மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...
---------------------------------------------------------------------------------------------------------------------------
மொழியியல் கோட்பாடுகள் ''ஆங்கிலமொழிக்கான கோட்பாடுகள்'' என்ற ஒரு தவறான கருத்தை அகற்றத் தொடர்ந்து நான் பதிவிட்டுவருகிறேன். எந்தவொரு அறிவியல் கோட்பாடும் குறிப்பிட்ட மொழி சார்ந்தது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அதுபோன்றே மொழியியல் துறையின் கோட்பாடுகளும்!
அடுத்து, ஒரு ஐயம் நண்பர்களிடையே நிலவுகிறது. ''மொழியியல் துறையின் கலைச்சொல்லாக்கங்கள் ஆங்கிலத்தில் நிலவும் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புக்களே! ஏன் அவற்றைத் தமிழ் இலக்கணங்களில் பயன்படுத்துகிற கலைச்சொற்களைக்கொண்டு பயன்படுத்தக்கூடாது?''
நியாயமான ஒரு கருத்துத்தான்! ஆனால் இவ்விடத்தில் ஒரு உண்மையை நாம் காணவேண்டும். எந்தவொரு அறிவியல்துறையிலும் அத்துறைக்கே உரிய சிறப்புக் கருத்துக்களுக்கே கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. கருத்துக்கள் உலகப் பொதுமையானவை. ''தமிழகத்தில் இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் நிலவுகிற கருத்துக்கள் வேறு. பிற நாடுகளில் அவை வேறு'' என்பது தவறுதானே! குறிப்பிட்ட அறிவியலில் நிலவுகிற அல்லது அதற்குத் தேவைப்படுகிற கருத்துக்களுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட மொழியினரும் தங்கள் தங்கள் மொழிகளில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்கின்றனர். இதை மொழிபெயர்ப்பு என்று கூறுவதைவிட கருத்துப்பெயர்ப்பு என்று கூறவேண்டும்..
ஆங்கிலத்தில் "mass" "velocity" "acceleration" "gravity" என்ற நிலவுகிற சொற்களுக்கான மொழிபெயர்ப்பாகத் தமிழில் கலைச்சொல் உருவாக்கப்படவில்லை. மாறாக, அவற்றின் பொருளைத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, கலைச்சொற்களை உருவாக்குகிறோம். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.
கலைச்சொற்களை உருவாக்குவதற்குச் சில தெளிவான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம்.
(1) சில பொருள்கள் அல்லது கருத்துக்களுக்கு, அவற்றையும் அதற்கான வேறுமொழிகளில் பயன்படுத்துகிற சொற்களையும் அப்படியே பெற்றுக்கொள்கிறோம். இதைக் ''கடன் வாங்குதல்'' (loan) என்று கூறுகிறோம். குறிப்பிட்ட பொருளுக்கான அல்லது கருத்துக்கான முழுத் தெளிவு கிடைக்கிறவரை இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. பின்னர் நாமே கருத்துக்களின் அடிப்படையில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்கிறோம்.
(2) குறிப்பிட்ட கருத்துக்களுக்கு அல்லது பொருள்களுக்கு ஏற்கனவே நிலவுகிற சொற்களைக் கலைச்சொல்லாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்."atom" என்பதற்குத் தமிழில் ஏற்கனவே நிலவிவருகிற 'அணு' என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்திகிறோம்.
(3) சில பொருள்களுக்கு அவற்றின் பொருண்மையை நன்கு விளங்கிக்கொண்டு, தமிழில் உள்ள சொற்களைக்கொண்டு புதிய சொற்களை உருவாக்கி, கலைச்சொல்லாகப் பயன்படுத்துகிறோம். "radio" என்பதற்கு 'வான் + ஒலி' என்ற இரண்டு சொற்களை இணைத்து 'வானொலி' என்ற கலைச்சொல்லை உருவாக்கிப் பயன்படுத்துகிறோம்.
(4) சில சொற்களுக்கு ஆங்கிலச்சொற்களை (நம்மிடையே பெரும்பாலும் ஆங்கிலமே நீடிப்பதால்) மொழிபெயர்க்கிறோம். "Head constable" என்பதற்குத் 'தலைமைக் காவலர்'' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
(5) பல சொற்களுக்கு நமது தமிழறிஞர்கள் - குறிப்பாக வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரானர், அருளி, அரசேந்திரன், மதிவானண், இராமகி ஐயா போன்றவர்கள்- குறிப்பிட்ட பொருளின் பண்புக்கூறுகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, தமிழில் அவற்றிற்கான அடிச்சொற்களைக்கொண்டு , நமக்குக் கலைச்சொல்லாக்கத்தில் உதவுகிறார்கள்.
