வியாழன், 25 மே, 2023

தமிழ்வழிக் கல்விக்கான கருத்தாடலில் ஒரு கருத்து . . .

 நண்பர் திரு மாலன் கருத்தும் எனது கருத்தும்

------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்வழிக் கல்விதொடர்பான எனது இன்றைய இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, நண்பர் திரு. மாலன் அவர்கள் நடுவண் அரசு, மாநில அரசு முயற்சிகள் பற்றி விளக்கியிருந்தார். தமிழ்வழிக் கல்வியை ஏற்றுக்கொண்டுதான் அவர் அதைக் கூறுகிறார். இதில் ஐயம் இல்லை! ஆனால் இவ்வளவு முயற்சிகள் நடைபெற்றும் தமிழ்வழிக் கல்விக்கு நாம் எதிர்பார்க்கிற வரவேற்பு கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தில் சில கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். அவருக்கு நன்றி. அதையொட்டி, எனக்குத் தோன்றிய கருத்துக்களையும் இங்கு முன்வைக்கிறேன்.
நண்பர் திரு. மாலன் அவர்கள்
-----------------------------------------------------------------------
''அரசு எதுவும் செய்யவில்லை என்பது சரியல்ல. தமிழ்வழியில் படித்த மாணவருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு, அரசுப்பணிகளுக்கான தேர்வில் தமிழில் கட்டாயத் தேர்ச்சி, பொறியியல் கல்வியில் முதலாண்டு இரு பருவங்களில் தமிழ்ப்பாடம், பள்ளிகளில் அறிவியல் பாடம், பாடத்திட்டத்தில் தமிழ் முதல் மொழி, தமிழ்நாட்டிலுள்ள எத்தகைய பள்ளியாயினும் அவற்றில் தமிழ்ப்பாடம் என்பன மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, குடிமைப்பணி, நீட் போன்ற தேர்வுகளைத் தமிழில் எழுத வாய்ப்பு, தொழிற்கல்வியை தமிழில் பயிற்றுவித்தல் இவை மத்திய அரசின் முயற்சிகள் கணினி, கைபேசி, செய் மதியில் (செயற்கை நுண்ணறிவில்) தமிழ் என்பன தனியார் அளித்த கொடைகள் இருந்தும் நீங்கள் சொல்லும் நிலைதான் இருந்து வருகிறது (ஏறத்தாழ 100 ஆண்டுகளாக) ஆனால் யாரும் எதையும் திட்டமிட்டுத் திணித்ததாக சொல்வதற்கில்லை''.
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
நன்றி நண்பர் மாலன் அவர்களே. மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். பல முனைகளிலும் தமிழ்வழிக் கல்விக்கு நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இருப்பினும் . . . ?
நிலைமை மாறவில்லை! தமிழ்வழிக் கல்விக்கு மக்களிடையே ஆதரவு இல்லை! இதைத்தான் நான் மற்றொரு பதிவில் கூறியுள்ளேன். ''ஆங்கிலத்திற்கு ஆதரவான ஒரு பொய்ம்மை நீண்ட நாள்களாக . . . . இல்லை வருடங்களாக . . . உருவாக்கப்பட்டிருக்கிறது!
//''பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆதரவு ஆட்சியாளர்களும் . . . . முதலிலேயே ஒரு பொருளை உற்பத்திசெய்து விற்பதைவிட . . . அப்பொருளுக்கான ''சந்தையை'' . . . அப்பொருளின் விற்பனைக்குத் தேவையான ''மக்களின் வரவேற்பை . . . இசைவை'' முதலில் ''உற்பத்தி'' செய்வார்கள்! அதன்பின்னர் அந்தப் பொருளின் விற்பனைக்குச் சிக்கலே இல்லை! அந்த நிறுவனங்களே வந்து, ''இந்தப் பொருள் வேண்டாம்'' என்றாலும் , மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! //
எனவே, 100 ஆண்டுகளுக்குமேலாக இங்குத் திணிக்கப்பட்டுள்ள . . . ''உருவாக்கப்பட்டுள்ள'' ''உற்பத்திசெய்யப்பட்டுள்ள'' ஆங்கிலமோகம் . . . ஆங்கில ஆதிக்கத்தை . . . அவ்வளவு ''எளிதில்'' தகர்த்தெறியமுடியாது!
தகர்த்தெறியவே முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு பல முனைகளில் மக்கள் முயல வேண்டும்! ஏனென்றால் அதற்கு அவ்வளவு பலமான அடித்தளம் இங்குப் போடப்பட்டிருக்கிறது!
அதற்கு அடிப்படையான சமூக, பொருளாதார, அரசியல் கூறுகள் மறையவேண்டும். இதை ''நிமிடங்களில், மணிகளில், நாள்களில், மாதங்களில், ஆண்டுகளில் ''செய்துவிடமுடியும் என்ற ஒரு ''கற்பனை ஆசை'' எனக்குக் கிடையாது! அதுபோன்று சமூக உளவியல் ஆய்வுகளும் தீர்வுகளும் தேவைப்படும்!

"இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"

 "இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing consent)"

------------------------------------------------------------------------------------------------------------
உலகறிந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி அவர்கள் தனது மற்றொரு நண்பருடன் இணைந்து ''Political Economy of Mass Media - Manufacturing Consent" என்ற ஒரு மிகச் சிறந்த நூலை உருவாக்கினார்.
இந்த நூலின் அடிப்படைக் கருத்து . . . இன்றைய ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் நீடிக்கின்றன. இவற்றின் நோக்கமே . . . இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கும் . . . இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களுக்கும் ''சந்தை '' உருவாக்கிக் கொடுப்பதே ஆகும்!
ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிப் பல வகைகளில் ''புகழ்ந்து பேசி'' ஆதரவு திரட்டுவது முதல் படி! இந்தப் ''பொருள்கள்'' என்பவை வெறும் பொருள்கள் மட்டுமல்ல, அரசியல் கருத்துக்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், ஆட்சிகள் போன்றவையும் அடங்கும்!
இந்த ஆதரவு திரட்டலின் ஒரு கட்டத்தில் . . . குறிப்பிட்ட பொருள் இல்லையென்றால், தங்கள் வாழ்க்கையே இல்லை . . . . அந்தப் பொருள் மிகவும் தேவையான ஒன்று என்ற ''மனநிலைக்கு'' மக்கள் தள்ளப்படுவார்கள்!
தமிழகத்தில் தற்போதைய தொலைக்காட்சிகள், அலைபேசிகள் , ஆங்கில வழிக்கல்வி ஆகியவை எல்லாம் அடங்கும்.
அதாவது, பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆதரவு ஆட்சியாளர்களும் . . . . முதலிலேயே ஒரு பொருளை உற்பத்திசெய்து விற்பதைவிட . . . அப்பொருளுக்கான ''சந்தையை'' . . . அப்பொருளின் விற்பனைக்குத் தேவையான ''மக்களின் வரவேற்பை . . . இசைவை'' முதலில் ''உற்பத்தி'' செய்வார்கள்! அதன்பின்னர் அந்தப் பொருளின் விற்பனைக்குச் சிக்கலே இல்லை! அந்த நிறுவனங்களே வந்து, ''இந்தப் பொருள் வேண்டாம்'' என்றாலும் , மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!
(அப்படித்தான் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்த ஆட்சியாளர்களே . . . இன்று தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவருகிறோம்'' என்று சொன்னாலும், ''தமிழ் உணர்வுள்ள'' தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை!)
இந்தக் ''கருத்து இசைவை'' உருவாக்குவதில்தான் தமிழகத்தில் இன்றைய ஊடகங்கள் எல்லாம் மிகத் தீவிரமாக இருக்கின்றன. அதுவும் தற்போது இணையம் வந்தபிறகு . . . யூடியூப் வந்தபிறகு . . . கேட்கவே வேண்டாம்! ''ஊடகவியலாளர்கள்'' குவிகிறார்கள்! டெல்லியிலிருந்தும் ஊடகவியலாளர்! குக்கிராமத்திலிருந்தும் ஊடகவியலாளர்!
நிமிடத்திற்கு நிமிடம் . . . பரபரப்புச் செய்திகள்! வீடியோ காட்சிகள்! பேசுபவருக்குத் தெரியாமல் அவரது பேச்சைப் பதிவுசெய்து, வெளியிடுதல்! ஆட்சியில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் அந்தரங்களிலிருந்து . . . கிராமக் கோவில்களில் நடைபெறுகிற ''கரகாட்டம்'' வரை . . . அப்போது அப்போது பார்க்கலாம்! கேட்கலாம்! காலையில் எழுந்திருக்கும்போதே அலைபேசியோடு எழுந்திருந்து . . . இரவு படுக்கையில் கண் அசருகிற வரை அலைபேசியில் வீடியோக்கள்!
இன்று அலைபேசி இல்லாமல் . . . குழந்தைகள்கூட சாப்பிடமாட்டார்கள்! பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுகூட அலைபேசிகளில்! ''மிகப் பெரும் தொழிற்புரட்சி'' தமிழகத்தில்!
இதைத்தான் சாம்ஸ்கி ''இசைவுச் சந்தையை உற்பத்தி செய்தல்'' என்று கூறுகிறார்.
இந்த ''இசைவுச் சந்தைதான்'' ஆங்கிலத்திற்கும் ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது!
இந்த ஒரு சூழலில் ''தமிழ்வழிக் கல்வியை'' எவ்வாறு கொண்டுவருவது? ''தாயைப் பழித்தாலும் எனது தமிழைப் பழித்தவனை விடமாட்டேன்'' ''உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு'' என்ற வசனங்கள் அரசியல் மேடைகளில் ''ஒலிக்கப்படுவது'' காதில் விழுந்தாலும் . . . . கல்வியில்மட்டும் தமிழை விடமாட்டோம் என்ற ஒரு மிகப் பெரிய ''தாய்மொழி உணர்வு'' . . . . ஆங்கிலவழிக்கல்விக்கான ''இசைவுச் சந்தை'' இங்கு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது!

தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

 தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

----------------------------------------------------------------------------------------------------------
இன்றைய நாளிதழ்களில் ஒரு செய்தி!
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளுக்கு ஒரே ஒரு மாணவர்தான் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் தமிழ்வழிப் படிப்புகளை ரத்து செய்யமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சரும் பொறியியல் படிப்புகளுக்கான துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்!
ஏன் இந்த நிலை தமிழ்வழிப் படிப்புகளுக்கு?
தமிழ் மக்களே - தமிழ்ப் பெற்றோர்களே - தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளுக்கு ஆதரவாக இல்லை! இந்த நிலை உயர்நிலைப் படிப்புகளில்மட்டும் இல்லை! பாலர் வகுப்பிலிருந்தே இது நீடிக்கிறது!
இது ஒரு பொருளாதாரம்சார்ந்த சமூக உளவியல் பிரச்சினை!
ஒரு பாட அறிவு தமிழில் படித்தாலும் அதே அறிவுதான்! ஆங்கிலத்தில் படித்தாலும் அதே அறிவுதான்! எந்தவகையிலும் மொழி அடிப்படையில் தமிழ் தாழ்ந்ததோ அல்லது ஆங்கிலம் உயர்ந்ததோ இல்லை!
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு கருத்து - தவறான கருத்து - நிலவுகிறது! ஆங்கிலத்தில் படித்தால் உயர் பதவிகளுக்குச் செல்லலாம்! அயல்நாடுகளில் வேலைக்குச் செல்லலாம்! ஆனால் தமிழில் படித்தால்? தமிழ்நாட்டிலேயே உயர்பதவிகள் - வேலை வாய்ப்புகள் - கிடைக்காது!
இந்தக் கருத்து மக்கள் இடையே நிலவுவதற்குக் காரணம் . . . மறைமுகமான ஒரு கருத்துத் திணிப்புத்தான்! நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) வேறொரு துறைக்குப் பயன்படுத்திய ஒரு சொல் இங்கும் பொருந்தும்!
''இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing Consent) "!
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மறைமுகமாக அரசியல் , பொருளாதாரச் சூழல்கள் மக்களிடையே ''ஆங்கிலத்திற்கான இசைவை'' உற்பத்தி செய்துள்ளன! இதன் தாக்கத்தினால் தமிழ்ப் பெற்றோர்கள் உளவியல் ரீதியில் ''சலவை'' செய்யப்பட்டுள்ளனர்!
பண்டைத் தமிழர் பெருமை, தமிழ் இலக்கியப் பெருமை ஆகியவற்றைமட்டுமே முன்னிலைப்படுத்துவது . . .
அவற்றை 'அலங்காரக் கண்காட்சிகளில்'' வைத்து பெருமைப்படுவது . . .
தமிழறிஞர்களுக்கு விருதுகள், வீடுகள், மாதாந்திரப் பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் , படிப்புக்களில் '' இட ஒதுக்கீடு'' அளிப்பது . . .
தமிழ் மாநாடுகள் நடத்துவது . . . மறைந்த தமிழறிஞர்களுக்குச் சிலை வைப்பது . . .
தமிழறிஞர்களின் ''நூல்களை'' அரசுடைமையாக்குவது . . .
தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்வது . . .
இத்தனையும் இங்கு நடைபெறுகின்றன!
ஆனால் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் படிப்புவரை . . . . பாடமொழியாக . . . பயிற்றுமொழியாக நீடிக்க . . . தமிழ்மொழிக்கு - தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழியாகிய தமிழுக்கு - உரிமையோ அல்லது வாய்ப்போ கிடையாது!
