சனி, 19 மார்ச், 2022

சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ...

  சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ...

------------------------------------------------------------------------------------------------------------------------
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் - சுரண்டப்படும் ஆளப்படுகிற வர்க்கங்கள் என்ற வர்க்க அடிப்படையில் நீடித்துவந்த மனித சமுதாயம்... தனது வளர்ச்சிப்போக்கில் ... குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ... முதலாளித்துவ சமுதாயமாக மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. மனித சமுதாயத்தின் இந்தப் புறவயமான வளர்ச்சிகளை மிகத் தெளிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைகளைக்கொண்டு ஆய்வு செய்த காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ... இந்த முதலாளித்துவ வளர்ச்சியானது தனக்கு அடுத்த கட்ட வளர்ச்சியாக சோசலிச சமுதாயமாக மாறுவது தவிர்க்க இயலாத ஒன்று என்று எடுத்துரைத்தனர். சோசலிசம் என்பது ''தங்கள் தலைகளில் உதித்த'' ஒரு கற்பனைச் சமுதாயம் இல்லை... மாறாக, புறவய வளர்ச்சியில் தவிர்க்க இயலாத ஒரு சமுதாய வளர்ச்சிக்கட்டம் என்பதை அரசியல் பொருளாதார அடிப்படையில் விளக்கினர். இந்தச் சோசலிசக் கட்டமைப்பு ஒரு கட்டத்தில் கம்யூனிச சமுதாயமாக வளர்ச்சியடையும் என்பதையும் விளக்கினர். ஆனால் இந்த வளர்ச்சி ஒரு நீண்ட கால இயக்கமாகவே அமையும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
சோசலிசக் கட்டமைப்புக்கான வளர்ச்சிக்கால கட்டத்தில் ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பம் ... அதுவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆளும் வர்க்கங்களாக நீடித்த சுரண்டும் வர்க்கங்கள் ஆளப்படும் வர்க்கங்களாக அமைகின்றன; பாட்டாளிவர்க்கத் தலைமையிலான உழைக்கும் வர்க்கங்கள் ஆளும் வர்க்கங்களாக அமைகின்றன; அவற்றின் கைகளிலேயே அரசு இயந்திரம் நீடிக்கும். அந்த அரசு இயந்திரத்தின் உதவிகொண்டு... சோசலிசப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதோடு.... தொடர்ந்து நீடிக்கிற பழைய சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார ஆணிவேர்களை அகற்றும் ; இறுதியில் வர்க்கவேறுபாடற்ற மனித சமுதாயம் தோன்றி நிலவும்.
இந்த மாற்றங்கள் எல்லாம், வளர்ச்சிகளெல்லாம் தனிமனிதர் கற்பனைகள் இல்லை; மாறாக, சமுதாயத்தின் புறவய வளர்ச்சிவிதிகள் என்பதைப் பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் இந்தச் சோசலிச சமுதாயமானது தனது முழுவளர்ச்சியை .. கம்யூனிச சமுதாயத்தை நோக்கிய வளர்ச்சியை ... குறுகிய காலத்தில் பெற்றுவிடமுடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த சுரண்டும் - சுரண்டப்படும் வர்க்க சமுதாயத்தை ஒரு சில ஆண்டுகளில் ... குறுகிய காலகட்டத்தில் ... முழுமையாகத் தகர்த்துவிடமுடியாது. அவை நீடிப்பதற்கான பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் வேரோடு பிடுங்கப்பட்டு எறியப்படும்வரை... அவை மீண்டும் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் கம்யூனிசத் தலைவர்கள் உணர்ந்தே இருந்தனர். எனவேதான் பாட்டாளி வர்க்கங்கள் ஆளும் வர்க்கங்களாக இருந்தாலும்... சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும்... கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளுக்குள்ளும்... பழைய, ஆட்சியை இழந்த வர்க்கங்கள் தங்களது நேரடி நடவடிக்கைகளின்மூலம், கருத்து, பண்பாட்டு ஆதிக்கத்தின்மூலமும் ... தாங்கள் இழந்த ஆட்சியைக் கைப்பற்றக் கடுமையாகப் போராடும். அதாவது வர்க்கப்போராட்டங்கள் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த அளவுக்கு உறுதியாக முன்னேறுகிறார்களோ, அந்த அளவுக்குத்தான் பிற்போக்கு வர்க்கங்களின் சதிகளை முறியடிக்கமுடியும்.
