ஓராயிரத்தின் வரலாறு
உயிரில் முடிகிற ஒரு சொல் , உயிரோடு தொடங்குகிற ஒரு விகுதி அல்லது சொல்லோடு இணைந்துவரும்போது, உயிரில் தொடங்குகிற விகுதி அல்லது சொல்லுக்கு தொடக்கம் இல்லாமல் ( மெய் இல்லாமல்) உள்ளது. இதைத் தவிர்க்கவே உடம்படுமெய் தோன்றுகிறது. ( இலை + ஆ = இலையா , தெரு+ஆ = தெருவா ). அதுபோன்று கல் + ஐ என்பதில் ஐ என்ற விகுதிக்கு அசைத்தொடக்கம் இல்லாத காரணத்தினால்தான், ல் ஒற்று இரட்டிக்கிறது ( கல்+ஐ=கல்லை).
" கால்" என்ற சொல் ஓரசைச்சொல். அதோடு " ஆ " என்ற விகுதி இணையும்போது, முதல் அசையிலுள்ள "ல்" ஒற்று , அடுத்த அசைக்குத் தொடக்கமாக அமையும்.
அசையமைப்பு விதிகளைச் செயல்படுத்துவதற்காகவே உடம்படுமெய் தோன்றல், ஒற்று இரட்டித்தல் போன்றவை நிகழ்கின்றன. இதில் உயிர் கெடுதலும் அடங்கும். ஒரு + ஆயிரம் என்பதைச் சேர்த்து எழுதும்போது, ஆயிரம் என்ற சொல்லின் தொடக்கத்தில் தொடக்கமான மெய் இல்லை.
இதைச் சரிப்படுத்துவதற்கு , முந்தைய சொல்லான " ஒரு " ( இரண்டு அசைகள் உள்ளன) என்பதில் உள்ள " ரு" என்பதிலுள்ள " ர் " ஒற்று உதவுகிறது. தனி அசையாக இருக்கிற " ரு" ( ர் + உ) என்பதில் உள்ள " உ " என்ற உச்சம் கெட்டு, " ரு " என்ற அசை தன் அசைத்தன்மையை இழக்கிறது. பின்னர் தனித்து நிற்கிற " ர் " ஒற்று , " ஆயிரம் " என்ற சொல்லின் முதல் அசையான " ஆ " என்பதன் தொடக்க மெய்யாக அமைகிறது. அப்போது மற்றொரு அசைவிதி செயல்படுகிறது. தனிக்குறிலையடுத்து " ர்" என்ற மெய் வராது. எனவே "ஒ" என்ற குறில் நெடில் ( ஓ ) ஆகிறது. இப்போது நமக்கு ஓராயிரம் ( ஓர் +ஆயிரம்) என்ற ஒரு சொல்நீர்மையுடைய ஒரு சொல் கிடைக்கிறது.
பேச்சுவழக்கில் ஓராயிரம் என்பது ஓர் ஆயிரம் என்று பிரித்து உச்சரிக்கப்பட்டிருக்கலாம். பின்னர் அதன் தாக்கம் எழுத்துவழக்கில் ஏற்பட்டிருக்கலாம்.
இதுவே ஓராயிரத்தின் வரலாறாக இருக்கவேண்டும். ஒரு + உயிர் = ஓருயிர் , ஒரு + உலகம் = ஓருலகம் , ஒரு + எழுத்து = ஓரெழுத்து என்பதைப் பார்க்கலாம்.
சேர்த்து எழுதும்போது, அசையமைப்பு விதியைக் காப்பாற்றுவதற்காக வந்த ஒன்றுதான் , பின்னர் பிரித்து எழுதும்போதும் ( ஒரு ஆயிரம்) சிலரால் பயன்பட்டிருக்கலாம்.
இதுதான் ஓராயிரத்தின் வரலாறாக இருக்கவேண்டும்.
தமிழ் அசையமைப்பின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள , மொழியியலில் ஒரு முக்கியக் கோட்பாடாக விளங்கும் Optimality Theory உதவுகிறது.
|
வியாழன், 13 செப்டம்பர், 2012
ஓராயிரத்தின் வரலாறு
3:28 AM
ந.தெய்வ சுந்தரம்
3 comments
3 கருத்துகள்:
தங்கள் கட்டுரைகளும், தளமும், மென்தமிழும் தமிழுக்கு வற்றாத வளம் சேர்க்க வாழ்த்துகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Superb! புணர்ச்சிவிதிகளுக்கு அறிவியல் விளக்கம்! மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. It makes perfect sense.
யாப்பசைகளாக (நேர், நிரை) பிரிக்க வாய்ப்பாடுகள் இருப்பதுபோல் மொழியசைகளுக்கும் இருக்கின்றனவா?
தனிக்குறிலையடுத்து " ர்" என்ற மெய் வராது என்பதற்கு பண்டைய இலக்கண விதி இருக்கிறதா, அல்லது இது முற்றிலும் மொழியியலிலிருந்து பெற்றதா?
கருத்துரையிடுக