ஞாயிறு, 17 மே, 2020

நட்பும் பகையும் ( பகுதி 2)


நட்பும் பகையும் ( பகுதி 2) ..... ஏதோ எழுதத் தோன்றியது .. எழுதுகிறேன்! தயவுசெய்து ஓய்வுநேரங்களில்மட்டும் நண்பர்கள் படிக்கவும்!
-----------------------------------------------------------------------------------------------------
கொரோனாவும் நமது போராட்டமும்!
-----------------------------------------------------------------------------------------------------
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை.... இன்று கொரோனாபற்றித்தான் பேச்சு! நமது சமூக வாழ்க்கையையே கொரோனா புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது! இந்தக் கொரோனாப் பிரச்சினையை நாம் எவ்வாறு பார்க்கிறோம்? எவ்வாறு இந்தக் கொரோனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கப்போகிறோம்? இதுதான் இன்றைக்கு உலகின் எல்லா மூலைகளிலும் நடைபெற்றுவருகிற ஆராய்ச்சிகள்!
நேற்று நான் நட்பும் பகைமையும் என்று எழுதிய ஒரு பதிவின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். கொரோனாப் பிரச்சினையின் அடிப்படைத் தன்மை பகைமைத் தன்மையேயாகும்! கொரோனா நிச்சயமாக நமது நண்பன் இல்லை! எதிரிதான்! கொரோனா வைரசுக்கும் நமக்கும் இடையில் உள்ள முரண்பாடு பகைமை முரண்பாடுதான்! எனவே அதோடு '' உடன்பாடு'' செய்துகொள்ள நாம் விரும்பவில்லை! மாறாக, அதை அடியோடு ஒழித்துக்கட்ட முயல்கிறோம்! இல்லையென்றால், அது நம்மை விழுங்கிவிடும்... சாகடித்துவிடும்!
கொரானவுக்கும் நமக்கும் உள்ள போராட்டத்தின் இடையில் உள்ள போராட்டத்தின் முதல் நிலை... அது நம் உடலுக்குள் புகுவதைத் தடுப்பதற்கான போராட்டம்! கை கழுவுதல், முகமறைப்புப் போட்டுக்கொள்ளுதல், சோப்புகொண்டு கைகளைக் கழுவிக்கொள்ளுதல், கையுறை போட்டுக் கொள்ளுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு பிறப்பித்தல், தொழில்களை நிறுத்துதல் ... இப்படி பலவகைகளில் நாம் கொரோனா நம் உடம்புக்குள் புகுவதைத் தடுக்க முயல்கிறோம். இந்த நிலையில் பிரச்சினை என்பது .... கொரோனாத் தொற்றுப் பிரச்சினை! இதில் யார் வெற்றி பெறுவது?
நாம் இவ்வாறு கொரானத் தொற்றைத் தடுக்க முயலும்போது... போராடும்போது, அது சும்மா இருக்குமா? அதுவும் தன் வலிமையை எல்லாம் காட்டத்தானே செய்யும்! நமது வாயில், மூக்கில், கண்களில் புகுந்துவிடக் கடுமையான போராட்டத்தை மேற்கொள்கிறது! நமது உயிர்க்கூறு அல்லது செல்களின் உள்ளே ஊடுருவ முயல்கிறது. ''கோட்டைக்குள் புக முயல்கிறது''!
நமது புற முயற்சிகள் ஒருபுறம் நமக்கு உதவினாலும், நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம் அல்லது மண்டலத்தின் செயல்பாடு, இந்தக் கொரோனாவின் ஊடுருவலைத் தெரிந்துகொண்டால்தான் அடிப்படையில் இந்தத் தொற்றலைத் தடுக்கமுடியும்! கொரோனா வைரசு புகுந்து, உடலில் தன்னைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்பே கொடுக்காமல், இடமே கொடுக்காமல், ஒழித்துக்கட்டவேண்டும்.
இவ்வாறு நமது புற முயற்சிகளும் உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கமும் இணைந்து தொடுக்கிற போராட்டமே ... கொரோனா வைரசின் ஆதிக்கத்தை.. ஊடுருவலைத் தடுக்கிறது! இதில் நாம் வெற்றிபெற்றால், கொரோனாத் தொற்றுப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அப்படி இல்லாமல், கொரோனா வைரசு வெற்றிபெற்றுவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் தொடங்கிவிடும்!
இங்குத்தான் தடுப்பூசியின் பங்கும் இடம் பெறுகிறது! பொதுவாக, எந்த ஒரு நோய்க்கிருமியும் நமது உடம்புக்குள் நுழைந்துவிட்டால், அதைத் தெரிந்துகொண்டு, அதை ஒழித்துக்கட்ட ... தடுப்பாற்றல் இயக்கம் செயல்படும். குறிப்பிட்ட எதிரி நோய்க்கிருமியைத் தாக்கி ஒழித்துக்கட்ட, அதற்கேற்ற ஒருவகை புரதத்தை ... ஏவுகணையை .. உருவாக்கித் தனது தாக்குதலைத் தொடுத்துவிடும். ஆனால் சிலர் உடம்பில் இந்தச் செயல்பாடு தொடங்குவதில் தாமதம் எற்படலாம். அந்தத் தாமதத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கொரோனா செல்களுக்குள் புகுந்து, தனது நாசவேலையைத் தொடங்கிவிடலாம்.
தடுப்பூசி ஆராய்ச்சி வெற்றி பெற்றுவிட்டால், தடுப்பூசி உடம்பில் ஏறிவிட்டால்... நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கத்திற்குக் கொரோனா வைரசின் ஊடுருவலை உடனடியாகத் தெரிந்துகொண்டு... போராடி... கொரோனாவின் அட்டகாசத்தை .. தொற்றை.. முறியடிக்கமுடியும். அதாவது, இயற்கையாகவே எதிரி நோய்க் கிருமியை எதிர்த்து முறியடிக்கிற உடம்புக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, தயார்படுத்தும் ஒற்றன் வேலையைத் தடுப்பூசி செய்கிறது. ஆனால் களத்தில் நின்று போராடுவது நம் உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம்தான் ! அதாவது களப்போராளி நமது உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கம்தான்! தடுப்பூசி இல்லை என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
சரி.. இந்தப் போராட்டத்தில் கொரோனா வைரசு வெற்றிபெற்றுவிட்டால் .... நமது உடம்புக் கோட்டைக்குள் புகுந்துவிட்டால்... அதற்கும் நமக்கும் இடையிலான போராட்டத்தின் இரண்டாவது நிலை தொடங்கிவிடும்! கொரோனா தன்னைப் பன்மடங்குப் பெருக்கிக்கொள்ளும். நமது செல்களின் பெருக்கம் தடைபடும். இப்போது கொரோனா பிரச்சினையானது ''தொற்றுப் பிரச்சினை' என்பதிலிருந்து .. ''கோவிட்-19 நோய்ப் பிரச்சினை '' என்பதாக மாறிவிடுகிறது!
ஆனால் இப்போதும் நமது உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம் விடாமல் , தனது ''ஏவுகணைகளை'' பெருமளவில் உற்பத்திசெய்து, கொரோனாவின் முயற்சிகளை முறியடிக்கும். பெருகிய கொரோனா வைரசுகளை ஒழித்துக்கட்டப் போராடும்.
