சனி, 19 மார்ச், 2022

''தமிழாசிரியர்களின் குருட்டுத்தனமான விதிகள்'' ! - உண்மையா?

 ''தமிழாசிரியர்களின் குருட்டுத்தனமான விதிகள்'' ! - உண்மையா?

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி, புணர்ச்சிபற்றிய எனது கட்டுரை ஒன்றில் இரண்டாம் வேற்றுமை வெளிப்படையாக வருகிற ஒரு பெயர்ச்சொல்லையடுத்து (நிலைமொழி) வல்லின எழுத்தை முதலாகக்கொண்ட ஒரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் அல்லது வேறு எந்த வகைச் சொல்(வருமொழி) வந்தாலும், நிலைமொழிக்கும் வருமொழிக்குமிடையில் (வருமொழியின் முதல் வல்லொற்று) மிகும். இதற்கு விதிவிலக்கே கிடையாது, கண்ணை மூடிக்கொண்டு, வல்லொற்றை இடலாம் என்று கூறியிருந்தேன்.
இதனைப்பற்றிய தனது மாறுபட்ட கருத்தைத் தமிழன்பர் திரு. முத்தையா சுப்பிரமணியம் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மிக நுட்பமாக ஒரு கருத்தை முன்வைத்தார். இரண்டாம் வேற்றுமையடுத்து வருகிற சொல் வினையாக- குறிப்பாக இரண்டாம் வேற்றுமை ஏற்கிற பெயர்ச்சொல்லின்மீது செயல்படுகிற வினைச்சொல்லாக - இருந்தால்மட்டுமே ஒற்று மிகும். ''திருக்குறளைத் திருவள்ளவர் எழுதினார்'' என்பதில் ''திருக்குறளை'' அடுத்து ''திருவள்ளுவர்'' என்ற பெயர்ச்சொல் வரும்போது, ஒற்று இடக்கூடாது; மாறாக, '' அவர் திருக்குறளைப் படித்தார்'' என்று வரும்போது, ஒற்று இடவேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து எழுதியிருந்தார். 2-ஆம் வேற்றுமை ஏற்று ஒரு பெயர்ச்சொல் வரும்போது, அந்தத் தொடரில் உறுதியாக ஒரு செயப்படுபொருள் ஏற்கும் வினைச்சொல் (செயப்படுபொருள் குன்றா வினை) வரவேண்டும் என்பது கட்டாயம். இல்லையென்றால் அந்தத் தொடர் முடிவுபெறாது. 'அவர் மணியை வந்தார்'' என்று கூறமுடியாது. ஏனென்றால், 'வா' என்பது செயப்படுபொருள் குன்றிய வினை. 2-ஆம் வேற்றுமைப் பெயர்ச்சொல் தனக்குரிய வினையுடன் அடுத்துவந்து புணரும்போதுதான் , ஒற்று மிகும் என்பது அவர் கருத்து. அதற்கான சில ஆதாரங்களையும் கொடுத்திருந்தார்.
நான் அதற்கு '' நல்லதொரு ஆய்வு. கருத்தில் கொள்கிறேன்'' என்று எழுதியிருந்தேன். பேராசிரியர் ச. அகத்தியலிங்கம், பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் மருதூர் அரங்கராசன் ஆகியோர் எழுதியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் எனது கருத்தை அமைத்திருந்தேன். இவர்கள் சொல்வது சரியா இல்லையா என்பதை மேலும் ஆராயலாம். அதில் தவறு இல்லை. தவறாக இருந்தால் திருத்திக்கொள்ள நான் எப்போதுமே அணியமாக இருக்கிறேன். அதில் எவ்வித வேறுபாடும் எனக்குக் கிடையாது. நானும் தொடர்ந்து ஆய்வுசெய்து விடை காணத் தயார்.
ஆனால் அந்தப் பதிவுத் தொடரில் நண்பர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார்.
//ஓ, இப்போது புரிகிறது. இந்த குருட்டுத்தனமான 'விதி'களை தமிழாசிரியர்கள் பின்பற்றுவது ஏன் என்பது எனக்கு இதுவரை புரியாத புதிராயிருந்தது.//.
தமிழாசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் ''குருட்டுத்தனமான விதிகளை'' முன்வைக்கிறார்கள் என்று இவ்வாறு பொத்தம்பொதுவாகக் கூறுவது சரியில்லை! பேரா. அகத்தியலிங்கம், பேரா. பொற்கோ, பேரா. மருதூர் அரங்கராசன் போன்றோர் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். அவர்கள் ''குருட்டுத்தனமான விதிகளை'' ஒருபோதும் முன்வைத்தது இல்லை! ஆய்வு முடிவுகளில் வேறுபடலாம். அது வேறு!
ஆய்வாளர்களுக்கென்று ஒரு பண்பாடு உண்டு. இது உலக அளவிலான ஒரு பண்பாடு. ஒரு கருத்தை எவ்வாறு விவாதிக்கலாம், வேறுபடும்போது அந்த வேறுபாட்டை எவ்வாறு தெரிவிக்கலாம் என்பதற்கெல்லாம் ஒரு வரன்முறை உண்டு. நண்பர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகச் சிறந்த வேதியியல் ஆய்வாளர். அவரிடமிருந்து இதுபோன்ற தொடர்கள் வருவது வேதனையாக இருக்கிறது.
பொதுவாக, தமிழாசிரியர்கள் என்றால் சிலர் நினைப்பது '' அவர்கள் கிணற்றுத் தவளைகள்'' என்று. இது மிகத் தவறான கருத்து. இலக்கணத்தைமட்டுமல்ல, பலரின் உரைகளையும், இலக்கிய வழக்குக்களையும் உற்றுநோக்கித்தான் அவர்கள் கருத்து கூறுவார்கள். மேலும் இன்று பெரும்பான்மையான தமிழாசிரியர்கள் ( பேரா. ச. அகத்தியலிங்கம், பேரா. பொற்கோ, பேரா. மருதூரார், போன்றோரும் என்னைப் போன்றவர்களும் ) உலகந்தழுவிய மொழியியல் ஆய்வுகளையும் அடிப்படையாகக்கொண்டுதான் தமிழ் இலக்கணம்பற்றிக் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தமிழாசிரியர்கள் முன்வைக்கும் கருத்துக்களில் வேறுபடுங்கள்! அது வேறு! ஆனால் அவர்கள் ஆய்வு நெறிமுறை தெரியாதவர்கள் என்றும் ''குருட்டுத்தனமான விதிகளை'' முன்வைப்பவர்கள் என்றும் கூறாதீர்கள். அவ்வாறு கூறுவது பண்பாடுமிக்க ஆய்வு நெறிமுறை இல்லை!
சந்திபற்றிய எனது கருத்துக்கள்
--------------------------------------------
' தமிழ்ப் புணர்ச்சி விதிகள் மிகவும் வியக்கத்தக்க அளவில் கணிதப் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே கணினிக்கேற்றவகையில் விதிகள் அடிப்படையில் நிரல்களை உருவாக்கமுடிகிறது' .... பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் வாசிக்கும்போது அல்லது பேசும்போது பேச்சொலி அலைகள் தொடர்ச்சியாகத் தடையின்றித் தொடரவுமே சந்தி பயன்படுகிறது. தமிழுக்கே உரிய சொல்லசை அமைப்பைத் தக்கவைக்கவும் பயன்படுகிறது.'

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India