திங்கள், 16 ஜனவரி, 2023

கணினித்தமிழில் ஒரு சிக்கல் !

கணினித்தமிழில் ஒரு சிக்கல் !

------------------------------------------------------------------------------------------------------------------- 

சொற்பிழை திருத்துவதற்கான மென்பொருள் கருவியை உருவாக்கும்போது இதுபோன்ற பல சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும் அயல்மொழிச்சொற்களுக்குப்பதிலாகத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கும்போது வருகிற ஒரு பெரிய சிக்கலே ... ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லை அயல்மொழிச் சொல்லா என்பதை முடிவு செய்வது ஆகும். (1) ஒரு குறிப்பிட்ட சொல் தமிழ்ச்சொல்தான் என்கின்றனர் அறிஞர்கள் சிலர் !( 'சில அறிஞர்கள்' ???) ! (2) 'இல்லை, இல்லை. வடமொழிச்சொல்தான் என்றகின்றனர் வேறு சிலர்! (3) இதற்கு அப்பாற்பட்டு அன்புக்குரிய இராமகி ஐயா போன்றவர்கள் ' இது தமிழ்ச்சொல்தான் . . . ஆனால் இதை வடமொழிக்காரர்கள் கடன் பெற்றுக்கொண்டு சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். பின்னர் இந்த மாற்றத்துடன் அந்தச் சொல் தமிழுக்குத் திரும்பிவரும்போது வடமொழிச்சொல்போல் தோற்றமளிக்கிறது. உண்மையில் அது தமிழ்ச்சொல்தான் ( வேஷ்டி - வேட்டி) '' என்கின்றார்கள். சொற்பிறப்பியல் துறையில் (etymology) அறிவில்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சிக்கல்!

--------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கணத்தில் தொழிற்பெயர் (verbal noun) , வினையாலணையும்பெயர் (participial noun / conjugated noun) என்ற வகைப்பாடு நீடிப்பது உண்மையில் தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டிநிற்கிறது. இவை இரண்டும் முழுப்பெயரும் இல்லை; முழு வினையும் இல்லை; இரண்டின் தன்மைகளையும் பெற்று நிற்கிற ஒரு இலக்கணவகைப்பாடு! (+ பெயர் + வினை ' -'அர்த்தநாரிஸ்வரர்' !!!)
மேலும் 'படித்தல்' என்ற தொழிற்பெயர் காலம் காட்டாது; ஆனால் இன்றைய வளர்ச்சிகளான 'படிக்கிறது' 'படித்தது' 'படிப்பது' என்ற தொழிற்பெயர்கள் காலம் காட்டிநிற்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தமிழில் 'வாழ்த்து' 'பாராட்டு' போன்றவை பன்மை விகுதிகளை ஏற்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றன். நானும் 
வாழ்த்துக்கள்
, பாராட்டுக்கள், நிலைபாடுகள் என்றே எழுதிவந்தேன். எனக்கும் இதில் தெளிவான ''நிலைபாடு'' எடுக்கமுடியவில்லை.
ஆனால் தாங்கள் கூறுவதுபோல 'வாழ்த்து' 'பாராட்டு' என்று எழுதும்போது மனநிறைவு இல்லை! '
வாழ்த்துக்கள்
' 'பாராட்டுக்கள்' என்று எழுதினால்தான் நிறைவாக இருக்கிறது.
இதுபோன்றவற்றில்தான் ஒரு தரப்படுத்தம் (standardization) வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்திவருகிறேன்.
நான் ஒரு 'தமிழ் வாத்தியார்' என்பதால் இலக்கணக் கருத்துக்களைப்பற்றி உரையாடும்போது, மிகுந்த 'கவனத்துடன்' இருக்கவேண்டியுள்ளது. இதுதான் உண்மை!
இன்றைக்குப் (பெரும்பான்மை) தமிழ்மக்கள் பயன்படுத்துகின்ற இலக்கணமா? தொல்காப்பியர், நன்னூலார் போன்ற பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்கள் பின்பற்றிய இலக்கணமா? எதைப் பின்பற்றுவது?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India