சனி, 26 நவம்பர், 2016

உயிரும் உயிரும் சந்தித்தால்?

உயிரும் உயிரும் சந்தித்தால்?
-----------------------------------------------
முன்பு நான் பதிவுசெய்த ஒரு உரையில் உடம்படுமெய் என்பதுபற்றிக் கூறியிருந்தேன். ''தெரு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற வினாவுக்கான விகுதியோடு இணையும்போது ,'' தெருவா'' என்று மாறுகிறது என்றும் ''இலை'' என்று ஐகாரத்தில் முடியும் சொல்லானது அதே ''ஆ'' என்ற சொல்லோடு இணையும்போது ''இலையா'' என்றும் மாறுகிறது என்றும் கூறியிருந்தேன். இவ்வாறு உயிரும் உயிரும் இசையும்போது ய்,வ் என்ற மெய்யொலிகள் இடையில் வந்து உதவுகின்றன என்று பார்த்தோம்.

ஆனால் ''சிறகு'' என்று உகரத்தில் முடிகிற சொல்லானது ''ஆ'' என்ற முன்பு கூறிய வினாவுக்கான விகுதியோடு இணையும்போது .... ''சிறகுவா'' என்று மாறவில்லை. அதாவது இறுதி உகரமும் அடுத்துவருகிற ஆகாரமும் இணையும்போது வ் என்ற உடம்படுமெய் வரவில்லை. மாறாக, ''சிறகு'' என்ற சொல்லில் உள்ள உகரம் மறைந்து, ''சிறகா'' என்று ஆ -வுடன் இணைந்து அமைகிறது. காடு + ஆ = காடா என்றும் கன்று + ஆ = கன்றா என்றும் அமைகின்றன. அதாவது நிலைமொழியின் இறுதி உகரம் மறைந்துவிடுகிறது. ஆனால் தெரு + ஆ என்பதில் மட்டும் நிலைமொழியின் இறுதி உகரம் ஏன் மறையவில்லை? அதற்குப்பதிலாக ஏன் உடம்படுமெய் வருகிறது? அப்படியென்றால் இந்த இரண்டு உகரமும் ஒன்று இல்லையா? வேறு வேறா?
ஆமாம் , வேறு வேறாகத்தான் தமிழில் அவை பயின்றுவருகின்றன. அவற்றை உச்சரிப்பதிலும் வேறுபாட்டைக் காணலாம். ''தெரு'' என்று சொல்லில் இறுதி உகரத்தை உச்சரிக்கும்போது உதடு முழுமையாகக் குவியும். ஆனால் ''சிறகு'' என்ற சொல்லில் இறுதி உகரத்தை உச்சரிக்கும்போது உதடு குவியாது. இதுவே அடிப்படை வேறுபாடு. அவ்வாறு உதட்டைக் குவித்து உகரத்தை உச்சரிக்கும்போது அதற்கு ஆகிற நேரமும் உதட்டைக் குவிக்காமல் உகரத்தை உச்சரிக்கிற நேரமும் கூட மாறுபட்டவைதான். இதைத்தான் இலக்கண ஆசிரியர்கள் உதட்டைக் குவித்து உச்சரிக்கும் உகரத்திற்கு ஒரு மாத்திரை அளவு நேரம் என்றும் குவிக்காமல் உச்சரிக்கிற உகரத்திற்கு அரை மாத்திரை நேரம் என்று கூறுகிறார்கள்.
உதடு குவித்து உச்சரிக்கிற உகரத்தை முற்றுகரம் என்றும் உதடு குவிக்காமல் உச்சரிக்கிற உகரத்தைக் குற்றியலுகரம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்..
வருமொழியில் ஒரு உயிர் வரும்போது, நிலைமொழியில் உள்ள குற்றியலுகரம் ஏன் மறைகிறது? மறைவதால அந்த நிலைமொழின் ஒரு உறுப்பு - ஒரு எழுத்து - இல்லாமல் போய்விடுகிறதே? அவ்வாறு போய்விடுவதால், அந்தச் சொல்லின் பொருள் மாறிவிடாதா? அதற்குப் பாதிப்பு ஏற்படாதா? இதற்கு விடை காணவேண்டும். உண்மையில் இந்த உகரம் அந்தச் சொல்லின் உறுப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தற்காலிகமாக, , ஏதோ ஒரு காரணத்திற்காக அது சேர்ந்துவந்துள்ளது. அந்தச் சொல்லை உச்சரிப்பதற்கு உதவிசெய்வதற்காக வந்துள்ளது என்று சொல்லலாமா? இங்கு இந்த உகரத்தின் மற்றொரு முக்கியமான பண்பையும் கணக்கில் கொள்ளவேண்டும். சொல் இறுதியில் வல்லின எழுத்துகளுடன்மட்டும்தான் ( க், ச், ட்,த்,ப்,ற் ) இந்த உகரம் வருகிறது ( இன்றைய எழுத்துத்தமிழில் பிற மெய்களுக்கும் இந்தப் பண்பு ஏறியிருக்கிறது) . இதைப்பற்றி ஒரு கருத்தைக் கூறுவதற்குமுன் , இன்றைய பேச்சுத்தமிழின் ஒரு பண்பைக் காண்பது சரியாக இருக்கும்.
வாய் --> வாயி ; தேர் --> தேரு ; கால் --> காலு ; தேள் --> தேளு ; கூழ் --> கூழு என்றும் பெரும்பான்மையோர் பேச்சில் மாறுகின்றன. இவை எல்லாவற்றிலும் முதல் எழுத்து நெடில்களாக இருக்கின்றன. எய் --> எய்யி ; கல் --> கல்லு ; எள் --> எள்ளு (ர், ழ் ஆகியவை சொல்முதலில் குறிலையடுத்து வராது, வ் இறுதிச் சொல் இன்றைய பேச்சுத்தமிழில் இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது) இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். சொல் இறுதியில் பேச்சுத்தமிழில் இன்று எந்தவொரு இடையின மெய்களும் வருவது கிடையாது. அதுபோல, மெல்லின எழுத்துகளான ண்,ன்,ம் ஆகியவையும் சொல் இறுதியில் வருவது கிடையாது. ஆண் --> ஆணு; பேன் --> பேனு; கண்--> கண்ணு; அல்லது இவை மறைந்து, அவற்றின் மூக்கொலித்தன்மையானது முந்தைய உயிரெழுத்தில் கலந்துவிடும். அவன் --> அவ(ன்) ; மரம் --> மர(ம்) . அதாவது இன்றைய பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டிலும் க்,ச்,ட்,த்,ப்,ற் என்று சொற்கள் முடிவதில்லை. ஆனால் மெல்லினம் (ண்,ன்,ம்) , இடையினம் (ய்,ர்,ல்,ள்,ழ் ) எழுத்துத்தமிழில் சொல் இறுதியில் வரும். ஆனால் பேச்சுத்தமிழில் மெல்லினம், இடையினங்கள்கூட இன்று வருவது இல்லை! .
இதுபோன்றே ஒரு காலத்தில் வல்லின மெய்கள் (க்,ச்,ட்.த்,ப்,ற்) சொல் இறுதியில் வந்திருக்கலாம். பின்னர் இன்றை ய பேச்சுத்தமிழில் மெல்லினம் இடையின இறுதிச் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்கள்போல, சொல்லிறுதி வல்லினங்களை வெளியிடுவதற்கு - உதவுவதற்கு- உதடு குவியாத உகரம் வந்திருக்கலாம்.அதாவது வல்லின மெய் ஒற்றுகளை எளிதாக வெளிப்படுத்த உதவுவதற்காக இந்த உதடு குவியாத உகரம் வந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சொற்களையடுத்து, உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் வந்தால், முன்னர் உதவிக்கு வந்த உதடுகுவியாத உகரம் தேவையில்லை அல்லவா? உதவிக்கு வந்த உகரம்தானே! அடுத்த சொல்லின் தொடக்கத்தில் மற்றொரு உயிர் வந்தவுடன் - இந்த உதடு குவியாத உகரத்தின் உதவி தேவைப்படவில்லை . எனவே மறைந்துவிடுகிறது! எனவேதான் நன்னூல் என்ற இலக்கணநூலில் '' உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்'' என்று கூறப்பட்டுள்ளது. பேரா. மு.வ. அவர்களும் இதை ''ஒலித்துணை உகரம்'' என்று கூறியிருப்பதாகச் சிங்கப்பூர் சித்தார்த்தன் கூறுகிறார். பேரா. தெ.பொ.மீ. அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேற்கூறியது ஒரு கருதுகோள்தான்!
நாளை மீண்டும் தொடர்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India