தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற இலக்கண ஆசிரியர்களுக்கும் ... மொழியியல் அறிஞர்களுக்கும் .. பிற அறிவியல் துறைகளின் அறிவியலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை...
--------------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகள் என்பதே எனது நிலைபாடு. ஏன்?
ஒரு இயற்பியல் அறிவியலாளர் என்ன செய்கிறார்? உலகில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டிலுமே உள்ளடங்கியுள்ள இயற்பியல் பண்புகளைக் கண்டறிய முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் - உயிருள்ள, உயிரற்ற பொருள்களிலும் - இருக்கிறது என்று கொள்வோம். அந்த இயற்பியல் பண்பை அல்லது இயற்பியல் இயக்கத்தைப் பொதுமைப்படுத்தி, அதற்குப் பின்னால் இயங்குகிற புறவய விதிகளை எடுத்து முன்வைக்கிறார். கணிதத்தின்மூலமாகவோ அல்லது வேறு துறைகளின் உதவியுடனோ அந்தப் புறவய விதிகளை வெளிப்படுத்துகிறார்.
ஒரு அணுவை உடைத்தால் - பிளந்தால், அதற்குள் எவ்வளவு ஆற்றல் கிடைக்கும் என்பதை ஜன்ஸ்டீன் E - mc square என்ற கணித வாய்பாடுமூலம் விளக்கினார். ஆற்றலும் (Energy) பருண்மைப் பொருளும் (Matter) வடிவங்களில்தான் வேறுபடுகின்றன; ஆனால் இரண்டும் ஒன்றே என்று கூறினார். ஆற்றல்பற்றிய இந்த விதி அனைத்துப் பொருள்களுக்கும் பொருந்தும். அப்போதுதான் அது அறிவியல் அடிப்படையான வாய்பாடாக அமையமுடியும். புவி ஈர்ப்பு விதியானது பூமி என்ற கிரகத்திற்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் பொருந்தும்.
இலக்கண ஆசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் இதுபோன்றே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒருவர் தன் பிறப்புமுதல் இறப்புவரை பயன்படுத்துகிற மொழித்தொடர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம். அம்மொழியில் உருவாக்கப்படுகிற இலக்கியங்களில் கோடிக்கணக்கான தொடர்கள் அமையலாம். ஆனால் அந்தக் கோடிக்கணக்கான மொழித்தொடர்களுக்கும் பின்னே நிலவுகிற விதிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்தான் அமைந்திருக்கும். அந்த விதிகளே கோடிக்கணக்கான மொழித்தொடர்களையும் உருவாக்குகின்றன. இந்த விதிகள் நமது கண்ணுக்கு நேரடியாகத் தெரியாது. உடம்படுமெய் ஏன் வருகிறது, எந்த இடத்தில் எந்த உடம்படுமெய் வருகிறது , ஏன் அவ்வாறு வருகிறது என்பதை விளக்கும் விதிகளை இலக்கண ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர்.
இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளைக் கண்டறிவதே இலக்கண ஆசிரியர்கள், மொழியியல் ஆய்வாளர்களின் பணியாகும். குறிப்பிட்ட மொழிக்கான இலக்கண ஆசிரியர்கள் அம்மொழியில் கிடைக்கும் மொழித்தொடர்களைத் தரவுகளாகக்கொண்டுதான் இந்த விதிகளைக் கண்டறியமுடியும். தனது சொந்தக் கற்பனையில் விதிகளை உருவாக்கமுடியாது. நீடிக்கிற விதிகளைக் கண்டறியவேமுடியும். எந்த ஒரு அறிவியல் விதியும் கற்பனையில் உதிப்பது இல்லை. அவை யதார்த்தத்தில் நீடிக்கின்றவையே. விதிகள் உருவாக்கப்படவில்லை (not invention); அவை கண்டறியப்படுகின்றன (discovery).
