ஞாயிறு, 27 நவம்பர், 2016

உயிரும் உயிரும் சந்தித்தால்?(2)

உயிரும் உயிரும் சந்தித்தால்?(2)
-----------------------------------------------------
முந்தைய உரையில் நிலைமொழி இறுதியில் வல்லின மெய்கள் தனித்து நிற்காது.... எனவே அவற்றிற்கு உதவி செய்ய, குற்றியலுகரம் என்ற ஒரு உதடு குவியாத உயிரொலி வந்து நிற்கிறது என்று பார்த்தோம் ( பாக்கு, கன்று, சார்பு, அழகு, ஏடு ) ஆனால் அவ்வாறு குற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொற்களையடுத்து, உயிரொலிகளில் தொடங்கும் நிலைமொழிகள் வந்தால் மேற்கூறிய நிலைமொழிகளின் குற்றியலுகரம் மறைந்துவிடும் என்றும் பார்த்தோம் ( பட்டு+ஆடை = பட்டாடை, சங்கு +ஒலி = சங்கொலி).

ஆனால் இன்றைய பேச்சுத்தமிழில் நிலைமொழியின் இறுதியில் வல்லினங்கள் மட்டுமல்ல, மெல்லினங்கள், இடையினங்கள்கூட வருவதில்லை என்றும் பார்த்தோம் ( கண்- கண்ணு, தேர் -தேரு, தோல்-தோலு, தேள்-தேளு). அவ்வாறு வரும்போது, உகரம் அல்லது இகரம் இணைந்துகொள்கின்றன. இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் எழுத்துத்தமிழில்கூட இடம்பெறலாம். இப்போது அதுபற்றிய விவாதம் வேண்டாம்.
நிலைமொழி இறுதியில் வல்லினங்களோடு சேருகிற குற்றியலுகரம், வருமொழியில் உயிர்கள் வரும்போது மறைகிறது என்ற விதி, மெல்லினங்கள், இடையினங்களுக்கும் பொருந்துமா?
''தொலைவு'' என்ற சொல்லின் இறுதியில் இடையின வகரத்தோடு உகரம் சேர்ந்து ''வு'' என்று அமைந்துள்ளது. வகரம் வல்லினம் இல்லை. ஆகவே இலக்கணவிதிப்படி, ''வு'' -வில் உள்ள உகரமானது குற்றியலுகரம் இல்லை. எனவே இதையடுத்து வருமொழியில் உயிரில் தொடங்கும் ஏதாவது சொல் வந்தால், இரண்டுக்குமிடையில் ''வ்'' உடம்படுமெய் வரவேண்டும். அதாவது தொலைவு+ இல் = தொலைவுவில் என்று அமையவேண்டும். ஆனால் அவ்வாறு வராமல், ''தொலைவில்'' என்றுதான் வருகிறது. அதாவது ''வு''-வில் உள்ள உகரம் மறைந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? ஒன்று, மறைந்த இந்த உகரம் குற்றியலுகரமாக இருக்கவேண்டும். அல்லது முற்றியலுகரமாக இருந்தாலும், சில இடங்களில் அது மறையும் என்று கூறலாம்.
''அது+ஐ = அதை / அதனை '' ... இங்கு ''அது''வில் உள்ள ''து'' முற்றியலுகரம்தான். ஏனென்றால் அது தனிக்குறிலையடுத்து வருகிறது. அதனால் ''அது+வ+ஐ = அதுவை '' என்று வரவேண்டும். ஆனால் அவ்வாறு வரவில்லை.
சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கிறார் ..... 'இதோ வந்துவிட்டார் '' என்ற தொடரையும் '' இதுவோ அதுவோ தெரியவில்லை'' என்ற தொடரையும் பார்க்கும்போது, முதல்தொடரில் ''ஓ'' என்பது ஒரு இடைச்சொல். இரண்டாவது தொடரில் ''ஓ'' என்பது வினா எழுத்து. முதல் தொடரில் ''இது'' என்பதில் உள்ள உகரமானது, குற்றியலுகர விதிக்கு உட்பட்டு மறைந்துவிடுகிறது. இரண்டாவது தொடரில் ''இது'' என்பதில் உள்ள உகரமானது முற்றியலுகரத்திற்கான விதிக்கு உட்பட்டு உடம்படுமெய் எடுக்கிறது!
அதுபோல ''அது+ஐ= அதை'' என்று (இறுதி உகரம் மறைந்து) அமையும்போது, ''அது+உம்= அதுவும்'' என்று ( இறுதி உகரம் மறையாமல் இடையில் உடம்படுமெய் தோன்றி) அமைகிறது.
எனவே, இங்கு நாம் கவனிக்கவேண்டியது.... பொருள்தெளிவுக்கு முதலிடமா? அல்லது அடிப்படை சந்தி விதிகளுக்கா? இரண்டும் முக்கியமானவைதான். ஆனால் இரண்டில் முதலாவதே மிக முக்கியமானது. இரண்டையுமே பின்பற்றினால் மிக நல்லது. அதற்கு வழியில்லாத நேரத்தில்.... பொருள் தெளிவே முக்கியம்! இதைத்தான் தற்கால மொழியியலில் Optimality Theory என்ற கோட்பாடு முன்வைக்கிறது! ஒரு இடத்தில் இரண்டு விதிகளின் தேவைகள் உள்ளன என்றால், ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்படும்போது, , எதைத் தக்கவைப்பது, எதைக் கைவிடுவது? அதற்கு இலக்கணவிதிகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தவேண்டும் ( Ranking). இரண்டு விதிகளில் எது உயர்ந்த நிலையில் உள்ளதோ (which is more optimal) அதற்காக அதற்குக் கீழ்நிலையில் உள்ள விதியைக் கைவிடலாம்! இலக்கண ஆசிரியர்கள் ஆங்காங்கே ''சிலவற்றிற்கு விதிவிலக்குகள் உண்டு.... அதனால் தவறு இல்லை'' என்று கூறுவதற்கு இதுதான் காரணம்!
''கோயில் - கோவில்'' , ''வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்'' ''கருத்துகள் - கருத்துக்கள்'' ''சங்க காலம் - சங்கக் காலம்'' போன்றவற்றைப்பற்றிய முரண்பட்ட கருத்துகள் எழும்போது, இதைக் கவனத்தில் கொள்ளலாம். மக்களது நடைமுறை மொழி வழக்கிற்குத்தான் இலக்கணம். இலக்கணத்திற்காக மொழி இல்லை. இவ்வாறு கூறுவதால் நம் விருப்பப்படி மொழியைக் கையாளலாம் என்று நினைத்துவிடக்கூடாது. மேற்கூறியவை போன்று சில இடங்களில் சிக்கல்கள் ஏற்படும்போதுமட்டுமே இதுபோன்ற முடிவுகளுக்கு வரவேண்டும். அதனால்தான் இலக்கண ஆசிரியர்களும் ''மரபு'' ''என்மனார் புலவர்'' என்றெல்லாம் கூறிச்சென்றுள்ளார்கள்!

''பார்''  ''கேள்'' ''வாழ்'' ''காண்'' என்ற வினையடிகள் முன்னிலைப் பன்மையில் ''பாருங்கள்'' ''கேளுங்கள்'' ''வாழுங்கள்'' ''காணுங்கள்'' என்று ஒலித்துணை உகரம் எடுத்து வருவதையும் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார்.

''நிலவு+ஒளி = நிலவொளி'' ''கனவு+உலகம் = கனவுலகம்'' ஆகியவற்றில் ''நிலைமொழி ஈறாக (வ்+உ)  ''உ''  என்று உயிர் வந்துள்ளது. முதல் விதிப்படி இந்த உகரத்துக்குப்பிறகு ''ய்'' என்ற உடம்படுமெய் வரவேண்டும். ஆனால் ''வு'' என முடியும் இந்த ஈறுகளில் , ''வ்+உ'' என்று ''வ்'' சேர்ந்திருப்பதால், இதற்கு மேலும் இன்னொரு வ் வந்து அதில் உயிர் கலந்தால் நிலவுவொளி என்றோ , கனவுவுலகம் என்றோ ஆகும் . இதனால் , அவற்றிலுள்ள ''வுவொ'' அல்லது ''வுவு'' என்ற எழுத்துகளை அடுத்தடுத்து ஒலிப்பது கடினமாகும். எனவேதான் , ''வு'' ஈற்றுக்குப்பிறகு உடம்படுமெய் தோன்றாமல், அதிலுள்ள உகரத்தைத் தவிர்த்து, எஞ்சியுள்ள ''வ்'' என்ற மெய்யில் வருமுயிர் சேர்ந்து ஒலிப்பை எளிதாக்கியது. இஃது ஒலிப்பு எளிமை கருதிய புணர்ச்சி முறையாகும்''. மலேசிய தமிழறிஞர் செ. சீனி நைனா முகம்மது. ஆகவே ஒலிப்பு எளிமையா , புணர்ச்சி விதியா .... இரண்டில் ஒலிப்பு எளிமைக்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

 ஆகவே சந்தியில் .... நான்கு அடிப்படைகளை - பொருள் தெளிவு, ஒலிப்பு எளிமை, மரபு அல்லது வழக்கியல், புணர்ச்சிவிதி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளலாம். இவற்றை எவ்வாறு வரிசைப்படுத்துவது என்பதைக் கருதிப் பாருங்கள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India