வன்தொடர்க் குற்றியலுகரத்தில் புணர்ச்சி . . .
திரு இராமசாமி செல்வராசு
-------------------------------------------
ஐயா, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன்/கேட்கிறேன். மேலே (2) (3) எனக் குறிப்பிட்ட பத்திகளில் பெயரை அடுத்து வினை வந்தால் புணர்ச்சி விதிகளின்படி ஒற்று மிகாது எனக் குறித்திருக்கிறீர்கள். அதை மேலும் நுட்பமாகச் சொல்லவேண்டுமானால், இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது என்னும் விதியைச் சொல்லலாமா? இதுதவிர வேறு ஏதேனும் விதியைச் சுட்டுகிறீர்களா?
வன்தொடர்க்குற்றியலுகரங்கள் குறித்த விதிகள் (ஒற்று மிகும்) முதன்மையானவை என்பதோடு ஒப்புகிறேன். பல இடங்களில் அவ்வாறே எழுதிவருகிறேன். பாட்டுப்பாடு, கருத்துக்கூறு... இப்படியாக.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------
ஆமாம் நண்பரே. ''கருத்து கேள்'' என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 'கருத்து' என்ற பெயர்ச்சொல்லுக்குப்பிறகு 'கேள்' என்ற செயப்பாட்டு வினைச்சொல் நிற்கிறது. 'கருத்தைக் கேள்' என்பதுதானே அதன் பொருள். 'கருத்து பேசுகிறது'' என்ற தொடரில் 'கருத்து' என்பது எழுவாயாக நிற்பதால், ஒற்று மிகாது.
ஆகவே இந்த இடத்தில் (எழுவாய் - பயனிலை வினை ) நிலைமொழி வன்தொடர்க்குற்றியலுகரமாக இருந்தாலும், வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினாலும் ஒற்று மிகாது. அத்துடன் இரண்டாம் வேற்றுமைத்தொகை உறவு இருந்தால்தான் ஒற்று மிகும். ஆனால் 'கருத்து பேசுகிறது' என்பதில் அந்த உறவு இல்லை. எனவே ஒற்று மிகாது.
எனவே தாங்கள் கூறியதுபோல . . . ''(1) நிலைமொழியானது வன்தொடர்க் குற்றியலுகரத்தில் அமைந்து, (2) நிலைமொழி வல்லினத்தில் தொடங்குவதால்மட்டுமே ஒற்று மிகும் என்று கூறமுடியாது; அதனுடன் மற்றும் ஒரு வரையறையையும் முன்வைக்கவேண்டும். அதாவது (3) இரண்டாம் வேற்றுமைத்தொகை என்ற உறவு நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் அமையவேண்டும்''.
ஆனால் 'தீ பிடித்தது' , 'பூ பூத்தது' என்ற தொடரில் எழுவாய் ஓரசை நெடிலாக இருந்தால் , ஒற்று மிகுந்து வந்தாலும் தவறு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது 'தீ- பிடி' , 'பூ-பூ' தொடர்கள் இரண்டாம் வேற்றுமைத் தொடர்கள் இல்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக