 ஆம் நூற்றாண்டில்
பிறமொழிகளுக்கு இணையாக உலகச்சிறப்பு பெற்ற ஒரு மொழியாகத் திகழ்வதற்கு ஒரு தெளிவான மொழிவளர்ச்சித்திட்டம்
தேவை. செயல்பாட்டுத் தளங்களில் – பயன்பாட்டுத்
தளங்களில் – தமிழ்மொழியின் சிறப்பையும் மதிப்பையும் வளர்த்தெடுக்கத் தேவையான
தமிழ்மொழி வளர்ச்சித்திட்டம் உருவாக்கப்படவேண்டும். தமிழ்மொழிக்கான
இந்த மொழிக்கொள்கையை உருவாக்குவதிலும் வெற்றிபெறுவதிலும் அனைத்து மக்களும் அரசியல்
கட்சிகளும் அரசாங்கமும் பங்கேற்கவேண்டும்.
தமிழ்மொழிக்கான ஒரு தெளிவான மொழிக்கொள்கை உருவாக்கப்பட்டபிறகு, அக்கொள்கையைச்
செயல்படுத்தத் தேவையான தமிழ்மொழி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளத் தமிழ்மொழி, மொழியியல்
துறைகளைச் சேர்ந்த அறிஞர்களைக்கொண்ட ஒரு வல்லுநர் குழு உருவாக்கப்படுதல் வேண்டும். இந்தக்
குழுவின் வழிகாட்டுதலில் தமிழ்மொழி வளர்ச்சிக்கான அனைத்துப் பணிகளும் – எழுத்துச்
சீர்திருத்தத்திலிருந்து அகராதி உருவாக்கம், இலக்கணம்
உருவாக்கம், தரப்படுத்தம் ஆகியவற்றிற்கான பணிகள்வரை – மேற்கொள்ளப்படுதல்
வேண்டும். வெற்று முழக்கங்களைவிடத் திட்டமிட்ட, தெளிவான
பாதையே தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்று தேவை. 21 ஆம் நூற்றாண்டில் உலகளவில் சிறப்புவாய்ந்த ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கவேண்டும். இதற்கான
பணிகளை அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.
‘தமிழ்
வாழ்க, தமிழ் வளர்க’ என்ற முழக்கம் வெறும் வாய்
முழக்கமாகமட்டும் இல்லாமல், நடைமுறையில் தமிழ்மொழியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்
செல்லும் முழக்கமாக அமையவேண்டும். அறிவியல் அடிப்படையில் மொழி ஆய்வை மேற்கொள்ளவேண்டும். தமிழுக்கான
மொழிக்கொள்கையைத் தெளிவாக வரையறுத்து, அதனடிப்படையில் தமிழ்மொழிவளர்ச்சிப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்றமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி
போன்ற பல்வேறு மொழித்தகுதிகளைத் தமிழ் பெற்று, அதற்கேற்ற
வகையில் தமிழானது அறிவியல்மொழியாகவும், கணினிமொழியாகவும் வளர்ந்து
நிற்கவேண்டும.