சனி, 19 மார்ச், 2022

இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....

 இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....

------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை அறிவியல்களையும் சமயத் தத்துவங்களையும் முதலாளித்துவ சமூகக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிற நண்பர்கள் சிலர்.... சமூகம்பற்றிய அறிவியலை - குறிப்பாக மார்க்ஸ். எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோரின் சமூக அறிவியலை - ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான்.
ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் ஏற்றுக்கொள்ள- மாட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இடைத்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த சிலர் - குறிப்பாக மூளை உழைப்பைச் சார்ந்த இடைத்தட்டு வர்க்கப் பிரிவினர் , அறிவியலார்கள், ஆய்வாளர்கள் சிலர் - ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, சற்று வேதனையாக இருக்கும். அவர்களின் மறுப்புக்குக் காரணம்... அவர்கள் இல்லை... அவர்களின் மனதில் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும் சிந்தனைமுறை, தத்துவம், சமூகவியல் போன்றவை ஏற்றப்பட்டுள்ளன. அவர்களது வாழ்க்கைமுறைகளிலும் மனதிலும் நீடிக்கிற - மறைமுகமாகத் திணிக்கப்பட்டுள்ள - முதலாளித்துவச் சமுதாயக் கல்வியும் மற்றவையும்தான் காரணம்!
மேலும் சிறு உடமைகள் இவர்களுக்கு இருக்கலாம். நல்ல ஊதியம், மற்ற வசதிகளை முதலாளித்துவச் சமுதாயம் அளித்திருக்கலாம். இவையெல்லாம் சோசலிச சமுதாயத்தில் ''பறிக்கப்பட்டுவிடும்'' என்ற ஒரு பொய்ம்மை அவர்களது பார்வையிலும் சிந்தனையிலும் மறைமுகமாகத் திணிக்கப்- பட்டிருக்கின்றன. சோசலிசம் தனிமனித உரிமைகளுக்கு எதிரானது, சர்வாதிகாரப் போக்கு உஉடையது என்று கூறப்பட்டுள்ளது. இவர்களும் முதலாளித்துவப் பணக்காரர்களும் ஒன்றுதான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இந்த முதலாளித்துவச் சமுதாயத்தில் பெறுகிற நலன்களைவிட, சோசலிச சமுதாயத்தில் கிடைக்கும் நலன்களே அதிகமாக இருக்கும்; ஒட்டுமொத்தி சமூக நலன்களின் அடிப்படையில் தனிமனித உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பது மறைக்கப்படுகிறது.
ஆனால் இவ்வாறு அவர்களை மூளைச் சலவை செய்திருக்கும் முதலாளித்துவ வர்க்கம்... சோசலிசத்தையும் புறவயமான சமூக அறிவியலையும் ''கம்யூனிசம் திணித்து, மூளைச் சலவை செய்யும்'' என்ற ஒரு பொய்ம்மையைப் பரப்பிவைத்திருக்கிறது. மேலும் அது இவர்கள் மூலமே கீழ்த்தட்டு வர்க்க மக்களையும் மூளைச் சலவை செய்யப் பயன்படுத்தும். உண்மையில் இந்த இடைத்தட்டு வர்க்கங்கள் ''தாங்களும் டாடாவாகவும், பிர்லாவாகவும், அம்பானியாகவும்'' என்ற ஒரு கற்பனையில் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் இவர்கள் மேலும் மேலும் கீழ்த்தட்டு வர்க்கங்களாகவே மாறிக்கொண்டிருப்பார்கள். அதற்குக் காரணங்களாக '' இவர்களது முற்பிறவி பாவம்'' ''கடவுள் இன்னும் கருணை காட்டவில்லை'' ''ராசி பலன்கள் சரியில்லை'' ''உழைப்பு போதாது'' போன்றவை முன்வைக்கப்படும்.
ஆனால் இவர்கள் உண்மையிலேயே உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. இவர்களது மனதில் விதைக்கப்பட்டுள்ள பலவகை ''பொய்ம்மைகளை'' உறுதியாக அழிக்கமுடியும். ஆனால் அதற்குக் காலமும் தேவை... பொறுமையும் தேவை!
எனவேதான் ... மார்க்சியம், கம்யூனிசம்பற்றி அவர்கள் அடிப்படையில்லாத பல்வேறு கருத்துக்களை கம்யூனிசத்திற்கு எதிராக முன்வைத்தாலும், அவர்களை எதிரிகளாக உழைக்கும் வர்க்க நலன்களுக்காகப் போராடுபவர்கள் பார்க்கக்கூடாது. இதுவே என் நிலைபாடு!
இயற்கை அறிவியலில் மிகச் சிறந்த ஜே டி பர்னால் (J D Barnal)), ஜோசப் நீடாம் (Joseph Needham) , கோசாம்பி (Kosambi)போன்றோர்கள்... பொருளாதாரத் துறையில் மிகப் பெரிய பேராசிரியர்களான பால் ஸ்வீசி (Pall M Sweezy), பாரன் (Baran), பெத்லேஹிம் (Bettelheim), மாரிஸ் டாப் (Maurice Dobb), லியோ ஹியூபர்மேன் (Leo Huberman), மேக்டாப் (Harry Magdoff) போன்றோர்கள் ,,, தத்துவம், இலக்கியத்துறையின் பேராசிரியர்கள் ஜார்ஸ் தாம்சன் (Geeorge Thomson), மேரிஸ் கார்ன்ஃபர்த் (Maurice Cornforth), தேபி பிரசாத் சட்டோபாத்யாயா (Debi Prasad Chattopadya), வரலாற்றுத்துறையின் பேராசிரியர்களான ரோமிலா தாப்பர் (Romila Thapper), இர்பான் ஹபீப் (Irfan Habib) , மொழியியல் துறை மேதை சோம் சாம்ஸ்கி (Noam Chomsky) ... பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் முதலாளித்துவக் கல்விமுறையில் படித்துவந்தவர்கள் என்றாலும்... மார்க்சியத்தின் புறவயமான சமூக அறிவியலை ஏற்றுக்கொண்டவர்கள்.
மேற்குறிப்பிட்ட பேராசிரியர்கள்போன்று.... கல்வி, ஆய்வு, பண்பாடு, தத்துவம், இயற்கை அறிவியல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள்... உழைக்கும் வர்க்கங்களுக்கான நிலைபாடுகளை எடுத்து... இயற்கை, சமூகம் பற்றிய பொய்ம்மைகளை எதிர்த்துப் போராடி... உண்மையான, புறவயமான சமூக அறிவியலை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். சமூக முன்னேற்றத்திற்கான பணிகளில் ஒரு சிறிதாவது நமது பங்கு இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து, ஏதாவது ஒரு வகையில் சமூகத்திற்காக உழைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்க்கை ஒரு நிறைவான வாழ்க்கையாக அமையும்!
வழக்கறிஞர் சு. கலைச்செல்வன், முத்தையா சுப்பிரமணியம் மற்றும் 10 பேர்
2 கருத்துகள்
3 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India