இந்த அடிப்படையில் தோழர் லெனின் , தோழர் ஸ்டாலின் போன்றோர் 15 நாடுகளை உள்ளடக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை நிறுவியபிறகும்.... பாட்டாளிவர்க்கத்தின் அரசை வலிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதுபோன்று சீனாவிலும் தோழர் மாசேதுங் மேற்கொண்டார்.
மற்றொரு பிரச்சினை... சோசலிச நாடுகளில் தொடர்ந்து நீடித்துவந்த சுரண்டும் வர்க்கங்கள் மட்டுமல்லாமல், வெளியே நீடித்த அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்களும் சோசலிச அரசுகளை வீழ்த்த பல வகைகளில் முயன்றன.
குறிப்பாக, ரசியாவில் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப்பின்னர் ஆட்சியிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இருத்திக்கொண்ட குருசேவ்... நடைமுறையில் உள்நாட்டில் சோசலிசத்தைப் பலவீனப்படுத்தவும், வெளியே பிற ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டு சேரவும் தீவிரமாக ஈடுப்பட்டார். அவருக்குப்பின்னர், பிரஸ்நேவ், கோர்பாச்சோ ஆகியோர் அவரது வழியைப் பின்பற்றினர். இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முழுமையாக உதவியது. குறிப்பாக, 1990 -ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் புஸ், அவரைத்தொடர்ந்து ரீகன் பலவகைகளில் மேற்குறிப்பிட்ட திருத்தல்வாதத் தலைவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினர். கிழக்கு ஜெர்மனியில் நீடித்த சோசலிச அரசைக் கவிழ்த்து, ஏகாதிபத்திய மேற்கு ஜெர்மனிய அரசுடன் இணைத்து, ஒன்றுபட்ட ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை 1990-இல் நிறுவியது. அதையொட்டி, கோர்போச்சோவின் முதலாளித்து வளர்ச்சிப்பாதையை முழுமையாக ஆதரித்து, 1991- டிசம்பர் 26 ஆம் ஆண்டு.... கம்யூனிசக் கொடி இறக்கப்பட்டு... 15 நாடுகளைக்கொண்ட சோவியத் குடியரசைத் தனித்தனியே பிரிந்துசெல்வதற்கு அமெரிக்க ரீகன் அரசு உதவியது.
அதுபோன்று சீனாவில் மாசேதுங் மறைவுக்குப்பின்னர், சோசலிச அரசும் ஒரு ஏகாதிபத்திய அரசாக மாறியது. இவ்வாறு உலக அளவில் சோசலிச முகாம் தற்காலிகப் பின்னடைவைக் கண்டது. சோசலிச நாடுகள் - குறிப்பாக ரசியாவும், சீனாவும் ஏகாதிபத்திய அரசுகளாக மாறியபிறகு... ஏகாதிபத்தியத்திற்கே உரிய பிற்போக்குத் தன்மையால் ... பிற நாடுகளைப் பங்குபோட... தங்களுக்குள்ளும் பிற ஏகாதிபத்திய நாடுகளுடனும் போர்களை - நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடுத்து வருகின்றன.
இந்த நோக்கில் .. தற்போதைய ரசியா - உக்ரைன் போரைப் பார்க்கவேண்டும். உக்ரைன் ரசியா ஏகாதிபத்தியத்தோடு நிற்பதா, அல்லது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முகாமோடு நிற்பதா? இதுதான் தற்போதைய பிரச்சினை.