இந்தத் தரவுகள் எப்படி அமையவேண்டும்... அமைக்கப்படவேண்டும் என்பதுபற்றிய தெளிவு இலக்கண ஆசிரியர்களுக்கு இருக்கும். இருக்கவேண்டும். அதன்பின்னர் அத்தரவுகளை வகைப்படுத்தி, அந்த வகைகளுக்குப்பின்னர் நீடிக்கிற அமைப்பு விதிகளை... இயக்குவிதிகளைக் கண்டறிகிறார்கள். இதுவே குறிப்பிட்ட மொழிக்கான இலக்கணம். இதில் இலக்கண ஆசிரியர்கள் தங்கள் விருப்புவெறுப்புக்களுக்கு இடம் தரமாட்டார்கள். தரவும் கூடாது. ஒரு இலக்கண ஆசிரியரின் சிறப்பு.... அவர் தனது ஆய்வுக்கு அடிப்படையாகக்கொண்ட தரவுகள்... அத்தரவுகளின் உள்ளார்ந்த அமைப்பை விளக்கும் முறை... அந்த அமைப்புக்களுக்குப்பின்னர் நீடிக்கிற இலக்கண விதிகள் ஆகியவற்றைப் பொறுத்தே உள்ளது. அவரது இலக்கணம் அந்தக் குறிப்பிட்ட மொழியில் .... அந்த மொழி பேசும் மக்கள் பயன்படுத்தும் அனைத்துத் தொடர்களையும் விளக்குவதாக அமையவேண்டும்; அனைத்துத் தொடர்களுக்கும் பொருந்தவேண்டும். விதிவிலக்குகள் என்றால் அதை விதிவிலக்கு என்று கூறவேண்டும்.
மொழியியல் துறை தோன்றியபிறகு ... பல்வேறு மொழிகளை ஆய்வதற்கான சூழல் தோன்றியுள்ளது. அதன் பயன்.... மனித இனத்தின் அனைத்து இயற்கைமொழிகளுக்கும் இடையிலான பொது விதிகளையும் கண்டறிய முடிகிறது. ஒப்பிலக்கணங்கள் (Comparative Grammars) தோன்றமுடிகிறது. அனைத்து மொழிகளையும் மனித மூளையே உருவாக்குகிறது என்பதால், ஆயிரக்கணக்கான மொழிகள் நிலவினாலும்... அவற்றின் மொழித்தொடர்களின் அமைப்புக்களில் பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. இதன் தொடர்ச்சியாக... எந்தவொரு மொழியையும் ஆராய்வதற்குத்த தேவையான மொழி ஆய்வு முறை தோன்றியுள்ளது. இதுவே மொழியியல்.
கண்ணுக்குத் தெரியாத இயற்கைப் பண்புகளையும் ... உயிரினத்தின் மரபணுவையே ஆய்வுசெய்யக்கூடிய இந்த அறிவியல் உலகில்... ஆயிரக்கணக்கான மொழிகளுக்கிடையே ... அவற்றில் நிலவும் கோடியே கோடி மொழித்தொடர்களுக்குப்பின்னர்... நிலவுகிற அமைப்பு, இயக்கம் ஆகியவற்றிற்கான விதிகளைக் கண்டறிகிற மொழியியல் துறையானது... குறிப்பிட்ட மொழிக்கான இலக்கணங்களை உருவாக்கிய இலக்கண ஆசிரியர்களின் பணிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே ஆகும். எனவே இலக்கண ஆசிரியர்களையும் மொழியியல் ஆய்வாளர்களையும் எதிர்த் துருவங்களாக நிறுத்திப் பார்ப்பது அறிவியல் கண்ணோட்டம் இல்லை!
அதுபோன்று .. பிற இயற்கை, சமூக அறிவியல்போன்று... இலக்கண அறிவியலும் மொழியியல் அறிவியலும் புறவயமான அறிவியல்களே. குறிப்பிட்ட மொழிக்கான ஆய்வுக்குமட்டுமே இடம்தந்த முந்தைய சமூகச் சூழல் இன்று மாறி... மனித இனத்தின் எந்தவொரு மொழியையும் ஆய்வுசெய்வதற்குத் தேவையான மொழியியல் கோட்பாடுகளை முன்வைக்கிற ஒரு வளர்ச்சிநிலையை இன்றைய சமுதாயம் பெற்றுள்ளது. அதன் பயனாகவே, குறிப்பிட்ட மொழி ஆய்வானது மனித இனத்தின் அனைத்துமொழிகளையும் ஆய்வதற்கான துறையாக , மொழியியல் துறையாக வளர்ந்துநிற்கிறது. இலக்கண ஆசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் பிற அறிவியல்துறை ஆய்வாளர்கள்போன்று அறிவியல் ஆய்வாளர்களே என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக