வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் ?
------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்
----------------------------------------------------------------------------
வாழ்த்துகள் அல்லது வாழ்த்துக்கள் - எது சரியானது?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------------------------
இதுபற்றி எனது கருத்தை ஏற்கனவே பல இடங்களில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் பேராசிரியர் கேட்பதால் மீண்டும் அதை எழுதுகிறேன். (1) பழந்தமிழ் இலக்கணங்களின்படி, செய்து வாய்பாட்டு வினையெச்சங்களில் - வன்தொடர்க்குற்றியலுகரமாக அமைகிற வினையெச்சங்களையடுத்து (படித்துப் பார்த்தான், கேட்டுப் பார் ) வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் வந்தால், ஒற்று மிகும்.
(2) ஆனால் கருத்து, படிப்பு, வாழ்த்து போன்ற வன்தொடர்க்குற்றியலுகரங்களில் அமைகிற பெயர்ச்சொற்களில் ஒற்று மிகாது. 'கருத்து கேள், வாழ்த்து கூறு'
(3) ஆனால் புணர்ச்சியில் எழுத்து, சொல், தொடர் அடிப்படைகளில் அமைகிற புணர்ச்சி விதிகளுக்குக் கட்டுப்படாமல் - அல்லது அவற்றைவிட உயர்நிலையில் அமைகிற ஒரு விதியாக வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக அமைந்து, அவற்றையடுத்து வல்லினங்களில் அமைகிற சொற்களோ அல்லது விகுதிகளோ வந்தால் ஒற்று மிகுகிறது. கருத்து கேள், வாழ்த்து கூறு போன்ற சொற்கள் பெயரையடுத்து வினைகள் வருகின்றன. புணர்ச்சி விதிகளின்படி இங்கு ஒற்று மிகாது. ஆனால் மிகுந்துதான் வருகிறது - ''கருத்துக் கேள், வாழ்த்துக் கூறு'' ;
''ஆட்டுக்கல், ஒட்டுப்பலகை'' போன்ற வினைத்தொகைகளிலும்கூட ஒற்று மிகுகிறது. வினைத்தொகையில் பொதுவாக ஒற்று மிகாது.
எனவே வன்தொடர்க்குற்றியலுகர வினையெச்சங்களுக்கு ஒப்பாக வன்தொடர்க்குற்றியலகரத்தை இறுதியாகக்கொண்ட பெயர்ச்சொற்கள் அமையும்போதும் அவற்றையடுத்து வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் வந்தால் ஒற்று மிகுகிறது. இதை ஒப்புமையாக்கம் - by analogy - அடிப்படையில் என்று கூறலாம்.
இந்த விளக்கத்தைவிட மற்றொரு விளக்கத்தில் எனக்கு உட்ன்பாடு. அதாவது புணர்ச்சிவிதிகளைத் தர அடிப்படையில் - ranking - வரிசைப்படுத்தினால் (Optimality Theory என்ற இன்றைய மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில்) , மற்ற எல்லா விதிகளையும்விட வன்தொடர்க்குற்றியலுகரச் சொற்கள் - அவை வினையாகவோ, பெயராகவோ என்னவாக இருந்தாலும் - அவற்றையடுத்து வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் அமைந்தால், ஒற்று மிகும்.
இந்த ஒற்று மிகும் விதியானது சொல் - சொல் என்பதற்குமட்டுமல்லாமல், சொல் + விகுதிக்கும் செயல்படுகிறது. ஆனால் புணர்ச்சி என்பது சொல் + சொல்லுக்கே பழந்தமிழில் பொருந்தும் என்று கூறுவார்கள். எனவே 'கள்' பன்மை விகுதி என்பதால் ஒற்று மிகாது என்றும் கூறுவார்கள். ஆனால் இன்றைய தமிழில் புணர்ச்சி விதிகள் சொல் + விகுதிகளிலும் செயல்படுகின்றன. எனவே, வாழ்த்து + கள் - > வாழ்த்துக்கள் என்று அமைந்தாலும் தவறு என்று கொள்ளமுடியாது.
ஒரு செய்தியை மனதில் கொள்ளவேண்டும். ஒருவர் தனது எழுத்தில் ஒரு இடத்தில் ஒற்று இட்டுவிட்டு, அடுத்த இடத்தில் ஒற்று இடாமல் இருக்கக்கூடாது. பழந்தமிழ் இலக்கண விதியின் அடிப்படையில் வாழ்த்துகள் ( பன்மை விகுதியை இணைக்கலாம் என்றால்) என்று எழுதலாம்; அல்லது இன்றைய தமிழின் வளர்ச்சியின் அடிப்படையில் வாழ்த்துக்கள் என்று எழுதலாம். இதில் சரி, தவறைத் தீர்மானிப்பதில் பழந்தமிழா இன்றைய தமிழா என்ற அடிப்படை தேவைப்படுகிறது.
இதற்குமேல் இதில் நான் ''குழப்பத்'' தயார் இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக