வியாழன், 17 நவம்பர், 2016

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!

தமிழ் மொழியசை விதிகளும் சில புணர்ச்சி வகைகளும்!
-----------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்ச் சொற்களின் அமைப்பை மொழியசை அடிப்படையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில செய்திகள்!

தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வரும்போது, ஒரு கட்டுப்பாடு உள்ளது. முதல் அசையைத் தவிர ஏனைய அசைகள் எல்லாம், தவறாமல் அசைத் தொடக்கத்தைப் - ஒரு மெய் எழுத்தைப் - பெற்றிருக்கவேண்டும்! அவ்வாறு மெய் வராத அசைகள் ஏதாவது இருந்தால், அந்த இடத்தில் ஒரு மெய் சேர்க்கப்படும்.
(1) தெரு + ஆ = தெருஆ* = த்எ - ர்உ - ஆ
இந்தச் சொல்லில் மூன்றாவது அசையில் உச்சியாகிய உயிர் மட்டுமே உள்ளது. இது தமிழ் மொழியசை அமைப்பு விதிக்கு எதிரானது. எனவே அங்கு ஒரு மெய் எழுத்தைச் சேர்க்கிறோம். இங்கு ''வ்'' என்ற மெய் சேர்கிறது.
தெருவா = த்எ - ர்உ - வ்ஆ
அடுத்து ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
(2) இலை + ஆ = இலைஆ = இ - ல்ஐ - ஆ
இங்கு முதல் அசையில் அசைத் தொடக்கம் இல்லை. ஆனால் இது மொழியசை விதிக்கு எதிரானது இல்லை! ஆனால் மூன்றாவது அசையில் அசைத் தொடக்கம் - மெய் - இல்லை. அதைச் சரிசெய்ய , ''ய்'' மெய் சேர்க்கப்படுகிறது.
இலையா = இ - ல்ஐ - ய்ஆ
இதுதான் உடம்படுமெய் என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இவ்வாறு முதல் அசையைத் தவிர ஏனைய அசைகளில் அசைத் தொடக்கமாக மெய் வராமல் இருந்தால், அதை முறைப்படுத்த ''ய்'' ''வ்'' என்ற மெய்கள் உதவுகின்றன!
(3) அது + ஆ : இங்கு நிலைமொழியின் இறுதியில் முற்றியலகரம் வருகிறது. எனவே இச்சொல் ''ஆ'' என்ற வருமொழி விகுதியோடு இணையும்போது, முற்றியலுகரம் நீங்காது ( ஆனால் குற்றியலுகரம் நீங்கும் .. ''விட்டு ஓடும்'')! எனவே ''வ்'' உடம்படுமெய் உதவுகிறது.
அதுவா - அ -த்உ - வ்ஆ
(4) கல் + ஐ : இது கல்ஐ என்று அமைந்தால் ( க்அல் - ஐ) இரண்டாவது அசையில் தொடக்கம் இல்லை. இது விதி மீறலாகும். எனவே ''ல்'' என்ற மெய் ஒற்று இரட்டித்து, ''கல்லை'' என்று அமைகிறது!
கல்+ ஐ = கல்லை - க்அ ல் - ல்ஐ
எனவே உடம்படுமெய்யின் தேவைபற்றிய விதியே இதிலும் செயல்டுகிறது.
(5) அயல்மொழிச்சொல் தமிழில் ஊடுருவும்போதும் அசைவிதி மீறப்படாது. தமிழில் முதல் அசையில் (மெய்) குறில் அமைந்தால், அதையடுத்து ''ர்'' ''ழ்'' வராது.
''அர்த்தம்'' = அர்த் -த்அம் .
இங்கு முதலசையில் தொடக்கம் இல்லை. ஆனால் உச்சியானது குறில் அகரம். அதற்கு அடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்ற மெய் ஒற்றுகள் வருகின்றன. இது தமிழ் அசைவிதிக்கு எதிரானது. எனவே 'ர்'' உடன் உகரத்தைச் சேர்க்கிறோம். இதனால்,
அ -ர்உத் -த்அம் என்று அசையமைப்பு மாறுகிறது. ''கர்த்தா'' என்பது ''கருத்தா' என்று மாறும்.
(6) ''ஓராயிரம் '': '' ஒரு ஆயிரம்'' என்ற தொடர், ஒரு சொல்நீர்மையாக மாறும்போது, ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுகிறது.
ஒருஆயிரம் ----- > ஒர்ஆயிரம் (வருமொழியில் உயிர் ''ஆ'' வரும்போது, நிலைமொழி இறுதியிலுள்ள உயிர் ''உ'' மறைகிறது.)
ஒர் -ஆ -ய்இ -ர்அம் ...... இங்கு முதலசையில் (ஒ) குறிலையடுத்து ''ர்'' மெய் ஒற்று வருகிறது இது அசைவிதி மீறலாகும். ஆனால் நெடிலையடுத்து ''ர்'' ஒற்று வரலாம். எனவே ''ஓராயிரம் '' என்ற மாறுகிறது.
ஓர் - ஆ -ய்இ-ர்அம் ...... இப்போது அசைவிதி சரியாகவிட்டது. ''ஓராயிரம் '' கிடைத்துவிட்டது. ஒரு சொல்நீர்மையாக மாறும்போது ஏற்பட்ட மாற்றம் இது! ஆனால் பின்னர் சிலர் அதைப் பிரித்து எழுதும்போது, ''ஓர் ஆயிரம் '' என்று எழுதியிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் backformation என்று அழைப்பார்கள்.ஆனால் சிலர் கூறும் கருத்து .. '' அடுத்த சொல் உயிரில் தொடங்கினால் முதல்சொல்லில் ''ஒ'' குறில் வரக்கூடாது. நெடிலே - ''ஓ'' தான் வரவேண்டும்'' . ஆனால் அசையமைப்பு அடிப்படையில் ஒரு சொல்நீர்மையாக இரண்டு சொற்கள் ( ஒரு ஆயிரம் ) இணையும்போது ஏறபட்ட மாற்றமே என்பது எனது கருத்து!
(6) ''ன்'' உடம்படுமெய்: தமிழில் செய்து வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களைப் பெறுவதற்கு, வினையடியோடு இறந்தகால விகுதிகளை இணைத்து, அவற்றோடு ''உ'' -வை இணைப்போம். ''படி-த்த் - உ' (படித்து). இங்கு இறந்தகால இடைநிலை வல்லின ஒற்றில் முடிந்ததால், குற்றியலுகரம் சேர்க்கப்படுகிறது. ''ஓடு+இன்+ஆன்'' என்ற வினைமுற்றுக்கு, செய்து வாய்பாட்டு வினையெச்சமாக ''ஓடின்'' என்பது வரவேண்டும். ஆனால்''ஓடி'' என்றுதான் வருகிறது. எனவே இறந்தகால விகுதியாக ''இ'' மட்டுமே. அப்படியென்றால், ''ன்'' என்பது என்ன? வினைமுற்றில் திணை எண் பால்விகுதிகள் ஆகாரத்தில் தொடங்குவதால் (ஆன், ஆள், ஆர், அது, அன) இறந்தகால விகுதிகளுக்குப்பின்னர், ''ன்'' ''ய்'' என்ற உடம்படுமெய்கள் தோன்றுகின்றன.
ஓடு -இ -ன்-ஆன் = ஓடினான் ; ஓடு -இ-ய்-அது = ஓடியது
எனவே ''ய்'' ''வ்'' போன்று ''ன்'' ஒற்றும் உடம்படுமெய்யாக வருகிறது. பேரா. சோ.ந. கந்தசாமி அவர்கள் 'இந்தோ+ ஆசியா = இந்தோனேசியா'' என்ற எடுத்துக்காட்டை எனக்குத் தந்து உதவினார். (ஆங்கிலத்திலும் ய்,வ் உடம்படுமெய்கள் உண்டு. Two eggs, three eggs என்பவற்றைச் சேர்த்து இடைவெளியில்லாமல் சொல்லிப்பாருங்கள். twovegs, threeyeggs என்று வரும்)
இதுபோன்று மொழியசை அமைப்பு விதிகள் மீறப்படாமல் இருப்பதற்காகவே பல சந்தி விதிகள் செயல்படுகின்றன என்பது எனது கருத்து. தற்போது மொழியியலில் " Optimality Theory" என்ற ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோட்பாடானது மொழியசைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் சுமார் 20 ஆண்டுகளுக்குமுன் ( சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் நான் பணியாற்றியபோது) நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தமிழுக்கு அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தி, மேற்கூறியவற்றை விளக்கினேன். பேராசிரியர்கள். ச. அகத்தியலிங்கம், பேரா. ச வே சுப்பிரமணியம், சோ.நா. கந்தசாமி, பொற்கோ உட்பட பல தமிழ், மொழியியல் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India