மொழியியல் துறைக் கலைச்சொற்களும் மேற்படி அடிப்படைகளில்தான் தோன்றி நிலவுகின்றன. குறிப்பிட்ட இலக்கணக் கருத்துக்கள் அல்லது இலக்கணச்சொற்கள் தமிழிலும் நிலவும்போது, நமது இலக்கண ஆசிரியர்கள் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்துகிறோம். 'பெயர்' 'வினை' 'விகுதி' 'பெயரெச்சம்' 'வினையெச்சம்' 'பெயரடை' 'வினையடை' போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். இவையெல்லாம் ஆங்கிலத்தில் உள்ள "noun" "verb" "Relative participle" "Verbal Participle" "adjective" "Adverb" ஆகியவற்றின் மொழிபெயர்ப்புக்கள் இல்லை. தமிழ் இலக்கணங்களில் காணப்படுகிற சொற்களே!
மொழியியலின் சில கருத்துக்கள் அல்லது வகைப்பாடுகள் தற்போதைய அறிவியல் முன்னேற்றக் காலகட்டத்தில் மிக நுட்பமாக வரையறுக்கப் -பட்டிருக்கும். அந்த நுட்பங்கள் முந்தைய காலகட்டத்தில் நிலவாமல் இருக்கலாம். அதற்கான சொற்கள் தமிழ் இலக்கண நூல்களில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அக்கருத்துக்களை நாம் புரிந்துகொண்டு, தமிழ்ச் சொல்லமைப்பு விதிகளுக்கு உட்பட்டு, புதிய கலைச்சொற்களை உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டாக, 'பேச்சொலி (Phones)' 'ஒலியன் (Phoneme)' 'மாற்றொலி (Allophone) , வரிவடிவு அல்லது எழுத்து (grapheme) துணைவரிவடிவம் அலது துணையெழுத்து (allograph) , 'உருபன் (Morpheme)' 'மாற்றுருபு (Allomorph)' 'வெற்றுருபு (Empty morph)' போன்ற கலைச்சொற்கள். இவை உலக அளவில் மொழியியல் துறையில் நிலவும் கருத்துக்களுக்கான கலைச்சொற்கள். இவை ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்புக்கள் இல்லை.
மொழியியலில் தற்போது தோன்றி நிலவும் புதுக் கருத்து நுட்பங்களை, அவற்றின் பொருண்மையைப் புரிந்துகொண்டு, தமிழகத்தின் மொழியியலாளர்கள் இக்கலைச் -சொற்களை உருவாக்குகிறார்கள். இவையெல்லாம் ''ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பு'' என்று கருதக்கூடாது. அந்தத் தவறான அடிப்படையில் தமிழின் மொழியியல் சொற்களை ''ஆங்கில அடிப்படையில்'' உருவாக்குகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
கலைச்சொல்லாக்கத்தில் முதலில் கடைபிடிக்கவேண்டிய மொழிசார்ந்த ஒரு உண்மை... தமிழ்ச்சொற்களின் மொழியசை அமைப்பைப் பாதிக்கக்கூடாது என்பதாகும். சொல் முதலெழுத்து, இறுதியெழுத்து, மெய்ம்மயக்கங்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புணர்ச்சி விதிகள் பின்பற்றப்படவேண்டும்.
இந்த அடிப்படையில்தான் தமிழுக்கு மொழியியல் துறையில் கலைச்சொல்லாக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. 'discourse" என்ற கலைச்சொல்லுக்குச் 'சொல்லாடல்' 'உரையாடல்' 'கருத்தாடல்' 'சொற்கட்டு' என்ற பல சொற்கள் முன்வைக்கப்பட்டு, இன்று பெரும்பாலும் 'கருத்தாடல் ' ஏற்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், discourse என்பது மொழிசார் கூறுகளைமட்டுமல்லாமல், மொழிசாராக்கூறுகளையும் இணைத்து, ஒரு கருத்தைப் புலப்படுத்த ஒருவர் மேற்கொள்ளும் செயல் என்பதால் இச்சொல் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
சொல்லாக்கத்தில் கருத்தும் தவறாக அமைந்திவிடக்கூடாது; குறிப்பிட்ட மொழியின் இலக்கணமும் புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது. மிக, மிக அதிகமான கவனம் தேவைப்படுகிறது.
எனவே மொழியியலில் இன்று பயன்படுத்துகின்ற கலைச்சொற்களை ''ஆங்கில மொழிபெயர்ப்பு'' என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. மொழியியல் துறையின் கருத்துக்களுக்கான பொருள் பெயர்ப்பாகவே கருதவேண்டும்.