தமிழ்மொழியை நாம் ''அருங்காட்சியகத்தில்'' வைத்துப் பார்க்க விரும்புகிறோமேதவிர, 'அறிவியல் ஆய்வுக்கூடங்களில்'' வைத்துப் பார்க்க விரும்பவில்லை!
இன்று அரசுகள் கூறலாம் . . . ''நாங்கள் தமிழ்வழிப் படிப்புக்களை அறிமுகப்படுத்தத்தான் செய்யலாம் ! ஆனால் அதில் மாணவர்கள் சேராததற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?''
இங்குதான் நான் முன்கூறிய ''இசைவை உற்பத்தி செய்தல்'' என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்!
தமிழ்வழிப் படிப்புக்கு எதிராக நீடிக்கிற மக்களின் நிலைபாட்டுக்குக் காரணம் . . .
பல ஆண்டுகளாக . . . மக்கள் மனதில் உருவாக்கப் -பட்டுள்ள ஒரு அச்சமே!
1) ''தமிழில் படித்தால் ஆங்கில அறிவு கிடைக்காது''
2) ''தமிழில் படித்தால் உலக அளவிலான அறிவு கிடைக்காது''
3) ''தமிழில் படித்தால் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைக்காது''!
இந்த ''பொய்ம்மையான அச்சம் '' மக்களிடமிருந்து அகற்றப்பட்டால் ஒழிய . . .
கல்வியில் தமிழ்மொழி பயிற்றுமொழியாக ஆவது என்பது நடவாத ஒன்றே ஆகும்!
இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கவேண்டும்! தவறான சமூக உளவியலை மாற்றி அமைக்கவேண்டும்! இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு!
புராணக் கதைகளில் படித்திருப்போம் . . . ''ஒரு அரக்கனைக் கொல்வதற்கு அவனைத் தாக்கினால் போதாது. அவனுடைய உயிர் எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு கிளியிடமோ, குருவியிடமோ இருக்கும்! அதைப் பிடித்துக் கொன்றால்தான் அரக்கன் சாவான்''!
அதுபோல . . . தமிழ்மொழி வாயிலான கல்விக்குத் தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதற்கு அடிப்படையான காரணத்தைப் புரிந்துகொண்டு . . . அதைத் தகர்த்து எறியாமல் . . . தமிழகத்தில் தமிழ்வழிப் படிப்பு வராது!
உண்மையான தமிழ்த்தாய் அன்பு என்பது . . . அந்தத் தாயைச் சிலைவடிவிலும், விருதுகள், மாநாடு வடிவங்களிலும் பார்ப்பது மட்டும் இல்லை. . . .
மக்களின் அறிவுக்கு அடிப்படையான கல்வியில் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைக் கல்விவரை . . . பாடங்களில் தமிழைப் பார்ப்பதே ஆகும்! அதுதான் உயிர் உள்ள தமிழ்த்தாய்!
கலைப்பாடம், அறிவியல் பாடம் இரண்டையுமே தாய்மொழியில் - தமிழில் படிக்கலாம் . . . படிக்கவேண்டும்! ஆங்கிலத்தையோ - அல்லது வேறு எந்த மொழியையோ - மொழி என்ற அடிப்படையில் நன்றாகவே கற்றுக்கொடுக்கலாம். அப்போது மாணவர்கள் தங்களுடைய அறிவை அந்தப் பிறமொழிகளிலும் வெளிப்படுத்தலாம்.
இதுதொடர்பான நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இங்கு எப்படிப்பட்ட ஒரு சூழல் என்றால் . . . சுயமான அறிவு வளர்ச்சியும் தடைபடுகிறது. ஆங்கிலமும் அரைகுறையாகத் தெரிகிறது. உயர் நிலைகளில் விரும்பினால் ''English for Science and Technology" " English for specific Purpose" என்று கற்றுக்கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகுப்புவரை பொது ஆங்கிலம் . . . பின்னர் மாணவர்களின் துறைக்கேற்ப ஆங்கிலம் கற்றுக்கொடுத்தல் . . . இதுவே சரியான அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

 கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்ந்து பணியாற்றும்போது, அப்பணிக்குரிய அறிவைப் பெற்றிருப்பார்; பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் . . . அவர் இந்தப் பிரபஞ்சத்தின் . . . சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் . . . அவைபற்றிய அறிவையும் கொண்டிருப்பார்.; கொண்டிருக்கவேண்டும்.
அதனால் ஒருவர் தமிழாசிரியராக இருப்பதாலேயே . . . . தமிழ்மொழி அறிவியல், தமிழ் இலக்கிய அறிவியல் தாண்டி . . . பிற அறிவியல்துறைகள்பற்றிய அறிவைப் பெற்றிருக்கமாட்டார் என்று கருதக்கூடாது.
இது பிற துறைப் பேராசிரியர்களுக்கும் பொருந்தும். பிரபஞ்ச, சமுதாய அறிவியல்களில் மொழியும், இலக்கியமும் அடங்கும்.
மேலும் கல்விக்கொள்கை என்பதில் வெறும் துறைசார் பாடத்திட்டம் மட்டும் அடங்குவது இல்லை; மாணவரின் மனித மூளை எந்த ஒன்றையும் எவ்வாறு கற்றுக்கொள்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, கற்றல் - கற்பித்தல் கொள்கையை வரையறுப்பதும் அடங்கும்; இந்தக் கொள்கையானது அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொதுவானது.
ஒரு மாணவருக்கு எதையும் உணரும் திறன், ஒன்றைப் படைக்கும் திறன் ஆகியவற்றை எவ்வாறு கற்றுக்கொடுப்பதும் என்பதும் அடங்கும்.
இவை எல்லாவற்றையும் விட . . . ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் . . . மக்களின் . . . . வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே கற்றலும், கற்பித்தலும் நீடிக்கின்றன; எனவே குறிப்பிட்ட சமுதாயத்தின் தேவைகள் என்ன, அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுபற்றிய அறிவும் தேவைப்படுகிறது. இதுவும் அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கான கல்விக்கொள்கையை வரையறுப்பதற்கான குழுவில் ஒரு (தமிழ்ப்) பேராசிரியர் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றே. இங்குப் பேராசிரியர் என்று பார்க்கவேண்டுமே ஒழிய, அவரது சிறப்புத்துறைபற்றிய விமரிசனத்திற்கு இங்கு இடம் இல்லை!
ஆனால் இந்தக் குழு பரிந்துரைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டு, செயல்படுத்துவது ஆட்சியாளர்களின் - அவர்களின் முடிவுகளைச் செயல்படுத்துகிற அதிகாரிகளின் - பொறுப்பு ஆகும். கல்வித் துறையில் தனியார் ஆதிக்கம் வளர்ந்துநிற்கிற ஒரு சூழலில் இது எந்த அளவு சாத்தியம் என்பது ஒரு தனி வினா!

தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள்

 தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே !

