தொழிற்பெயர்களும் முழுப்பெயர்களும் ஒன்றுதானா?
-------------------------------------------------------------------------------------------------------------------
ஐயா, ஒரு ஐயம்! ஒரு சொல் பெயர்ச்சொல்லாக இருந்தால் அதற்குப்பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் பெயரடையையும் நிறுத்தலாம். எ-கா. 'அழகான வீட்டை' . பன்மை விகுதியை இணைக்கலாம். - 'வீடுகள்'.
வினைச்சொல்லாக இருந்தால் அதற்குப் பின்னர் காலவிகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் வினையடையையும் நிறுத்தலாம்.
எ-கா. 'அழகாகக் கட்டியுள்ளான்'.
வினைச்சொல்லிருந்து முழுப்பெயர் உருவாகலாம். 'படி' -> படிப்பு.
ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் இன்னொரு வகை இருக்கிறது. 'படித்தல்' (இன்றைய தமிழில் படிப்பது, படித்தது, படிப்பது ஆகியவையும் அடங்கும். ) இவற்றுடன் பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதனால் பெயர்ச்சொல் தன்மை பெறுகிறது. முன்னர் வினையடைகளை இணைக்கலாம். எனவே வினைத்தன்மை பெறுகிறது.
ஆனால் இவற்றுடன் தாங்கள் கூறியுள்ளதுபோல, பன்மை விகுதியை இணைக்கமுடியது - ''*படித்தல்கள்'; ( எனவே இச்சொற்கள் பெயருக்குரிய பண்புகளையும் பெறுகிறது; வினைக்கு உள்ள பண்புகளையும் பெறுகிறது. இவற்றிக்கு முன்னர் பெயரடைகளை இடமுடியாது. 'வேகமாக படித்தல்' என்று கூறலாம்; ஆனால் 'வேகமான படித்தல்' என்பது சரியில்லைபோல் தோன்றுகிறது. வினையாலணையும் பெயர்களுக்கும் இப்பண்புகள் உண்டு. 'வேகமாக வந்தவனை'.
'படிப்பு' என்பதில் வேற்றுமை விகுதிகளையும் இணைக்கலாம்; முன்னர் பெயரடைகளையும் நிறுத்தலாம் ('வேகமான படிப்பை'). 'படித்தல்' என்பதில் வேற்றுமை விகுதிகளையும் இணைக்கலாம். ஆனால் முன்னர் வினையடைகள் வரும் ('வேகமாகப் படித்தலை' 'வேகமாகப் படிப்பதை').
ஆனால் 'படிப்பு' என்று முழுமையாகப் பெயராக அமைந்த ஒன்றையும் 'படித்தல்' என்ற பெயருக்கும் வினைக்கும் இடையில் உள்ள தொழிற்பெயரையும் ஒன்றாகப் பார்க்க இயலாது எனக் கருதுகிறேன். 'படிப்பு' 'வாழ்த்து', 'பாராட்டு' 'மகிழ்ச்சி' ஆகியவற்றை முழுப்பெயராகவே கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. வேற்றுமை விகுதி, பன்மை விகுதி ஆகியவற்றை ஏற்கும்; தனக்கு முன்னர் பெயரடைகளை நிறுத்திக்கொள்ளலாம்.
இவற்றைத் தொழிற்பெயர்கள் என்று அழைக்கக்கூடாது எனக் கருதுகிறேன். பெயர், வினை ஆகிய இரண்டின் பண்புகளையும் இவை பெற்றிருப்பதால், இவற்றைத் தனிவகைகளாக - தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்' என்று - இலக்கணம் கொள்கிறதோ என்ற ஐயம் எனக்கு.
இருப்பினும் தாங்கள் எதோ ஒரு அடிப்படையில்தான் இவற்றைத் தொழிற்பெயர்கள் என்று அழைத்துள்ளீர்கள் எனக் கருதுகிறேன். அப்படியென்றால் 'படிப்பு' என்பதும் 'படித்தல்' என்பதும் ஒன்றா? அவற்றிற்கு இடையில் வேறுபாடு இல்லையா? தொழிலை இவை சுட்டிக்காட்டுவதால்மட்டுமே இவற்றைத் தொழிற்பெயர் என்று கருதுகிறீர்களா? அவ்வாறு கருதலாமா? நீண்ட நாள்களாக எனக்கு இதில் ஐயம் . தங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.
ஒரு சொல் ஏற்கும் இலக்கணவிகுதிகள், அச்சொல்லுக்கு முன் வருகிற சொற்கள் ஆகியவைதான் அந்தக் குறிப்பிட்ட சொல்லின் இலக்கணவகைப்பாட்டைத் (பெயரா, வினையா, பெயரெச்சமாக, வினையெச்சமா ?) தீர்மானிக்கிறது என்று கருதலாமா?
மேலும் பருண்மையான (concrete nouns) பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்களோடு பன்மை விகுதி இணைகிறது; ஆனால் நமது செயல்கள், பண்புகள் ஆகியவற்றைக் குறிக்கிற பெயர்ச்சொற்களோடு (abstract nouns) பொதுவாகப் பன்மை விகுதி சேராது என்று கூறலாமா?
(ஆங்கிலத்தில் "gerund" என்அழைக்கப்படுகிற இலக்கணவகைப்பாட்டை தமிழ்த் தொழிற்பெயருக்கு இணையான ஒரு கலைச்சொல்லாகப் பார்க்கலாம் - walking, eating , killing போன்றவை. " He is walking - Walking is good". முதல் எடுத்துக்காட்டில் walking வினையெச்சம். இரண்டாவது எடுத்துக்காட்டில் gerund. ஆனால் இதுபற்றி மேலும் ஆராயவேண்டும்.)
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் இலக்கணத்தில் தொழிற்பெயர் (verbal noun) , வினையாலணையும்பெயர் (participial noun / conjugated noun) என்ற வகைப்பாடு நீடிப்பது உண்மையில் தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டிநிற்கிறது. இவை இரண்டும் முழுப்பெயரும் இல்லை; முழு வினையும் இல்லை; இரண்டின் தன்மைகளையும் பெற்று நிற்கிற ஒரு இலக்கணவகைப்பாடு! (+ பெயர் + வினை ' -'அர்த்தநாரிஸ்வரர்' !!!)
மேலும் 'படித்தல்' என்ற தொழிற்பெயர் காலம் காட்டாது; ஆனால் இன்றைய வளர்ச்சிகளான 'படிக்கிறது' 'படித்தது' 'படிப்பது' என்ற தொழிற்பெயர்கள் காலம் காட்டிநிற்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக