சனி, 24 ஆகஸ்ட், 2024

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்

----------------------------------------------------------------------------------------------

ஒலிப்பில் மேற்கூற்று ஒலியன்கள் (suprasegmental phonemes) ஆங்கிலத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது ஒரு சிக்கல்.

(1) தமிழைப்பொறுத்தவரை, ஒரு சொல்லுக்குள் அசையழுத்தம் (Syllabic stress) பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமையாது. ஆனால் ஆங்கிலத்தில் அது மிக மிக முக்கியம். ஒரே எழுத்துக்களைக்கொண்ட சொல்லில் உள்ள அசைகளில் குறிப்பிட்ட அசைக்கு அழுத்தம் கொடுப்பதைப்பொறுத்து, அச்சொல் பெயரா வினையா என்று முடிவுக்கு வரவேண்டும். per-mit என்பதில் உள்ள இரண்டு அசைகளில் முதல் அசைக்கு அழுத்தம் கொடுத்தால் (primary stress) பெயர்ச்சொல், இரண்டாவது அசைக்கு அழுத்தம்கொடுத்தால் வினைச்சொல் . ஆங்கில அகராதிகளில் சொற்களைக் கொடுக்கும்போது, இந்த அசையழுத்தத்தைக் குறியிட்டுக் காண்பிக்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாட்டை ஆங்கிலம் கற்கிற நாம் கற்றுக்கொள்கிறோமா அல்லது கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பது ஐயமே.

(2) அதுபோல , ஒரு ஆங்கிலச்சொல்லில் ஒரு சில எழுத்துக்கள் ஒலிக்கப்படுவது இல்லை. Plumber என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் "b" ஒலிக்காது. ஆனால் நாம் அதையும் சேர்த்துத்தான் ஒலிக்கிறோம்.

(3) அடுத்து, ஆங்கில வாக்கியங்களில் பொதுவாக இலக்கணச் சொற்கள் - have, has, been போன்ற சொற்கள் - ஏனைய பொருண்மைச் சொற்களைவிட வெளிப்பாடுகளில் சற்று மறைந்தே நிற்கும் - I have been coming - என்பதில் "I" , "coming" ஆகிய சொற்களைவிட have, been போன்ற இலக்கணச்சொற்கள் சற்றுக் குறைவாக வெளிப்படையாகத் தெரியும்.

மேற்கூறியவற்றில் இங்கு நாம் பேசுகிற ஆங்கிலம் எந்த அளவு சரியாக இருக்கிறது என்பது ஐயத்திற்கு உரியதே ஆகும். எனவே, பொதுவாக இங்கு நாம் கற்றுக்கொள்கிற பேச்சாங்கிலம் உண்மையில் எழுத்து ஆங்கிலமே. இதனால்தான் ஆங்கிலேயர்களின் உரையாடல்களை நாம் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

நமது பள்ளிகளில் ஆங்கிலப்பாடத்தில் இலக்கணத்தை முழுமையாக வெளிப்படுத்துகிற வாக்கியங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள இது தேவைதான். ஆனால் நடைமுறை உரையாடலில் இந்த வாக்கியங்களை (Sentences) எவ்வாறு கூற்றாக (utterance) மாற்றியமைப்பது என்பதுபற்றிய பாடம் குறைவு.

what is your name ? - My name is sundaram (Sentences)

Your name, please - Sundaram (Utterances)

முதலாவது வாக்கியம், ஆங்கில இலக்கணத்தை (Structure of sentences) வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது கூற்று, நடைமுறைக் கருத்தாடல் (Structure of utterances) எவ்வாறு அமையவேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. கருத்துப்புலப்படுத்த மதிப்பு (Communicative value) உள்ள கூற்று இது. இந்த இரண்டாவதுதான் பேச்சாங்கிலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இங்கு பள்ளிகளில் எழுத்தாங்கிலத்தையே பேச்சாங்கிலமாகவும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது எனது கருத்து. (நானும் இப்படித்தான் கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தைப் 'பேசி வருகிறேன்'!) .

மேலைநாடுகளில் தற்போது கருத்தாடல் நோக்கில் அல்லது கருத்துப்புலப்படுத்தநோக்கில் (discourse approach / Language as communication and for communication) மொழிக்கல்வி என்பது பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கே நாம் இன்னும் வாக்கிய இலக்கண அறிவை வெளிப்படுத்தும்நோக்கிலேயே மொழியைக் கற்றுக்கொடுக்கிறோம்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எது இரட்டைவழக்குமொழி?

 எழுத்துமொழியானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ, வட்டாரத்திற்கோ அல்லது குழுவுக்கோ உரிய ஒரு வழக்காக இருக்காது. பொது வழக்காகத்தான் இருக்கும். ஆனால் பேச்சுமொழி, வட்டாரம், சமூகப்பிரிவு போன்றவற்றைப் பொறுத்துப் பல வழக்குகளாக நீடிக்கும்.

