சனி, 19 மார்ச், 2022

மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...

 மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...

--------------------------------------------------------------------------(சமூக மாற்றத்தில் நம்பிக்கை உள்ள அன்பர்கள் நேரம் கிடைக்கும்போது இதைப் படிக்கலாம்!)
திரு செயபாண்டியன் கோட்டாளம்:
// மக்களாட்சிக்கும் பாட்டாளிமக்களாட்சிக்கும் என்ன வேறுபாடு? பாட்டாளிமக்கள் மக்களல்லரோ?//
ந. தெய்வ சுந்தரம்:
மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு உயர்ந்த கட்டம் முதலாளித்துவ சமுதாயம். அச்சமுதாயத்தில் முதலாளி வர்க்கம் ஒருபுறமும் பாட்டாளி - தொழிலாளி வர்க்கம் மறுபுறமும் நிற்கின்றன.
முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் பிற சுரண்டும் வர்க்கங்களும் - நிலப்பிரபுத்துவ சக்திகளும் - ஒரு புறம் திரண்டு நிற்கின்றன. இந்தப் பிற சுரண்டும் வர்க்கங்கள் முதலாளித்துவம் ( உற்பத்தி சக்திகள்- productive forces - முழுமையாகச் சமூகமயப் - படுத்தப்படப் பட socilaised productive forces - socialised production) வளர வளர.... தங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ... அழிந்துகொண்டிருக்கும் வர்க்கங்களே. ஆனால் அவற்றின் தற்காலிக நீடிப்பானது ... பாதுகாப்பானது ... வளர்ந்த சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்தே உள்ளது. மேலும் முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கமும் இந்தப் பிற சுரண்டும் வர்க்கங்களை இல்லாமல் ஆக்குவதுதான்! ஆனால் அதுவரை உழைக்கும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவதற்காகத் தற்காலிக ஒற்றுமையை அவற்றுடன் பேணுகின்றது. தனது நலன்களைப் பாதுகாத்துக்கொளவதோடு, பிற சுரண்டும் வர்க்கங்களின் நலன்களையும் - தனியுடமைகளையும் - பாதுகாக்கும்!
அதுபோல, முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியில் பாட்டாளி வர்க்கமானது தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளுக்கு விற்பதைத்தவிர வேறுவழியொன்றும் இல்லாத.... இழப்பதற்கு வேறு எந்தவொரு உடமையும் இல்லாத... வர்க்கமாக அமைகிறது. இந்த வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலனே ... உழைப்புச்சக்தி சமுகமயப்படுத்தப்பட்டதுபோல, அந்த உழைப்பின் விளைபொருள்களை ... பயன்களை... சமூகமயப்படுத்தப்படுதலில்தான் உள்ளது. எந்தவிதத் தனியுடமையும் இல்லாமல் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதுதான் அதன் நோக்கமாக இருக்கமுடியும்! அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் உற்பத்தி வளர்ச்சியும் அடுத்த உயர்நிலைக்குச் செல்லும். இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிபெறுவதுதான் இந்த வர்க்கத்தின் நோக்கமாகும். எனவேதான் இந்த வர்க்கம் சமுதாயத்தின் முற்போக்கு வர்க்கமாகப் பார்க்கப்படுகிறது!
அதே வேளையில் பிற சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கங்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் அங்கு நீடிக்கும். இவையும் சோசலிச சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். இவற்றின் இறுதி நலன்களும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் வெற்றியில்தான் அடங்கியுள்ளன. ஆனால் இந்த வர்க்கங்கள் சிறு சிறு உடமைகளைக்கொண்ட வர்க்கங்களாகவும் இருக்கும்.
எனவே தனியுடமையை ஏற்றுக்கொள்ளும் வர்க்கங்களாக இருக்கும். தனியுடமைச் சிந்தனை உடையவையாக இருக்கும். எனவே சோசலிச கட்டமைப்பை ஒரு கட்டம்வரை ஏற்றுக்கொள்ளாமல்... ஆனால் அதேவேளையில் முதலாளித்து வர்க்கத்தின் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களின் அரசு அகற்றப்படுவதிலும் ஆர்வம் கொள்ளும். சிறு சிறு தனியுடமைகளையும் ஆதரிக்கும். எனவே முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக இருக்காது. ஊசலாட்டம் இருக்கும்.
