சேட்ஜிபிடி (ChatGPT) - செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்
--------------------------------------------------------------------------------------------------
நானும் இந்தச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருளை எனது கணினிப்பொறியியல் நண்பர் திரு. சரவணன் என்பவருடன் இணைந்து செயல்படுத்திப் பார்த்தேன். உண்மையில் வியக்கத்தக்க அளவில் இது அமைந்துள்ளது என்பதில் ஐயமே இல்லை. சில பொது அறிவு வினாக்களைக் கேட்டோம். சரியாகவே விடைகள் அமைந்தன.
அடுத்து, சில தமிழ்த் தொடர்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஆங்கிலத் தொடர்களுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பையும் கேட்டோம். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் விடைகள் நன்றாகவே இருந்தன. பொருள் மயக்கங்களைத் தீர்த்து விடைகள் அளிப்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன.
ஆனால் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணினிமொழியியலும் வளரவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு விடைகள் சரியாக அமையும்.
அடுத்து, தமிழ்ச்சொற்களின் இலக்கண அமைப்பு, பகுபதப் பிரிப்பாய்வு தொடர்பான வினாக்களை முன்வைத்தோம். ஓரளவுக்குப் பரவாயில்லை.
ஆனால் இங்குள்ள சிக்கல் . . . தமிழ்ச் சொல்லியில்பற்றிய நமது ஆய்வு ... நமது பகுப்பாய்வின் அடிப்படைகள், புணர்ச்சி இலக்கணங்கள் ஆகியவற்றைப்பற்றி தமிழ் ஆய்வுலகம் அளிப்பதைப்பொறுத்துத்தான் இந்தச் செயற்கை
அறிவுத்திறனைத் தமிழுக்கும் வளர்க்கமுடியும்.
இந்த மென்பொருள் தமிழுக்குச் சிறப்பாகச் செயல்படுவதற்கு நாமும் சில பணிகளைச் செய்யவேண்டும். ஆங்கிலத்தொடர்களின் அமைப்பை அது புரிந்துகொண்டு செயல்படுவதற்குக் காரணம் . . . ஆங்கில வினாத்தொடர்கள், விடைத்தொடர்களைக் கோடிக்கணக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி, ஆங்கிலத் தொடர்களை (Language models) அது புரிந்துகொண்டுள்ளது.
அதுபோல, தமிழ்க்கும் அது செய்யவேண்டுமென்றால் நாமும் நமது வினாக்களைத் தமிழில் அதற்கு அளிக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்தொடர் அமைப்புக்களை இந்தச் செயற்கை அறிவுத்திறன் கற்றுக்கொள்ளமுடியும். அதற்கான மாதிரியை (language models) அது உருவாக்கிக்கொள்ளமுடியும்.
மொத்தத்தில் அறிவியல் உலகில் . . . குறிப்பாகக் கணினியியல் உலகில் . . . கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்ப உலகில் . . . இந்த மென்பொருள் ஒரு வியக்கத்தக்க சாதனை என்பதில் ஐயம் இல்லை.
நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளதுபோல . . . சில வேளைகளில் அதன் விடைகள் குறைபாடுகளுடன் இருந்தாலும் . . . அதைக் கேலி செய்யாமல் . . . அதைக் குறைசொல்லாமல் . . . என்ன சிக்கல் அதற்கு என்று ஆராய்ந்து, நாமும் அதற்குத் தமிழிலேயே உதவிகள் அளிக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக