ஞாயிறு, 3 மே, 2020

கொரோனா ..... குணமாகக்கூடிய ஒரு நோயே!


கொரோனா ..... குணமாகக்கூடிய ஒரு நோயே!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கொரோனாத் தொற்றுக்கு எதிரான மருத்துவ அறிவியலின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க, அதைப்பற்றிய சில பயங்கள் எல்லாம் தேவையற்றவை என்பது தெளிவாகிறது. ஊரடங்கு, தனிமனித இடைவெளி, முகமறைப்பு, கைத்தூய்மி ஆகியவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகள்தான் என்பதும் தெளிவாகிறது.
கொரோனாத் தொற்றால் ஏற்படும் கோவிட்-19 என்ற நோய் குணமாகக்கூடிய நோய்களில் ஒன்றுதான். நோய் ஏற்பட்டாலே , அது தீராத நோய் என்று நினைக்கத் தேவையில்லை. பிற வைரசுகளால் ஏற்படுகிற நோய்கள் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நாள்களில் மறைந்துவிடுமோ, அதுபோலத் தான் இதுவும்! ஆனால், உடம்பின் தடுப்பாற்றல் தகுந்தமுறையில் எதிர்த்துப்போராடவேண்டும். அந்த நேரத்தில் உடம்பின் பிற பிரச்சினைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடாது. அப்பிரச்சினைகளுக்கு மருத்துவர்களின் உதவிகளை நிச்சயமாகப் பெறவேண்டும்.
அடுத்து, உடம்பின் தடுப்பாற்றலும் சற்று அதிகமாகச் செயல்பட்டால் ... sepsis என்ற ஒரு நிலை உடலில் ஏற்படலாம். எனவே அதற்குத் தகுந்த மருத்துவ உதவிகளை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது தேவையான ஒன்றாகும். மற்றபடி இந்த நோய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் .... ஒருவர் உடம்பில் கொரோனா வைரசின் ஆயுள் குறிப்பிட்ட நாள்களிலும் முடிவடைவதாலும் உடம்பின் தடுப்பாற்றல் திறனாலும் ... மறைந்துவிடும்.
எனவே, தேவையில்லாமல் இந்தத் தொற்றுக்கு உட்படக்கூடாது என்ற அடிப்படையில் கவனமாக இருப்பது நல்லது. ஆனால் எந்தத் தொற்றும் குறிப்பிட்ட சமூகத்தில் ' மந்தைத் தடுப்பாற்றல்' ' என்ற நிலை உருவாகும்வரையோ, அல்லது அந்த வைரசின் பிற மாற்றங்களல் அது வலு இழந்து போகும்வரையோ, நீடிக்கலாம். அல்லது இதற்கான தடுப்பாற்றல் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அனைவருக்கும் அதை அளிக்கும்போது தீரலாம்.
தற்போது இந்த வைரசின் செயல்பாடு, இது நீடிக்கும் கால அளவு , தொற்று ஏற்பட்டவர் அதிலிருந்து விடுபடும்போது தனது உடலில்பெற்ற தடுப்பாற்றல் நீடிக்கும் கால அளவு , தடுப்பூசியின் தடுப்பாற்றல் திறன் கால அளவு - இவைபற்றியெல்லாம் தெளிவான ஆய்வுமுடிவுகள் தேவைப்படுகின்றன.
எனவே தற்போதைய நிலையின் கடுமை சற்றுக் குறைந்தவுடன், நாம் சமூகத்தில் வழக்கம்போலச் செயல்படுவதில் பயம் தேவையில்லை. எத்தனேயோ நோய்கள் இன்று நீடித்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடுகின்ற உடம்பின் தடுப்பாற்றலும் மருத்துவயியலின் வளர்ச்சியும் நமக்குக் கைகொடுக்கும். கொரோனாவும் தடுக்கப்படக்கூடிய அல்லது குணமாகுகின்ற ஒரு நோய் என்பதே உண்மை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India