----------------------------------------------------------------------------------------------------
நேற்று தமிழ் ஆசிரியர்கள்பற்றித் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு பதிவு இட்டிருந்தார்கள். அதற்கு நானும் பதில் கூறியிருந்தேன். அதன்பின்னர் தோழர் அப்பதிவை நீக்கிவிட்டு, ஒரு விரிவான பதிலை இன்று இடுவதாகக் கூறியிருந்தார். தான் சொன்னபடி இன்று ஒரு பதிவை இட்டு, என் கவனத்திற்கும் அதைக் கொண்டுவந்தார்.
முழுவதும் படித்துப்பார்த்தேன். அவரது புரிதல் மிகத் தவறானது என்பதே எனது கருத்து! ஆனால் இதுபோன்ற கருத்துக்களுக்கு நீண்ட பதில் எழுத நான் விரும்பவில்லை! பயன் இருந்தால் உறுதியாக நான் எழுதுவேன்.
ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தியில் . . . . பிற உற்பத்தி சக்திகளுக்கு இணையாக அந்த மக்களின் மொழி நீடிக்கிறது என்பதே தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிற மார்க்சியத்தின் - மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.
ஆனால் இந்தியாவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார ஆதிக்கம்தான் நீடிக்கிறது என்பதால் . . . . அந்நிய மொழியாகிய ஆங்கிலம் மற்ற இந்திய மொழிகள்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
மேற்கூறிய அந்நிய ஏகாதிபத்தியங்களின் தரகர்களாகச் செயல்படும் இந்திய முதலாளிகள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு . . . அதற்கு அடுத்தபடியாக ''இந்தியின்'' ஆதிக்கத்தை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். பொருளாதார உற்பத்தியில் ஆங்கிலம், நிர்வாக அதிகாரத்தில் இந்தி என்ற இந்த மக்கள் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் போராடவேண்டிய ஒரு சூழலில் . . .
சில தனிப்பட்ட அறிவியலாளர்களைத் தமிழ் ஆசிரியர்களுக்கு எதிராக நிறுத்தி . . . தமிழ்மொழிக் கல்வியையும் தமிழ் ஆசிரியர் , ஆய்வாளர்களையும் மிகத் தவறாகச் சித்தரிக்க முயல்கிறார் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள்! ஏதோ பிற துறை அறிவியலாளர்களுக்கு எதிராக மொழி, இலக்கிய அறிவியலாளர்கள் ( இதைத் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!) நிற்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்க அவர் முயல்கிறார்.
எந்தவொரு பிற துறை அறிவியலாளர்களையும் தாழ்வாகக் கருதும் எண்ணம் தமிழ் ஆசிரியர்களுக்குக் கிடையாது. மாறாக, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அவர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள்!
நான் ஒரு தமிழ் ஆசிரியன்தான்! அறிவியல் பார்வையும் சமுதாய நோக்கும் உள்ள ஒரு ஆசிரியன்தான்!
பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம்பற்றியும் . . . ஏன் மார்க்சியப் பொருளாதாரம், அரசியல்பற்றியும் பேசக்கூடிய தமிழ் ஆசிரியர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். மேலும் உண்மையான போராட்டக் களத்தில் நின்று உயிரை இழக்கவும் தயாராக இருக்கின்றனர்! எனவே தமிழ் ஆசிரியர்களைத் ''தற்குறிகள்'' என்று கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் தோழரே.
அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கமும் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையும் இந்தி மொழி ஆதிக்கமும் நீடிக்கிற இன்றைய இந்தியச் சூழலில் . . . அவற்றை எதிர்த்து நின்று போராடவேண்டிய தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் இதுபோன்ற தவறான புரிதல்களுக்கு . . . கருத்துக்களுக்கு என்ன பதில் சொல்வது?
ஒரே பதில் . . . அவரது ''கருத்துச் சுதந்திரத்தை'' மதித்து . . . இந்தப் பதிவுத்தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உண்மையில் தூங்குகிறவர்களை எழுப்ப முயலலாம்! ஆனால் . . . ?
இந்த எனது பதிலே தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கானது இல்லை! தமிழ்மொழி அறிவு எந்த அளவுக்குத் தேவை என்பதை மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவே எழுதியுள்ளேன்.

தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

 தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

----------------------------------------------------------------------------------------------------
இன்று நிலவுகிற கல்வியானது இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவற்றிற்குப் பயன்படாத ஒன்று மட்டுமல்ல . . . அதற்கு எதிரானதும்கூட!
தற்சார்புப் பொருளாதாரத்திற்குப் பயன்படாத ஒன்று என்றால் . . . எதற்குப் பயன்படுகிறது?
அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு உதவுகிறது இந்தக் கல்விமுறை! பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நீடிப்புக்கும் உதவுகிறது இந்தக் கல்விமுறை!
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தேவையான மனிதசக்தியை உருவாக்கித் தருவதே அதன் நோக்கமாகும்! அவற்றின் இந்திய மண்ணில் நீடிக்கிற தொழிற்சாலைகளுக்குமட்டும் அல்லாமல் . . . அவற்றின் சொந்த நாடுகளாகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இந்திய மனித சக்தியை ''ஏற்றுமதி செய்யும்'' கல்விக்கொள்கைதான் தற்போதைய கல்வி! (அதனால்தானே ''ஆங்கிலத்தின் செல்வாக்கு'' ஓங்கி நிற்கிறது!)
மறுபுறம் . . . அறிவியல்பூர்வமான சமுதாயநோக்கு மக்களிடையே ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக . . . இந்தியாவின் ''பழம்பெருமை , பழம்பண்பாடு'' என்ற போர்வையில் . . . ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நீடிப்புக்கு ஆணிவேராக நீடிக்கிற நிலவுடமைச் சிந்தனைகளை . . . பண்பாடுகளை . . . இலக்கியங்களைப் ''புனிதப்படுத்தி'' மக்களிடையே நீடிக்கவைக்கிற கல்விமுறையாக நீடிக்கிறது!
தத்துவச் சிந்தனையோ, இலக்கியங்களோ, பண்பாடோ . . . எதுவும் வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டது இல்லை! கல்வி அமைப்பும் இதற்கு விதிவிலக்கு இல்லை!
இந்தக் கல்விமுறையை அவ்வப்போது தங்களுக்கு ஏற்றாற்போல . . . ''புதிய மொந்தையில் பழைய கள்'' என்ற பழமொழிக்கேற்ப . . . மாறி மாறி ''புதுப்பித்துக் கொள்கின்றன '' இந்தியாவின் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்!
''நாடுதழுவிய கல்விக்கொள்கை '' ஆகட்டும், ''மாநிலங்கள் தழுவிய கல்விக்கொள்கை ஆகட்டும்'' இரண்டுமே மேலே நான் குறிப்பிட்ட பயன்பாடுகளையே அடிப்படையாகக்கொண்டவை ஆகும்!
பன்னாட்டு ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான . . . அதற்கு உதவுகிற நிலவுடைமை உறவுக்கு எதிரான . . . ஒரு சமுதாய, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு இங்கு உருவாகாதவரையில் . . . இந்திய மக்களுக்கான உண்மையான ஒரு கல்விக்கொள்கை இங்கு உருவாகாது! உருவாக்கவிடமாட்டார்கள்!
ஏதோ மக்களுக்கான ஒரு ''புதிய கல்விக்கொள்கையை'' உருவாக்குகிறோம் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு . . . 'பிரகடனப்படுத்தி வருவது'' ஒரு ஏமாற்று வித்தையேயாகும் என்பதில் ஐயம் இல்லை!
இந்தியாவில் தற்சார்புப் பொருளாதாரம் உருவாகாதவரையில் . . . எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திலும்கூட . . . ஏகாதிபத்திய, நிலவுடமை நலன்களுக்கு எதிரான ஒரு கல்விமுறையைக் கொண்டுவரமுடியாது!
ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை . . . ''மரத்தில் பால் வடிகிறது'' என்று கூறுகிற ஏமாற்றுவேலையும் நீடிக்கத்தான் செய்யும்! ஏமாற்றுவது அவர்களின் உயிர்நாடிக்குத் தேவையான ஒன்று! அதை அவர்கள் செய்யத்தான் செய்வார்கள்!
மக்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்!

தமிழாசிரியர்கள்பற்றிய தவறான பதிவுக்கு மறுப்பு!

 தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமித்தது தவறு என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ள தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கான தோழமை அடிப்படையிலான பதில் இது!

-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு முற்போக்குத் தோழர் (எனக்கு நெருங்கிய நண்பரும்கூட). அவர் தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமிப்பது தவறு என்று கூறிய பதிவுக்குப் பதிலாகத் தோழமை அடிப்படையில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே. தங்களது கருத்து மிகத் தவறு என்றே நான் கருதுகிறேன். பொதுவாகத் தமிழாசிரியர்கள்பற்றித் ''தமிழகத்தில்'' ''தமிழ் உணர்வுமிக்க தமிழகத்தில்'' சிலர் கொண்டிருக்கிற கருத்தையே தங்களைப் போன்றவர்கள் கொண்டிருப்பது மிக்க வேதனையாக இருக்கிறது.
தமிழ்த்துறையில் பணிபுரிபவர்களுக்குக் ''மக்களுக்கான கல்விக் கொள்கையை'' வரையறுப்பதில் ''திறமையோ அல்லது அறிவோ'' இருக்காது என்று தாங்கள் கருதுவது தவறு. அதுபோல பிற ''அறிவியல் துறைகளில்'' இருப்பவர்கள் அனைவருக்கும் அந்தத் ''திறமையும் அறிவும் இருக்கும்'' என்று தாங்கள் கருதுவதும் தவறு.
ஒருவர் ஆசிரியர் பணிக்கு வருகிறார் என்றாலே அவருக்குக் கல்விக்கொள்கைகளைத் தீர்மானிப்பதிலும் பங்கு உண்டு. இதில் தமிழ்த்துறை, பிற அறிவியல் துறை என்று வேறுபடுத்துவது தவறு.
மக்களுக்கான கல்விக்கொள்கைகளை வரையறுப்பதற்குத் தேவையானது . . . சமுதாயம்பற்றிய முற்போக்குக் கொள்கைகளும் ஆய்வுமுறையுமே தேவை! மாணவர்களிடம் நேரடித் தொடர்பும் தேவை. இவை ''தமிழ்ப் பேராசிரியர்களுக்கு'' இருக்காது, ஆனால்'' பிற அறிவியல் துறையினருக்கு'' மட்டுமே இருக்கும் என்று தாங்கள் கருதுவது ஆசிரியர் சமுதாயத்தில் ஒருவகையான ''வர்க்க வேறுபாடுகளை'' திணிப்பதாகவே அமையும்.
இந்தக் குழுவில் பிற துறையினர்கள் நீடிக்கும்போது, அதுவும் ஒரு நீதிபதியின் தலைமையில் குழு இயங்கும்போது, தமிழ்ப் பேராசிரியர்களை உறுப்பினராக நியமிப்பது தவறு என்று தாங்கள் கருதுவது ஒருவகை''மேலாண்மைத் தன்மைகொண்ட'' ஒரு ''ஆதிக்கக் கருத்தே'' ஆகும்.
பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் ''அ, ஆ-வைக்'' கற்றுக்கொடுத்து, பிற துறை அறிவுகளைப் பெறுவதற்கான மொழித்திறனை அளிப்பது மொழிக் கல்வியே ஆகும்.
தமிழாசிரியர்களின் மத்தியில் மட்டுமல்ல, பிற துறை ஆசிரியர்கள் மத்தியிலும் சமூக விழிப்புணர்வும் அறிவியல் நோக்கு, பார்வையும் கொஞ்சம்கூட இல்லாதவர்கள் பலர் இருக்கின்றனர். தங்களுடைய துறை அறிவைத்தவிர , பிற துறை அறிவு இல்லாதவர்கள் பலர் நீடிக்கின்றனர். மேலும் இயற்கைபற்றிய பல்வேறு ''மூட நம்பிக்கைகளை'' கொண்டிருக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.
மேலும் பல்கலைக்கழக நிலையில் - தமிழ் ஆய்வுத் துறையில் பணியாற்றுகிற ஒரு பேராசிரியர் கல்விக்கொள்கை குழுவில் இடம்பெற்றதைத் தவறு என்று கூறுவது எவ்விதத்திலும் சரியில்லை.
மேலும் தற்போதைய இந்தியாவில் கல்விக்கொள்கைகளின் பின்புலம் . . . இன்றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஆகும். மக்களின் நலன் இல்லை! எனவே தாங்கள் முன்வைத்துள்ள ''அறிவியலாளர்கள்'' உண்மையில் மக்களுக்கான கல்விக்கொள்கையை முன்வைத்தாலும், இறுதிமுடிவு யார் கைகளில்?
எனவே, தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருப்பதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது. ஒரு தமிழாசிரியராகப் பணியாற்றி - அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றி - ஓய்வுபெற்ற ஒரு தமிழாசிரியர் என்ற முறையில் தங்களது கருத்தை உறுதியாக மறுக்கிறேன்.
தயவுசெய்து, பிற துறை ஆசிரியர்களிடமிருந்து தமிழ் ஆசிரியர்களைப் ''பிரித்துப் '' பேசுவதைத் தவிர்க்கவும். இந்தப் பதிவில் தாங்கள் முன்வைத்த கருத்துக்களுக்கு மிக்க வேதனையுடன் மறுப்பு தெரிவிக்கிறேன். முற்போக்குக் கொள்கையுடைய தங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை!


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India