வெள்ளி, 14 நவம்பர், 2025

மொழியியல் பார்வையில் தமிழ்ப் பெயரெச்சம் - பெயர்த் தொடர்

 மொழியியல் பார்வையில் தமிழ்ப் பெயரெச்சம் - பெயர்த் தொடர் . . . (தமிழ் மாணவர்கள் - ஆய்வாளர்கள் கவனத்திற்கு)

--------------------------------------------------------------------------
1) 'படித்த பையன்'
2) 'படித்த புத்தகம்'
3) 'படித்த பள்ளிக்கூடம்'
நண்பர் ஒருவர் ஒரு ஐயம் எழுப்பினார். 'படித்த பையன்' என்பது 'பையன் படித்தான்' என்று கூறலாம். ஆனால் 'படித்த புத்தகம்' என்று கூறினால் 'புத்தகம் படித்தது' என்றுதானே பொருள் தரும்? எனவே 'படிக்கப்பட்ட புத்தகம்' என்று கூறுவதுதானே சரியாக இருக்கும்?
உண்மையில் நண்பரின் ஐயம் மிகச் சரியானதுதான். ஆனால் உண்மையில் பிரச்சினை என்ன?
1) 'படித்த பையன்' என்னும் தொடரின் தாய்த் தொடர் ' பையன் படித்தான்' என்பது ஆகும். இங்குப் 'பையன்' என்னும் பெயருக்கும் 'படித்தான் ' என்னும் வினைமுற்றுக்கும் இடையிலான உறவு 'எழுவாய் - வினைமுற்று' உறவாகும். முற்றுத்தொடரானது பின்னர் 'படித்த பையன் ' என்னும் பெயர்த்தொடராக மாறி அமைகிறது. இவ்வாறு மாறி அமைந்தபோதிலும் 'பையன்' என்பதற்கும் 'படித்தான்' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு மாறவில்லை. அதாவது முற்றுத்தொடரில் பெயருக்கும் வினைக்கும் இடையில் என்ன வேற்றுமை உறவோ அந்த உறவே இங்கும் தொடர்கிறது.
2) 'பையன் புத்தகம் படித்தான்' என்னும் தொடரில் 'பையன் - படித்தான்' உறவு எழுவாய் - வினை உறவு. ஆனால் 'புத்தகம் - படித்தான்' உறவு செயப்படுபொருள் - வினை' உறவு. இரண்டாம் வேற்றுமை உறவு. இந்த முற்றுத்தொடரானது 'பையன் படித்த புத்தகம்' என்னும் பெயர்த்தொடராக மாறி அமையும்போதும், 'புத்தகம்- வினை' உறவு இரண்டாம் வேற்றுமை உறவுதான். செயப்படுபொருளை முன்னிறுத்தும் தொடர். அவ்வளவுதான்! 'பையன்' என்பதைக் கூறாமல் இருக்கலாம்.
3) 'பையன் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான்' என்னும் தொடரில் 'பள்ளிக்கூடம் - படித்தான்' உறவு இடவேற்றுமை உறவு; ஏழாம் வேற்றுமை உறவு. இந்த முற்றுத்தொடரானது 'பையன் படித்த பள்ளிக்கூடம்' என்னும் பெயர்த்தொடராக மாறி அமையும்போதும் . 'பள்ளிக்கூடம் - படி' உறவு ஏழாம் வேற்றுமை உறவுதான். இடப்பொருளை முன்னிறுத்தும் தொடர். அவ்வளவுதான்! 'பையன்' என்பதைக் கூறாமல் இருக்கலாம்.
மேற்கூறியவற்றின் அடிப்படைக் கருத்து . . . ஒரு முற்றுத்தொடரில் அமைகிற பெயர்ச்சொற்களுக்கும் வினைக்கும் என்ன வேற்றுமை உறவுகள் நீடிக்கிறதோ, அதே வேற்றுமை உறவுகளைத்தான் பெயரெச்சத்தோடு அமைகிற - பெயரெச்சத்தை அடுத்து அமைகிற - பெயர்ச்சொற்களும் கொள்கின்றன. புறத்தோற்றத்தில் பார்ப்பதற்கு மேற்கூறப்பட்ட 'புத்தகம்' 'பள்ளிக்கூடம்' ஆகியவைதான் 'படித்த' என்பதின் எழுவாய்போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நீடிக்கிற வேற்றுமை உறவுகளை உணர்வதற்கு முற்றுத்தொடரை மனதில் கொள்ளவேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இதில் சிக்கல் ஏற்படாது. எனவே, 'படித்த புத்தகம்' என்று கூறுவதில் எவ்விதத் தவறும் இல்லை.
'இந்தப் புத்தகம் (பையனால்) படிக்கப்பட்டது' என்று அமையும் முற்றுத்தொடரிலிருந்து '(பையனால்) படிக்கப்பட்ட புத்தகம்' என்னும் பெயர்த்தொடர் அமையலாம். எனவே, பெயரெச்சங்கள் ('படித்த') பெயர்ச்சொற்களுக்குமுன்னால் ('பையன்' 'புத்தகம்' 'பள்ளிக்கூடம்' ) அமைந்து பெயர்த்தொடர்களாக மாறுகின்றன. இந்தப் பெயர்த்தொடர்கள் முழு வாக்கியங்களிலிருந்துதான் உருவாகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட வாக்கியங்களில் குறிப்பிட்ட பெயர்ச்சொற்கள் எந்த வேற்றுமை உறவுகளைப் பெற்றிருக்கின்றனவோ, அதே வேற்றுமை உறவுகள்தான் மேற்காட்டிய பெயர்த்தொடர்களிலும் அமைகின்றன. வெறும் பெயரெச்சதைமட்டும் கருத்தில்கொண்டு பார்த்தால் மயக்கம் இருக்கும். இதுபற்றிப் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்கள் தமது ' தமிழ் மொழி அமைப்பியல்' நூலில் (பக்கங்கள் 216-218) மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்த விளக்கத்திற்கு அடிப்படை, அவரது மாற்றிலக்கண மொழியியல் அறிவுப் பின்னணிதான் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகிறேன். அதாவது, பெயரெச்சத்தைக் கொண்ட ஒரு பெயர்த்தொடர் புறவய அமைப்புதான்; அதனுடைய புதை அமைப்பு ஒரு முற்றுத்தொடர்தான் என்பதாகும். குறிப்பிட்ட முற்றுத்தொடர் (புதை அமைப்பு) குறிப்பிட்ட மாற்றிலக்கண விதிகளின் உதவியால் குறிப்பிட்ட பெயர்த்தொடராக மாறி அமைகிறது.
இந்தப் பதிவின் அடிப்படை நோக்கம் . . . பெயரெச்சத்துக்கும் அதுகொண்டு முடியும் பெயருக்கும் இடையில் பலவேறு இலக்கணத் தொடர்புகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதே ஆகும்.
மேலும் சில எடுத்துக்காட்டுகளை அவர் கூறியுள்ளார்.
'துவைத்த பையன்' (எழுவாய்)
'துவைத்த துணி' (ஐ வேற்றுமை)
'துவைத்த சோப்புய (ஆல் வேற்றுமை)
'துவைத்த கூலி' (கு வேற்றுமை)
'துவைத்த கல்' (இல் வேற்றுமை)\
'துவைத்த வேகம்' (வினையடை)
'துவைத்த நேரம்'( காலம்)
'துவைத்த முறை (வினையடை)
'துவைத்த துவைப்பு' (வினை)
மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் பேராசிரியராகவும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறையில் 'தமிழ்ப் பெயரெச்சம்' என்னும் மாற்றிலக்கண மொழியியல் அடிப்படையிலான முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார் என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ் இலக்கணத்தைத் தற்கால மொழியியல் நோக்கில் ஆய்வுசெய்யும்போது பல தெளிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. தமிழ் இலக்கணம், மொழியியல் - இவ்விரண்டின் பின்னணியில் தமிழ்மொழியை ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். இவ்விரண்டு துறைகளின் அறிவும் மாணவர்களுக்குத் தேவை. ஒரு நண்பரின் ஐயம்: 'படித்த பையன்' என்பது ஒரு முற்றுத்தொடரா? அது, 'பையன் படித்தான் எனப் பொருள்கொள்ளுமா? அவன் படித்த பையன் - He is an educated boy அவர்களுக்கு வேண்டியது ஒரு படித்த பையன்- They need an educated boy அவன் இந்தக் கல்லூரியில் படித்த பையன்- He studied in this College./ He was a student of this College. எனது விளக்கம் : 'படித்த பையன்' முற்றுத்தொடர் இல்லை. ஒரு முற்றுத்தொடரிலிருந்து சில மாற்றுவிதிகள் மூலம் ((Transformational Rules) தோன்றிய ஒரு பெயர்த்தொடரே ஆகும். 'பையன் படித்தான்' என்னும் முற்றுத்தொடர்(Clause) ஒரு பெயர்த்தொடராக (Noun Phrase) மாறி அமைந்து, மற்றொரு முற்றுத்தொடரின் எழுவாயாகவோ ('படித்த பையன் இன்று வந்தான்') பெயர்ப்பயனிலை ஆகவோ ('அவன் ஒரு படித்த பையன்' ) அமையலாம். '
இரு முற்றுத்தொடர்கள் (Two Simple Clauses) இணைந்து , ஒரே முற்றுத்தொடராக மாறும்போது (Complex Sentence) இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
'பையன் படித்தான்' 'பையன் வந்தான்' --> '(படித்த பையன்) பையன் வந்தான்' . அடைப்புக்குள் இருக்கிற 'பையன்' என்பதும் வெளியில் உள்ள 'பையன் ' என்பதும் ஒரே நபரைக் குறித்தால் , இரண்டு 'பையன்களில்' ஒரு 'பையனை' நீக்கிவிடலாம் (இதை EquiNP Deletion என்று மாற்றிலக்கணத்தில் கூறுவார்கள்) . (படித்த) பையன் வந்தான்' --> படித்த பையன் வந்தான்'.
'படித்த பையன்' என்னும் பெயர்த்தொடரின் மூலமாக அமைவது புதை அமைப்பாகிய 'பையன் படித்தான்' என்னும் முற்றுத்தொடரே ஆகும். (அவன்) (படித்த பையன் ஆவான்) - முற்றுத்தொடர் (அவர்களுக்கு வேண்டியது) (ஒரு படித்த பையன் ஆகும்) - முற்றுத்தொடர் (அவன்) (இந்தக் கல்லூரியில் படித்த பையன் ஆவான்). - முற்றுத்தொடர்
மேற்கூறிய தொடர்களில் அமைந்துள்ள 'ஆவான்' 'ஆகும்' என்பவை இணைப்பு வினைகளாகும் (Link or Copula Verbs).

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India