இயற்கை மொழிகளில் எழுத்துமொழியானது பேச்சுமொழியோடு வேறுபட்டுத்தான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு குறிப்பிட்ட எல்லைக்கு அல்லது அளவுக்குமேலே சென்றால்தான் அந்த மொழி இரட்டைவழக்குமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுகோல்மட்டுமே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்குப் போதாது. மொழிச்செயல்பாடுகளில் இந்த இந்தச் செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ், இந்த இந்தச் சொயல்பாடுகளுக்குப் பேச்சுமொழி என்று அந்தக் குறிப்பிட்ட மொழிச்சமுதாயம் வரையறுத்து இருக்கவேண்டும். அடுத்து, மக்களின் நோக்கும் இந்த வழக்குகளைப் பொறுத்து மாறும். எழுத்துவழக்கை உயர் வழக்காகவும் பேச்சுவழக்கைத் தாழ்வான அல்லது கொச்சையான வழக்காகவும் அந்த மொழியைப் பேசுபவர்கள் கருதுவார்கள். எனவே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கு மொழியமைப்பு வேறுபாடு மட்டும் அல்லாமல், வேறு சில பண்புகளும் அமைந்திருக்கவேண்டும்.

எழுத்துமொழியானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ, வட்டாரத்திற்கோ அல்லது குழுவுக்கோ உரிய ஒரு வழக்காக இருக்காது. பொது வழக்காகத்தான் இருக்கும். ஆனால் பேச்சுமொழி, வட்டாரம், சமூகப்பிரிவு போன்றவற்றைப் பொறுத்துப் பல வழக்குகளாக நீடிக்கும்.

இயற்கை மொழிகளில் எழுத்துமொழியானது பேச்சுமொழியோடு வேறுபட்டுத்தான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு குறிப்பிட்ட எல்லைக்கு அல்லது அளவுக்குமேலே சென்றால்தான் அந்த மொழி இரட்டைவழக்குமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுகோல்மட்டுமே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்குப் போதாது. மொழிச்செயல்பாடுகளில் இந்த இந்தச் செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ், இந்த இந்தச் செயல்பாடுகளுக்குப் பேச்சுமொழி என்று அந்தக் குறிப்பிட்ட மொழிச்சமுதாயம் வரையறுத்து இருக்கவேண்டும். அடுத்து, மக்களின் நோக்கும் இந்த வழக்குகளைப் பொறுத்து மாறும். எழுத்துவழக்கை உயர் வழக்காகவும் பேச்சுவழக்கைத் தாழ்வான அல்லது கொச்சையான வழக்காகவும் அந்த மொழியைப் பேசுபவர்கள் கருதுவார்கள். எனவே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கு மொழியமைப்பு வேறுபாடு மட்டும் அல்லாமல், வேறு சில பண்புகளும் அமைந்திருக்கவேண்டும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஆங்கிலம் இரட்டைவழக்குமொழியா?

 எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.

1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).
2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)
3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று விதிகள்)
4) உடைத்தான் - ஒடெச்சா(ன்) (இடைவெளி நான்கு விதிகள்)
தமிழில் இவ்வாறு சில சொற்களுக்கு நான்கு மாற்றுவிதிகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலம்போன்ற மொழிகளில் இந்த அளவுக்கு இடைவெளி கிடையாது. தமிழில் மாற்றுவிதிகள் சுமார் 30 உள்ளன.
மேலும் இரட்டைவழக்குமொழிகளில் எழுத்து, பேச்சுமொழிகள் இரண்டையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால்ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுத்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டால், பேச்சுக்குத் தக்க பேச்சுமொழியாக மாற்றமுடியும். எனவேதான் தமிழ்மொழி படிக்க வருகிற அந்நியர்களிடம் முதலில் கேட்கப்படவேண்டியது அவர்கள் கற்க விரும்புவது எழுத்துமொழியையா அல்லது பேச்சுமொழியையா என்ற வினா. கள ஆய்வுக்கு போகவிரும்புகிறவர்கள் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள், தமிழ் நூல்களைமட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யவிரும்புபவர்கள் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் தேவைப்படுகிறவர்கள் ஒன்றை முதலில் கற்றுக்கொண்டு மற்றொன்றை அடுத்துத் தனியாகக் கற்பார்கள். இரட்டைவழக்கு இல்லாத ஆங்கிலம்போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் மற்றொன்றைச் சில மாற்றங்களுடன் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம். இதுபற்றிய நீண்ட ஆய்வுகள் சமூகமொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரட்டைவழக்குமொழிச்சூழல் என்பது ஒரு சமூகமொழியியல்ச் சூழல். இதுபற்றிப் பெர்குசன்(Ferguson), பிஷ்மேன் (Fishman) , டி சில்வா (De Silva) போன்றோர் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழுக்குப் பேரா. இரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. முத்துச்சண்முகம், பேரா. ஞானசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர். இரண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் ( ஒன்று, எனது ஆய்வேடு, மற்றொன்று ஜான் பிரிட்டோ (அமெரிக்க வாழ் பேராசிரியரின் ஆய்வேடு. ). நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படிக்கும்போது இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார். அவரிடம் நான் சமூகமொழியியல் கற்றுக்கொண்டேன். அவர் தமிழ் இரட்டைவழக்குபற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
இடைவெளியை மாற்றுவிதிகள் கொண்டு அளக்கலாம் என்ற கருத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் பேரா. பொற்கோ. அவருடைய வழிகாட்டுதலில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வே மேற்கொண்டேன்.
சமூகமொழியியலில் இரட்டைவழக்கு என்பது துறைசார்ந்த ஒரு முக்கியமான கருத்து.

