காய்கனிக் கடையில் ஆங்கிலம் . . . ஆங்கிலம் மட்டுமே! தமிழுக்கு இடம் இல்லை!
------------------------------------------------------------------------------------------------------------------
அடையாறில் உள்ள ஒரு காய்கனிக்கடையில் - ''பழமுதிர்ச்சோலையில்'' - சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு இரண்டையும் வாங்குவதற்காகச் சென்றேன். பொதுவாக, இந்த இரண்டு கிழங்குகளும் சென்னையில் அவ்வளவாகத் தெரியாது. பொங்கலையொட்டிச் சில கடைகளில் கிடைக்கிறது.
இந்தக் கிழங்குகளைத் தேடும்போது, சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அளவுத் தோற்றம் குழப்பத்தைக் கொடுத்தது! அவற்றின் மேல் உள்ள பெயர்ப்பலகைகளைப் பார்த்தால், பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு அவற்றின் ஆங்கிலப்பெயர்கள் தெரியாது. என்ன செய்வது?
பற்றுச்சீட்டு போடுகிற பெண்மணியிடம் கேட்டேன். அவர் இதுதான் சிறுகிழங்கு, இதுதான் சேனைக்கிழங்கு என்று சொன்னார்கள்.
எனவே காய்கனிகளின் ஆங்கிலப் பெயர்கள் தெரியாமல் . . . தமிழ்நாட்டில் ... தமிழ் உணர்வு . . . தமிழின உணர்வு மிகுந்த தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாமல் நமக்குத் தேவையான சாதாரணப் பொருள்களைக்கூட வாங்கமுடியாது! தாய்மொழி உணர்வு வாழ்க!
அதற்கு ஒரே வழி ... ஆங்கிலப்பெயர்கள் தெரியாத என்னைப் போன்றவர்கள் சிறுகடைகளை நோக்கிச் செல்லவேண்டும் . . . பழமுதிர்ச்சோலைகளுக்குப் போகக்கூடாது!
அல்லது லிப்கோ அகராதியில் இறுதியில் பொருள்களின் ஆங்கிலப் பெயர்கள் பின்னிணைப்பாகக் கொடுத்திருப்பார்கள்! அதைப் படித்துவிட்டு . . . தேர்வு எழுதிவிட்டுச் செல்லவேண்டும். பல்பொருள் அங்காடிகளிலும் ('சூப்பர் மார்க்கெட்')
இதே சிக்கல்! கடுகு, கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காயம் ..... இவை போன்ற அனைத்துக்கும் ஆங்கிலப் பெயர்களைத் தெரிந்துகொண்டுதான் கடைகளுக்குச் செல்லவேண்டிய ஒரு ''தமிழ் உணர்வுச்'' சூழல் இங்கே!
--------------------------------------------------------------------------------------------------------------------------
இருமொழி இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் ஆங்கிலம்மட்டுமே இருக்கிறது. அடுத்து, நான் கூறியது பற்றுச்சீட்டு போடும் இடம் இல்லை. காய்கள் இருக்கிற இடம். என்ன காய் என்று விளக்குகிற இடம். எனவே பார்கோட் சிக்கல் இல்லை இது.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்து, ஆங்கிலம் என்ன, வேறு எந்த மொழியை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் பொருள்கள் தமிழில் எழுதப்படவேண்டும். ஒன்று இது தமிழ்நாடு. இரண்டாவது கடைகளுக்கு வரும் மக்கள் பெரும்பாலானோர் தமிழ் மக்கள். எனவே தமிழ் கட்டாயம் முதலிடத்தில் இருக்கவேண்டும். அதுவே என் கோரிக்கை. இது மொழி வெறி இல்லை. பயன்பாட்டு நோக்கிலும், தமிழ் இங்குத் தாய்மொழி என்ற அடிப்படையிலும் கூறுகிறேன்.
------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களும் அங்காடிகளும் தங்களது பெயர்ப்பலகையில் பெயர்களைத் தமிழில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும்; அதற்கு அடுத்த நிலையில்தான் ஆங்கிலமோ பிறமொழிகளோ இடம்பெறவேண்டும் என்று தமிழ்நாட்டில் சட்டம் இருப்பதுபோல ...
அவற்றின் உள்ளேயும் இடம்பெறுகின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப்பெறவேண்டும்; அதற்குப்பின்னர் மற்ற மொழிகள் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். மீறுகின்றவற்றிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
மேலும் தமிழுக்கு உரிய முன்னுரிமை கொடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படலாம்.
இவ்வாறுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்பதை நிறுவவேண்டும். பயிற்றுமொழி, வணிகமொழி, நிர்வாகமொழி என்று பல முனைகளில் தமிழ்மொழி மேலாண்மை பெறவேண்டும். இதற்குத் தமிழ்நாடு அரசே தேவையான சட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு எந்தவகையிலும் ஒன்றிய அரசு தடையாக அமையமுடியாது. ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களில் வேண்டுமென்றால் இந்திமொழியோ ஆங்கிலமொழியோ இடம்பெறவேண்டும் என்று கூறலாம். அவ்வளவுதான்! அதனால் நமக்கோ தமிழுக்கோ சிக்கல் இல்லை! தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழ்மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறமுடியாது. அவ்வாறு கூறினால், அதை எதிர்த்துப் போராடி, தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டலாம்.
இவைபோன்ற செயல்பாடுகள்தான் தமிழின் மேலாண்மையை . . . தமிழ் இனத்தின் அடையாளமான தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கும்.
இதுவே தமிழ்மேம்பாட்டுத்திட்டத்தில் முதலிடம் பெறவேண்டிய செயல்பாடுகளாகும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------