சோசலிச சோவியத் உடைபட்டுச் சிதற ஒரு முக்கியக் காரணியாக இருந்த அமெரிக்கா முகாம் - ரசியா, உக்ரைன் என்று பிளவுபடக் காரணமாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்திய முகாம்... தற்போது உக்ரைனைத் தனது ஆளாக மாற்றிக்கொண்டு, ரசியா ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முயல்கிறது. உக்ரைன் அரசில் தற்போதைய அதிபருக்கு முன்னால் இருந்த அதிபர்கள் ரசிய ஆதரவாளர்களாக இருந்தார்கள். இப்போது இருப்பவர் அமெரிக்க ஆதரவாளராக இருக்கிறார். சோவியத் சோசலிச அரசை 15 நாடுகளாகப் பிரித்து, சோவியத் குடியரசு நாடுகளில் புரட்சியாளர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம்... தற்போது ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போரை ரசித்துக்கொண்டிருக்கிறது.
உக்ரைன் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அங்குள்ள பாட்டாளி வர்க்கம் போராடி... சோசலிச அரசை மீண்டும் நிறுவுவதே சரியான போராட்டம். ஆனால் அதை அங்குள்ள மக்களே மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, உக்ரைன்மீது தன் ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள ரசியா போர் தொடுத்துள்ளது ஏகாதிபத்திய விரிவாக்கமே!
எனவேதான்... நாம் இந்தப் போரில் ரசியாவின் நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டியுள்ளது.
உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு எதிரான அந்த நாட்டு மக்களின் போராட்டங்களை .. புரட்சியை... ஆதரிப்பது முற்போக்காளர்களின் கடமை. ஆனால் உக்ரைன் ஆட்சியாளர்களைத் தங்களது முகாம்களில் இணைத்துக்கொள்ளப் போராடும், ரசியா, அமெரிக்கா முயற்சிகளை ஏற்கமுடியாது!
ஆனால் ஊர் பிளவுபட்டால் ... கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல... சோவியத் சோசலிசக் குடியரசைப் பலவீனப்படுத்தி.... சிதறயடித்து... இன்று ஒரு கட்டத்தில் சோசலிச நாடுகளாக இருந்த ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடப்பதை ஏகாதிபத்திய முகாம்கள் ரசித்துக்- கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையான முற்போக்காளர்கள் ... புரட்சியாளர்கள்... வேதனைப்- படுகிறார்கள்! தற்காலிகப் பின்னடைவுகளுக்கு உட்பட்டுள்ள ரசியா, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கங்கள் மீண்டும் ஆளும் வர்க்கங்களாக மாறி.... உலக சமூக அமைப்பை... அடுத்த கட்ட சோசலிச வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்! உறுதியாக இந்த முயற்சி வெற்றிபெறும். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் ... குறுகிய காலகட்டத்தில் .. நடைபெற்றுவிடும் என்று நினைத்துவிடக்கூடாது. இறுதி வெற்றி சோசலிசத்திற்கு என்றாலும்.... இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்!
சோசலிச நாடுகளில் ஏற்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட தற்காலிகப் பின்னடைவுகளை முன்னிலைப்படுத்தி.... சோசலிசம், கம்யூனிசம் தோல்வி அடைந்துவிட்டது என்று சோசலிச எதிர்ப்பாளர்கள் ... சுரண்டும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய முகாம்கள் ... மக்களைத் திட்டமிட்டு ஏமாற்ற முயல்கிறார்கள். ஆனால் புறவய வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மனித குலம் சோசலிசத்தை.... கம்யூனிசத்தை ... நோக்கி முன்னேறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிடமுடியாது. புவி ஈர்ப்பு விசை என்பது எந்த அளவு அறிவியல் அடிப்படையில் அமைந்த .. யாராலும் மறுக்கமுடியாத... மாற்றமுடியாத இயற்கைவிதியோ... அதுபோன்றதே மனித சமுதாயம் சோசலிசத்தை... கம்யூனிசத்தை நோக்கி உறுதியாகச் செல்லும் என்பதும் ஆகும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India