தமிழில் இரட்டைவழக்குச் சூழல் மாற்றப்படவேண்டுமா?

திரு. இராமசாமி செல்வராஜ்

----------------------------------------------------

இரட்டை வழக்கு மாற்றப்படவேண்டிய ஒன்று என்று இங்கே நீங்கள் கூறுவது சிறுவியப்பை அளிக்கிறது ஐயா. இதற்கு முன்னர் எழுத்துவழக்கில் தான் எழுதவேண்டும், பேச்சுவழக்கில் பேசவேண்டும் என்று நீங்கள் கூறியதாக நினைவு. இது மாற்றமா? இருவழக்கையும் நெருங்கக்கொண்டுவரவேண்டும் என்பதற்கான தேவை என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------

நண்பரே. நான் என் நிலையை மாற்றவில்லை. இன்றைய இரட்டைவழக்குச் சூழலில் எழுத்தில் எழுத்துத்தமிழ், பேச்சில் பேச்சுத்தமிழ்தான் இருக்கவேண்டும். ஆனால் ஒரு நீண்ட கால வரலாற்றில் எவ்வாறு இரட்டை வழக்குச் சூழல் தோன்றியதோ அது போன்று எதிர்கால வரலாற்றில் இந்த இரட்டைவழக்குச் சூழல் மறையும். இன்றைய பொதுப்பேச்சுத்தமிழைத் தனிநபர்கள் உருவாக்கவில்லை. சமூக வளர்ச்சிதான் உருவாக்கியுள்ளது. அதுபோல பண்டித எழுத்துத் தமிழும் இன்று சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் தமிழாக மாறியுள்ளது. தமிழ்மொழியின் இந்த இயங்கியல் வளர்ச்சி எதிர்காலத்தில் இண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும். இந்த இடைவெளிக் குறைப்பைத்தான் " இரட்டைவழக்குச் சூழல் மறைவு" என்று கூறுகிறேன். இதுபற்றித் தனியே ஒருபதிவு இடுகிறேன்.

திரு. இராமசாமி செல்வராஜ்

------------------------------------------------

சிறுகேள்விகளுக்கும் விரிவாக நீங்கள் கருத்துகளை முன்வைத்து விளக்குவது மிகவும் சிறப்பு. போற்றத்தக்கது. எழுதுங்கள் ஐயா, தெரிந்துகொள்கிறோம்.

ஒருவகையில் முந்தைய காலத்து உரைநடையைவிட இப்போது எளிமையாகியிருப்பது உண்மையே. இதன் தொடர்ச்சியாக இன்னும் எளிமையாகும்; அது பேச்சுத்தமிழுக்கு நெருங்கும் எனில் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது மாற்றப்படவேண்டிய ஒன்று என்று சொன்னதால் தான் எனது ஐயத்தை எழுப்பினேன். எல்லோரும் அணுகும்விதத்தில் மொழி எளிமைப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துத்தான். சங்க இலக்கிய காலத்துத்தமிழைப் பலரால் இயல்பாகப்படித்துப் புரிந்துகொள்ள இயலாதுதான். ஆனால், தற்காலத்தமிழ் எளிமையானது தானே. அதைக் கற்று, எழுதி, பழகி, சிறப்பாகக் கையாள முடியவேண்டும் தானே? ஆனால், அதற்கான குறைந்தளவு முயற்சியும் கைக்கொள்ளாமல், இயல்பானது பேச்சுத்தமிழே; செந்தமிழ் எல்லாம் தேவையில்லை என்று மேம்போக்காகக்கூறிச்சென்றுவிடும் சிலருக்காக (அது பலராகவும் இருக்கலாம்), மொழியின் சிறப்பை, அழகை விட்டுக்கொடுக்கவேண்டுமா எனும் ஆதங்கத்தில் எழும் கேள்வி.

எனது அனுபவத்தில் இதைப்போன்றே முன்னர், இலக்கணம், ஒற்றுப்பிழை எல்லாம் முக்கியமில்லை; கருத்துவெளிப்பாடுதான் முக்கியம் என்று சிலர் என்னிடம் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அதை ஏற்க இயலவில்லை. அதுபோன்றே இரட்டைவழக்கு மாறவேண்டும் எனில் அது யாருக்காக, எதற்காக, ஏன், என்று கேள்விகள் எழுகின்றன. காலப்போக்கில் இயல்பாக இதன் வேறுபாடுகள் மறையும் என்றால் அது சரியே. (என் கற்பனைக்கு அது சற்று எட்டாததாய் இருக்கிறது 🙂 ).

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------

நன்றி நண்பரே. உறுதியாக எழுத்துத்தமிழின் அமைப்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. சிலர் எழுத்துத்தமிழே வேண்டாம், பேச்சுத்தமிழையே எழுதுவோம் என்று கூறலாம். அது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதப்பட்ட இலக்கியங்கள், இன்றைய எழுத்துத்தமிழில் உள்ள நூல்களை எதிர்காலத்தில் எவ்வாறு படிக்கமுடியும்? அதுபோன்று பேச்சுத்தமிழைக் கைவிடச்சொல்லி, எழுத்துத்தமிழையே அனைவரும் நடைமுறை உரையாடல்களுக்கும் பயன்படுத்தவேண்டும் என்று கூறுவதும் போகாத ஊருக்கு வழிகூறுவதுபோலவே அமையும். எனவே, இந்த இரட்டைவழக்குப் பிரச்சினையைச் சற்றுக் குறைக்கச் சில திட்டமிட்ட மொழிவளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளலாம். அவ்வளவுதான். நான் முன்பேகூறியதுபோல, எதிர்காலச் சமுதாய வளர்ச்சியில் இந்த இரட்டைநிலை வழக்கு இல்லாமல் போகலாம். ஆனால் அது எப்போது நடைபெறும், எப்படி நடைபெறும் என்பதுபற்றியெல்லாம் இப்போது ஒன்றும் நாம் கூறமுடியாது.

வங்காளமொழியில் ஒரு கட்டத்தில் இரட்டைவழக்குச் சூழல் நிலவியதாகவும் (சாது பாஷா, சலித் பாஷா) , பின்னர் தாகூர் காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் அதில் இரட்டைவழக்குச் சூழல் மாறியதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று, தெலுங்கிலும் இரட்டைவழக்குச் சூழல் தோன்றி நீடிப்பது தடுக்கப்பட்டது என்று பேராசிரியர் பி. எச். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். கன்னடத்திலும் உயர்வழக்கு என்பது பிராமணியச் சமுதாயத்தின் வழக்காக இருந்ததாகவும் பேச்சுவழக்கு மற்றவர்களின் வழக்காக இருந்ததாகவும், பின்னர் இந்த நிலை மாறிவிட்டது என்றும் பேரா. எச்.எம். நாயக் கூறியுள்ளார்.

இரட்டைவழக்குச் சூழலால் சில பாதிப்புகள் உண்டுதான். முறைசார்ப் பள்ளிக்கல்வி பெறாதவர்கள் எழுத்துத்தமிழைப் படிக்கவோ, அதில் எழுதவோ முடியவில்லை என்பது ஒரு பிரச்சினை. இதனால் முதியோர் கல்வியில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கின்றனர். அதுபோன்று தமிழ்க் குழந்தைகள் பிறந்து வளரும்போது இயற்கையாகப் பேச்சுத்தமிழைப் ''பெற்றுக்கொள்கின்றனர்''. ஆனால் பள்ளிக்குச் செல்லும்போது பாடங்கள் எழுத்துத்தமிழில் இருப்பதால், அதை ஒரு பிறமொழிபோன்று படிக்கிறார்கள். இருப்பினும் 10,12 ஆண்டுகள் படித்தபிறகும் எழுத்துத்தமிழில் தவறு இல்லாமல் எழுதமுடியவில்லை. அதுபோன்று தமிழைக் கற்றுக்கொள்ள வருகிற பிறமொழிக்காரர்கள் இரண்டு வழக்குகளையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஒரு வழக்கைமட்டும் கற்றுக்கொண்டு, மற்றொரு வழக்கையும் கையாளுவதில் சிக்கல் உண்டு. இந்தச் சிக்கல்களை எல்லாம் ஆய்ந்து, அவற்றின் பாதிப்பைக் குறைப்பதற்கான மொழிவளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

முதலில் மாற வேண்டியது . . . இரண்டுவழக்குகள்பற்றிய மக்களின் சமூகநோக்கு. காலையிலிருந்து இரவு வரை பேசுகிற பேச்சுத்தமிழைக் கொச்சைத்தமிழ் என்றும் எழுத்துத்தமிழே உயர்தமிழ் என்றும் கருதுகிற மனப்பாங்கு அகலவேண்டும். இரண்டுமே தமிழ்தான், சரியான தமிழ்தான் என்ற கருத்து ஓங்கவேண்டும்.

ஆங்கிலமும் தமிழும் - உச்சரிப்பில்!

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்: 

ஐயா ஒரு ஐயம்.

know என்பதை பேச்சுமொழியில் சரியாகச்சொல்ல தேவைப்படும் அறிவை மாற்றுவிதிகளின் எண்ணிக்கைக்குள் கொண்டுவரவேண்டுமா?

ந. தெய்வ சுந்தரம் :

ஆங்கிலத்தில் எழுதுவதை அப்படியே பல நேரங்களில் வாசிக்கமுடியாது. cat, cut, car என்பதை உச்சரிக்கும்போது c" ஐ ''k" என்று உச்சரிக்கிறோம். ஆனால் city, cipher போன்றவற்றை உச்சரிக்கும்போது , "c" என்பதை "c" என்றே உச்சரிக்கிறோம். Psychology என்பதை உச்சரிக்கும்போது, "p" ஐ விட்டுவிடுகிறோம். 'creche" என்பதை "krush" என்று வாசிக்கிறோம். இதன் காரணமாகத்தான் ஆங்கில அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அடைப்புக்குறிக்குள் உச்சரிப்பைத் தருகிறார்கள். உச்சரிப்புக்கான தனி அகராதிகளும் Daniel Jones, Gimpson போன்றவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு மாறியமைகிறது என்பதற்கான காரணங்களுக்கு இப்போது நான் செல்லவில்லை.

ஆனால் தமிழில் எழுதுவதை அப்படியே வாசிக்கலாம். மாற்றொலி விதிகள்மட்டும் தெரிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, சொல்முதலிலும் சொல் இடையில் இரட்டித்துவரும்போது 'க' என்பது ஒலிப்பில்லா வல்லினமாகவும் (கடல், அக்காள்) , சொல் நடுவில் மெல்லினத்திற்குப்பின் வரும்போது ஒலிப்புள்ள ஒலியாகவும் ( தங்கை, பங்கம்) , சொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போது சற்று உரசல் தன்மையுடனும் உச்சரிக்கப்படுகிறது. இதற்கு இவ்வாறு தெளிவான விதிகள் இருப்பதால் எழுதுவதை அப்படியே வாசிக்கமுடியும். இந்தச் சிக்கலும்கூட வல்லினங்களுக்குமட்டும்தான் உண்டு. முற்றுகரம், குற்றுகரத்திற்கும் உண்டு. மற்றபடி சிக்கல் இல்லை.

தாங்கள் கூறியுள்ள know என்பதில் உள்ள k உச்சரிக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற வேறுபாடுகளுக்கும் சில விதிகளைக் கூறலாம். c என்ற எழுத்துக்கு அடுத்துப் பின்னுயிர்கள் a, u போன்றவை வந்தால் k என்று உச்சரிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் முன்னுயிர்கள் வந்தால் c என்றே உச்சரிக்கப்படும். மேலும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கும்போது, அவற்றின் உச்சரிப்புகளையும் சேர்த்து கடன் வாங்கிவிடுகிறது.

அடுத்து, தமிழில் ஒலியன்களுக்குமட்டும் எழுத்துகள் இருப்பதால் , அயல்மொழிச்சொற்களைக் கடன் வாங்கும்போதும் , ஒலிப்புள்ள ஒலியாக இருந்தாலும், தமிழில் உள்ள எழுத்துகளையே பயன்படுத்துகிறோம். குண்டு (bomb), குண்டு (stout) ; பாவம் (expression) , பாவம் (sin) , பால் (ball), பால் (milk) போன்ற சொற்களைப் பார்த்தால் இது வெளிப்படையாகத் தெரியும். இந்தச் சொற்களை வாசிக்கும்போது குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்படலாம். ஆனால் பெரியவர்களுக்கு இந்தச் சிக்கல் பெரும்பாலும் வராது.


தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் .

 தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் . . .

----------------------------------------------------------------------
தமிழ் இரட்டைவழக்குபற்றிய என் பதிவில் நண்பர் திரு. மாலன் இரண்டு ஐயங்களை எழுப்பியுள்ளார். உண்மையில் வரவேற்கவேண்டிய ஐயங்கள் இந்த இரண்டும். இதற்கான விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்பதால், இதைத் தனிப்பதிவாக இடுகிறேன்.
ஐயம் 1 : இரட்டை வழக்குத் தோன்றுவதற்கான சூழல்/சமூகக் காரணிகள் என்ன?
ஐயம் 2 : பேச்சிலிருந்து எழுத்தா, எழுத்திலிருந்து பேச்சா என்ற புதிருக்கான விடையை அறிதல் இயலுமா?
ஐயம் 2-க்கான பதிலை முதலில் விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். எழுத்துமொழி உள்ள எந்தவொரு (இயற்கை) மொழியிலும் பேச்சுமொழி இல்லாமல் இருக்காது. இந்தப் பேச்சுமொழிதான் அந்த மொழிச்சமுதாயத்தில் முதலில் நீடித்திருக்கமுடியும். அந்த மொழிச்சமுதாயத்தின் வளர்ச்சியையொட்டி - அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு பேச்சுவழக்குதான் இருந்திருந்தால், அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் இருந்திருந்தால், அச்சமுதாயத்தில் ''உயர்ந்தோர்'' பேச்சுவழக்குக்கு வரிவடிவம் கொடுப்பது என்பது இயற்கைதான். அந்த வர்க்கத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தேவைகளுக்காக அதனுடைய 'பேச்சுவழக்கு' எழுத்துவழக்காகவும் வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால் ஒன்று உறுதி . . . பேச்சுவழக்குதான் எந்தவொரு சமுதாயத்திலும் தோன்றி நீடித்திருக்கமுடியும். எழுத்துமொழி பின்னர்தான் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பேச்சுமொழிக்கான எழுத்துவடிவமாக - தோன்றியிருக்கமுடியும். இதில் ஐயத்திற்கு இடமே இல்லை என்பது எனது கருத்து.
இப்போது ஐயம் 1-க்கான பதிலை அறிய முயலலாம்.
எழுத்துவழக்கு தோன்றிய முதல் காலகட்டத்தில் எழுத்துவழக்குக்கும் பேச்சுவழக்குக்கும் இடையில் வேறுபாடு இருந்திருக்கமுடியாது. அவ்வாறு உருவாக்கப்பட்ட எழுத்துமொழியில் இலக்கணங்கள், இலக்கியங்கள் உருவாகும்போது, ஒருவகையான தரப்படுத்தம் - codification, standardization, modernization - மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இந்தத் தரப்படுத்தப்பட்ட எழுத்துமொழியானது, தொடர்ந்து தன் பண்புக்கூறுகளை மாற்றாமல் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த எழுத்து வழக்கிற்கு அடிப்படையான பேச்சுவழக்கு சமுதாயத்தின் தேவைகளையொட்டி மாறிக்கொண்டுதான் இருக்கும். அதை எந்தவொரு தனிமனிதராலும் அல்லது குழுவாலும் தடுத்துநிறுத்தமுடியாது.
ஆனால் எழுத்துமொழியை மாற்றாமல் அப்படியே தக்கவைக்க குறிப்பிட்ட குழுவால் முடியும். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்து , மாறிவந்த பேச்சுமொழிக்கும் ஒரு குழுவின் தேவைக்காகத் தரப்படுத்தப்பட்டு, அவ்வளவு சீக்கிரத்தில் - பேச்சுவழக்கின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மாறாத எழுத்துமொழிக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கும். எழுத்துவழக்கும் காலப்போக்கில் சற்று மாறலாம். ஆனால் அந்த மாற்றத்தை அந்த ஆதிக்கக்குழுவினர் கட்டுப்படுத்தமுடியும். ஆனால் பேச்சுவழக்கைக் கட்டுப்படுத்தமுடியாது.
அதன் விளைவு . . . இரண்டு வழக்குக்கிற்கும் இடையில் வேறுபாடு - இலக்கண அமைப்பு, மொழிச்செயல்பாடு, சமுதாயநோக்கு ஆகியவற்றில் வேறுபாடு - தோன்றுவது இயற்கையே. இதன் விளைவுதான் இரட்டைவழக்குகள் தோற்றமும் நீடிப்பும் ஆகும்.
பொதுவாக, மிகவும் பழமையான மொழிகளில்தான் - கிரேக்கம், லத்தீன், தமிழ் போன்ற மொழிகளில்தான் - இந்த இரட்டைவழக்குச் சூழல் நீடிக்கிறது. ஆனால் இந்த இரட்டைவழக்குச்சூழல் தோன்றுவதற்கு மொழிக்குடும்பமோ அல்லது பூகோள வரையறையோ காரணம் கிடையாது.
'இரட்டை வழக்கு' தமிழ் ஒரு திராவிட மொழிக்குடும்பம் (பூகோளப் பகுதி தென்னிந்தியா); 'இரட்டைவழக்கு' சிங்களம் இந்தோ-ஆரியக்குடும்பம் (பூகோளப்பகுதி இலங்கை) ; 'இரட்டை வழக்கு' கிரேக்கம்' இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் (பூகோளப்பகுதி கிரீக்) ; 'இரட்டை வழக்கு 'அரபுமொழி' செமிட்டிக் குடும்பம் (பூகோளப்பகுதி அராபியநாடுகள்).