எனவே பாட்டாளி வர்க்கம் இந்தப் பிற சுரண்டப்படும் சிறு சிறு வர்க்கங்களுக்குத் தலைமை அளிப்பதாக இருக்கவேண்டியுள்ளது. வர்க்கங்களையே இல்லாமல் ஆக்குவதில்தான் சோசலிச சமுதாயத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது. முதலாளித்துவ அணியில் உள்ள அனைத்துச் சுரண்டும் வர்க்கங்களுக்கும் எதிராக நிற்கிற .... பாட்டாளிவர்க்கம் உட்பட பிற சுரண்டப்படும் வர்க்கங்கள், இனங்களைத்தான் பொதுவாக ''உழைக்கும் மக்கள் '' என்று அழைக்கிறோம். இந்த எல்லா சுரண்டப்படும் வர்க்கங்களின் ஆட்சியைப் பொதுவாகப் பாட்டாளி வரக்க்த்தின் தலைமையிலான 'மக்களாட்சி'' ''ஜனநாயக ஆட்சி''என்றும், அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை முழுமையான பாட்டாளிவர்க்க ஆட்சி என்றும் அழைக்கலாம்.
அனைத்துச் சுரண்டப்படும் வர்க்கங்களின் நலன்களையும் பிரதிபலிக்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மக்களாட்சி இருந்தால்தான் , அடுத்த கட்ட சோசலிச வளர்ச்சியைச் சமுதாயம் எட்டும். அது பாட்டாளிவர்க்கத்தின் முழுமையான ஆட்சியாக அமையும். அதற்கு அடுத்த கட்டம்.... வர்க்கங்களே இல்லாத ஒன்றாக ,, கம்யூனிச சமுதாயமாக மனித சமுதாயம் மாறும். இது நமது சிந்தனையைச் சார்ந்த ஒரு கற்பனை இல்லை. பிற அறிவியல்போன்று... முறையான சமூக ஆய்வில் காரல் மார்க்ஸும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சமூக அறிவியல் ஆகும்.
வர்க்கமற்ற ஒரு சமுதாயத்தை நிறுவுவதில்தான் ஒட்டுமொத்த மக்களின் நலன்கள் அடங்கியுள்ளது. அப்போதுதான் வர்க்கமற்ற - சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் என்ற வேறுபாடு இல்லாத - சமுதாயம் மலரும். ஆனால் அந்த வளர்ச்சியை எட்டுவதற்கு வர்க்கப்போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒரு கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அனைத்து உழைக்கும் மக்களையும் கொண்ட அரசு. அதற்கு அடுத்த கட்டம் , பாட்டாளி வர்க்கத்தை மட்டும்கொண்ட சோசலிச அரசு.
இந்த அரசில் சமுதாயத்தில் ஆட்சியிழந்த முதலாளித்து வர்க்கம் பல முனைகளில் பாட்டாளி வர்க்க ஆட்சியை வீழ்த்தப் போராடும். சோசலிச அரசுகளை உள்ளிருந்தும் வெளியிருந்தும் ஆட்சியிழந்த முதலாளித்து வர்க்கம், ஏகாதிபத்திங்கள் போராடும். ஆட்சியை... அரசை.... கைப்பற்றும்! பாட்டாளிவர்க்கம் தற்காலிகப் பின்னடவுகளைச் சந்திக்கும்! (சோவியத் ரசியாவிலும், சீனாவிலும், ஜெர்மனியிலும் தற்போது நடைபெற்றுள்ளது இதுதான்!) ஆனால் இறுதியில் அது வீழ்த்தப்படும். அதற்கும் அடுத்த கட்டமே, வர்க்கங்களே இல்லாத மக்கள் அரசு. இதுவே சமுதாய வளர்ச்சியின் உயர்ந்த கட்டமான 'மக்களாட்சி'. இது இன்றைக்கு ஒரு கற்பனையாகச் சிலருக்குத் தெரியலாம். ஆனால் இதுவே சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவியல் அடிப்படையிலான ஒரு உண்மை!
சில நூற்றாண்டுகளுக்குமுன்னர்... சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் போகமுடியும் என்றால், யாராவது நம்பியிருப்பார்களா? ஆனால் இன்று? ஒரு சில விநாடியில் உலகம் முழுவதும் இணையம் வழியாகத் தொடர்புகொள்ளமுடியும் என்று அன்று நினைத்திருப்பார்களா? ஒரு சில மணிநேரத்தில் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பறக்கமுடியும் என்று எதிர்பார்த்து இருக்கமுடியுமா?
அதுபோன்றதுதான் நான் கூறும் சமூக அறிவியல் அடிப்படையிலான சமூக வளர்ச்சி! ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் என்னுடைய வாழ்க்கையிலேயே வந்துவிடும் என்று நான் நினைத்தால், அது தவறானது. பல நூற்றாண்டுகள் ஆகலாம். கற்கால மனித சமுதாயம் இன்றைய அறிவியல் சமுதாயமாக மாறி வர எத்தனை நூற்றாண்டுகள் ஆகியுள்ளன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், இந்த உண்மை விளங்கும்! அறிவியலுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ ''நம்பிக்கைகளை'' இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற நாம்.... அறிவியல் அடிப்படையிலான இந்த சமூக வளர்ச்சி இயலை ...புறவயமான சமூக வளர்ச்சி விதிகளை ஏன் ''இயலாத'' ஒன்று என்று நினைக்கவேண்டும்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India