வெள்ளி, 14 செப்டம்பர், 2012

தமிழ் வளர்ச்சிக்கு


தமிழ் பற்றிப் பல குழப்பங்களை நண்பர்கள் சிலர் ஏற்படுத்திவருகின்றனர். எழுத்துச்சீர்மை, ல-ள-ழ , ந-ன-ண , ர-ற வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கல், இரோமன் எழுத்தில் தமிழை எழுதுதல் என்று பல வகைகளில்  குழப்பங்கள்  ஏற்படுத்தப்படுகின்றன. தமிழர் அனைவருக்கும் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்ப்பதில் பங்கெடுக்க உரிமை உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளையில் மொழியானது ஒரு சமூக  விளைபொருள்.  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல கோடி மக்கள் இணைந்து உருவாக்கி, வளர்த்துவருகிற ஒன்று மொழி. சமூகத்தின் வளர்ச்சியை-தேவையை ஒட்டி மொழியும் வளர்ந்துவருகிறது.  மொழியின் தோற்றம்,  வளர்ச்சி,  அமைப்பு போன்றவை பற்றி அறிவியல்பூர்வமாக அன்றிலிருந்து இன்றுவரை அறிஞர்கள்ஆய்ந்துவருகின்றனர். தற்கால மொழியியல் அந்த ஆய்வின்  வளர்ச்சியேயாகும்.

இயற்கையின் மாற்றத்தின் அடிப்படை விதிகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் அடிப்படையில் இயற்கையை நமது  தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கிறோம்.  அதுபோன்று,மொழியின் மாற்றத்தின், வளர்ச்சியின் அடிப்படை விதிகளைப் புரிந்துகொண்டு, நமது தேவைக்கு ஏற்ப மொழியை வளர்க்கலாம். வளர்க்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்துஇருக்கமுடியாது.
ஆனால் முதலில் மொழியியல் அடிப்படையில் மொழியைப் புரிந்துகொள்வது தேவையானது. மொழி வளர்ச்சித்திட்டம் என்பதே ஒரு தனித் துறையாக இன்று  மொழியியலில்  தோன்றி வளர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் உலகில் பல மொழிகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.  ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் பற்றிப் பேசுகிறவர்கள் மொழியியல் அடிப்படையைப் புரிந்துகொண்டு பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.
 தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கல்விகூட இன்னும் முழுமையாகத் தற்கால மொழிக்கல்வி அறிவியல் அடிப்படையில் அமையவில்லை என்பது எனது கருத்து. தாய்மொழிக்கல்வி, இரண்டாம் மொழிக்கல்வி, அயல்மொழிக்கல்வி, என்று பிரிவுகள் உண்டு. மொழிப்பாடத்திட்டம், கற்பிக்கும் முறை ஆகியவற்றில் பல வளர்ச்சிகள் இன்று ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, தமிழ்க் கல்வி மேற்கொள்ளப்படவில்லை. இந்த அடிப்படை எல்லாம் தேவையில்லை, எங்களுக்குத் தமிழ் தெரியும், ஆகவே தமிழை நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் என்று சில நிறுவனங்களே தமிழ்க்கல்வியை மேற்கொண்டுவருகின்றன.
 இந்த நிலையே தமிழ்மொழி வளர்ச்சித் திட்டத்திலும் நீடிக்கின்றது. தமிழ் ஒலியனியல் ஆய்வு, எழுத்தியல் ஆய்வு, சொல்லியல் ஆய்வு, தொடரியல் ஆய்வு, பொருண்மையியல் ஆய்வு, சமூகமொழியியல் ஆய்வு, உளவியல்மொழியியல் ஆய்வு போன்ற எந்த ஆய்விலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப , பல கருத்துகளை முன்வைக்கின்றனர். பிற துறைகளில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்- இதுபோல வைக்கமுடியுமா? ஆனால் மொழி ஆய்வில் மட்டும் இந்த நிலை நீடிக்கிறது. இது தமிழ்வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழ் உணர்வு வேறு. தமிழ் ஆய்வு, தமிழ் வளர்ச்சி என்பது வேறு.
எனவே ஒலிமாற்றம், எழுத்துச்சீர்மை, சொல்லாக்கம் போன்றவற்றில் கருத்துகளை முன்வைப்பதற்கு முன்னர், தமிழ்மொழி ஆய்வாளர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிவதே சரியானது.
 ஒருவர் தனது முக அழகைக்கூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அது அவருக்கு ஏற்றதா என்பதை முடிவு செய்வதும் அவ்வாறு ஏற்றது என்றால் அதைச் செய்துகொடுப்பதும் மருத்துவரின் பணியாகும். எனவே அன்பர்கள் கருத்துச்சுதந்திரம் அடிப்படையில் எதையும் முன்வைக்கலாம். ஆனால் அதை தமிழ் அறிஞர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் கவனத்திற்குக் கொண்டுவாருங்கள். அவர்கள் மொழியியல் அடிப்படையில் அவற்றைப் பரிசீலிக்கட்டும். அவர்கள் அறிவுரைப்படி , நடவடிக்கை தேவை என்றால் அவர்களைக் கொண்டு செய்யலாம். தமிழ் மொழி அமைப்பு அழகானது. அதேவேளையில் பல நுட்பங்களைக் கொண்டது. தமிழைப் புரிந்துகொள்ள மேலோட்டமான பார்வை மட்டும் போதாது. ஆழமான ஆய்வு தேவை.
 அவ்வாறு செய்யமால், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு வெறுப்புப்படி, தமிழின் கண்களை, காதுகளை, கைகால்களை மாற்ற, வெட்ட, சிதைக்க  முயற்சிப்பது சரியல்ல. முறையல்ல. தமிழ் வளர்ச்சிக்கு இன்று தடையாக இருப்பதே அறிவியல் அடிப்படையிலான முயற்சிகள் இல்லாமல் இருப்பதே.
 ஒரு தமிழன், ஒரு தமிழ் ஆசிரியர், ஒரு மொழியியல் ஆய்வாளர் என்ற அடிப்படையில் மேற்கண்ட எனது கருத்தை முன்வைக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, யாருடைய முயற்சியையும் கொச்சைப்படுத்துவதோ எனது நோக்கம் இல்லை. 


1 கருத்துகள்:

Unknown சொன்னது…

a true tamizhan da..................................................

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India