இரட்டைவழக்குச் சூழல் நிலவிய அல்லது நிலவுகிற மொழிகள் சில:
கிரேக்கம், அரபுமொழி, ஸ்விஸ் ஜெர்மன், ஹைத்தியன் கிரியோல், தமிழ், சிங்களம், வங்காளம், தெலுங்கு, கன்னடம். இவற்றில் தற்போது வங்காளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் இரட்டைவழக்குச் சூழல் மறைந்துவிட்டன அல்லது மறைந்துவருகின்றன.
இரட்டைவழக்குமொழிகளைப்பொறுத்தவரையில் உயர்வாகக் கருதப்படுகிற 'எழுத்துமொழி அல்லது இலக்கியமொழி' தனது வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் வழக்காக இல்லாமல், ஒரு பொதுவழக்காக மாறி அமைகிறது. ஆனால் பேச்சுவழக்குகள் அவ்வாறு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சுவழக்குகள் நீடிக்கலாம். அவற்றின் இடையே ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் நீடிக்கும்.
சில கட்டங்களில் எழுத்துமொழிகளில்கூட ஒன்றுக்குமேற்பட்ட பிரிவுகள் தோன்றலாம். 'செந்தமிழ்ச்செல்வி' போன்ற தமிழ் இலக்கிய இதழ்களின் எழுத்துத்தமிழ் நடை அனைவருக்கும அவ்வளவாகப் புரியாது. ஆனால் தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், கல்கி, பாடநூல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிற எழுத்துத்தமிழை அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும். இருப்பினும் பேச்சுத்தமிழில் இருக்கிற பல்வேறு வழக்குகள் போன்று பல்வேறு எழுத்துவழக்குகள் இருக்காது.
தமிழில் நீடிக்கிற எழுத்துவழக்கு- பேச்சுவழக்கு வேறுபாடுபற்றி பேராசிரியர்கள் ரா.பி. சேதுப்பிள்ள, முத்துச்சண்முகம் ஆகியோர் ஆய்ந்து இருந்தாலும், அவர்களது ஆய்வுகள் தமிழைத் தாண்டிச் செல்லவில்லை. ஆனால் Ferguson என்ற சமூகமொழியியல் அறிஞர் உலகில் நீடிக்கின்ற பல்வேறு இரட்டைவழக்கு மொழிகளை ஆய்ந்து, 'இரட்டைவழக்கு - Diglossia ' என்ற ஒரு மொழியியல் வகைப்பாட்டை முன்வைத்தார். அவரும் இரட்டைவழக்கு மொழிகளுக்கான அனைத்துப் பண்புகளும் உடைய மொழிக்கான எடுத்துக்காட்டாக, தமிழ்மொழியைக் கூறினார். அதற்குப்பின்னர் மொழியியல் அறிஞர்கள் பலர் பலமுனைகளில் இரட்டைவழக்குச் சூழல்பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றனர்.
இரட்டைவழக்குத் தமிழில் எழுத்துவழக்கானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதியினரின் அல்லது பகுதியின் வழக்கு இல்லை; ஆனால் பேச்சு வழக்குகள் தமிழில் பூகோளப் பகுதிகளையொட்டி - மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், குமரித்தமிழ், சென்னைத் தமிழ் என்று - பல வழக்குகளாக நீடிக்கின்றன. ஆனால் இன்றைய தமிழகத்தில் கல்வி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் ஒரு பொதுப் பேச்சுத்தமிழும் (Common Spoken Tamil) தோன்றி நீடிக்கிறது. இன்றைய திரைப்படங்களில் பயன்படுத்துகிற பேச்சு வழக்கு ஒரு பொது வழக்காக இருப்பதால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. (பழைய தமிழ்த் திரைப்படங்களில் அரசர்கள் உட்பட உயர்ந்த நிலைந்த நிலையில் உள்ள மக்கள் எழுத்துத்தமிழில் பேசினார்கள். நகைச்சுவைக்காகப் பேசும் பாத்திரங்களே பேச்சுத்தமிழில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இன்றும் திரைப்படங்களில் பாத்திரங்களின் யதார்த்தத்திற்காகக் குறிப்பிட்ட பகுதிகளின் வழக்குகள் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். மற்றபடி பொதுப்பேச்சுத்தமிழ்தான் பயன்படுத்தப்படுகிறது.
இரட்டைவழக்குச் சூழல் உண்மையில் மாற்றப்படவேண்டிய ஒன்று. இது ஒரு சமூகமொழியியல் பிரச்சினை. ஆனால் எவ்வாறு இதைத் தீர்ப்பது என்பதில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. பொதுப்பேச்சுவழக்கையே எழுத்துவழக்காகக் கொள்ளலாம்; அல்லது எழுத்துவழக்கையே பேச்சுவழக்காக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டுக்குமே நடைமுறை யதார்த்தத்தில் வாய்ப்பு இல்லை. இதற்கு மாற்றாக, பொதுப் பேச்சுவழக்குக்கும் பொது எழுத்துவழக்குக்கும் இடைவெளியைக் குறைக்க முயலலாம். இதற்கான மொழி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம். இதுபற்றித் தனியாக விவாதிக்கவேண்டும்.

இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?

 ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கான அடிப்படைபற்றி ஒரு உரையாடல் . . .

----------------------------------------------------------------------
பேரா. நயினார் எம். அனந்தபுரி
-----------------------------------------
ஆங்கிலமும் தமிழைப்போல் (தமிழ் அளவுக்கு இல்லையென்றாலும்) இருவழக்கு மொழி தானே. Spoken English என்று சொல்கிறார்களே! முறையாக ஆங்கிலம் படித்தவர்களும் 'Spoke English ' வகுப்புகளுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பேரா. கோவிந்தசுவாமி இராஜகோபால்
---------------------------------------------
To larger extent, English too a Diglossic language.
ந. தெய்வ சுந்தரம்
---------------------
நன்றி பேராசிரியர் அவர்களே. எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும்.
அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.
1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).
2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)
3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று விதிகள்)
4) உடைத்தான் - ஒடெச்சா(ன்) (இடைவெளி நான்கு விதிகள்)
தமிழில் இவ்வாறு சில சொற்களுக்கு நான்கு மாற்றுவிதிகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலம்போன்ற மொழிகளில் இந்த அளவுக்கு இடைவெளி கிடையாது. தமிழில் மாற்றுவிதிகள் சுமார் 30 உள்ளன.
மேலும் இரட்டைவழக்குமொழிகளில் எழுத்து, பேச்சுமொழிகள் இரண்டையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுத்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டால், பேச்சுக்குத் தக்க பேச்சுமொழியாக கற்றுக்கொள்ளமுடியும்.
எனவேதான் தமிழ்மொழி படிக்க வருகிற அந்நியர்களிடம் முதலில் கேட்கப்படவேண்டியது அவர்கள் கற்க விரும்புவது எழுத்துமொழியையா அல்லது பேச்சுமொழியையா என்ற வினா. கள ஆய்வுக்குப் போகவிரும்புகிறவர்கள் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள், தமிழ் நூல்களைமட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யவிரும்புபவர்கள் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் தேவைப்படுகிறவர்கள் ஒன்றை முதலில் கற்றுக்கொண்டு மற்றொன்றை அடுத்துத் தனியாகக் கற்பார்கள். இரட்டைவழக்கு இல்லாத ஆங்கிலம்போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் மற்றொன்றைச் சில மாற்றங்களுடன் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம்.
இதுபற்றிய நீண்ட ஆய்வுகள் சமூகமொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரட்டைவழக்குமொழிச்சூழல் என்பது ஒரு சமூகமொழியியல்ச் சூழல். இதுபற்றிப் பெர்குசன்(Ferguson), பிஷ்மேன் (Fishman) , டி சில்வா (De Silva) போன்றோர் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழுக்குப் பேரா. இரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. முத்துச்சண்முகம், பேரா. ஞானசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர். இரண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் ( ஒன்று, எனது ஆய்வேடு, மற்றொன்று ஜான் பிரிட்டோ (அமெரிக்க வாழ் பேராசிரியரின் ஆய்வேடு. ).
நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படிக்கும்போது இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி சில்வா வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார். அவரிடம் நான் சமூகமொழியியல் கற்றுக்கொண்டேன். அவர் தமிழ் இரட்டைவழக்குபற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
இடைவெளியை மாற்றுவிதிகள் கொண்டு அளக்கலாம் என்ற கருத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் பேரா. பொற்கோ. அவருடைய வழிகாட்டுதலில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வே மேற்கொண்டேன்.
சமூகமொழியியலில் இரட்டைவழக்கு என்பது துறைசார்ந்த ஒரு முக்கியமான கருத்து.
பேரா. பொற்கோ அவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள் . . . ''இரட்டைப்பழங்கள் வேறு; இரு பழங்கள் வேறு.'' என்று. இருமொழியம் (Bilingualism) என்பது வேறு , இரட்டைவழக்குகள் (Diglossia) என்பது வேறு.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India