புகுந்த கொரோனா சும்மா இருக்குமா? போராட்டத்தின் அடுத்த ... மூன்றாவது நிலை .. தொடங்கிவிடும். கொரோனா வைரசு நமது நுரையீரலைப் பாதிக்கும். இதயம், சிறுநீரகம், மூளை போன்ற பிற உடம்பு உறுப்புகளையும் பாதிக்கலாம். அப்போதும் நமது தடுப்பாற்றல் இயக்கம் விடாமல் தன்னால் இயன்ற அளவு போராடி, கொரோனாத் தாக்குதலை முறியடிக்க முயலும்! இந்தப் போராட்டத்தின் போது, மருத்துவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை நமது உடல் உறுப்புகளுக்கு அளித்து, அவற்றின் திறன்களை - செயல்பாடுகளை - தக்கவைக்க உதவுகிறார்கள்.
இந்த மூன்று நிலையிலான போராட்ட நிலைகளிலும் நமது உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கம் பெரும்பாலும் வெற்றி அடைந்துவிடுகிறது. ஆனால் சிலருக்குக் கொரோனா வைரசு வெற்றி பெற்றுவிடலாம். அதானல் நமக்கு இழப்பு ஏற்படுகிறது!
ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம்தான். பிரச்சினை என்றாலே, அதைத் தீர்ப்பது போராட்டம்தான். பிரச்சினையில் ஒன்றுக்கொன்று எதிர்மறையான இரண்டு சக்திகளும் தங்கள் தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க அல்லது தக்கவைக்கப் போராடுகின்றன!
''
பகைமைத் தன்மை உடைய பிரச்சினைக்கு மட்டும்தான் போராட்டம் '' என்பது உண்மை இல்லை! பகைமையற்ற பிரச்சினையிலும் தீர்வு அளிப்பது போராட்டம்தான் ; இரண்டு எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டம்தான். வழிமுறைகள் வேறுபடுகின்றன , அவ்வளவுதான்! பகைமை அற்ற ... நட்புரீதியான ... வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு போராட்டம் நடைபெற்றால்தான், எது ஒன்றும் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லமுடியும்.
அறிவு வளர்ச்சியாக இருக்கட்டும்.. பண்பு வளர்ச்சியாக இருக்கட்டும்... நட்பு வளர்ச்சியாக இருக்கட்டும் ... அத்தனையிலும் அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினைகளைத் தீர்க்கப் போராட்டங்கள் தேவைப்படும்! அப்போதுதான் அடுத்த கட்ட வளர்ச்சியும் ஏற்படும்!
நான் நேற்று கூறியிருந்ததுபோல... கவனத்தில் கொள்ளவேண்டியவை .. பிரச்சினையின் தன்மைகளும் அவற்றிற்கேற்ற வழிமுறைகளைப் தேர்ந்தெடுப்பதும்தான் ! நட்பா, பகைமையா என்பதில்தான் பிரச்சினை வேறுபடுகிறது! பிரச்சினை பிரச்சினைதான். அதுபோல, போராட்ட வழிமுறைகள்தான் - பகைமையுள்ள போராட்டமா, நட்புரீதியான போராட்டமா என்பதுதான் வேறுபடுகின்றன .. ஆனால் போராட்டம் போராட்டம்தான்! போராட்டங்களே நமது வளர்ச்சிக்கு.. வெற்றிக்கு ... அடிப்படை !
ஆகவே , உலகில் எது ஒன்றிலும் இரண்டு எதிர்மறைகள் இருப்பதும், எதிர்மறைகள் இல்லாத எதுவும் உலகில் இல்லை என்பதும் உண்மை. அதுபோன்று, இரண்டு எதிர்மறைகளும் எப்போதும் ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்தப் போராடும் என்பதும் உண்மை! போராட்டத்தின் முதல் கட்டத்தில் , இரண்டில் ஏதாவது ஒரு எதிர்மறை ஆதிக்கம் செலுத்தும். போராட்டத்தின் இடையே ஒரு கட்டத்தில் இரண்டும் ஒரே வலிமையுடையதாக மாறும். ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய எதிர்மறையின் வலிமை குறைந்து, ஆதிக்கம் செலுத்தப்பட்ட எதிர்மறை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். இதனால் பிரச்சினையின் தன்மை.. பண்பு மாறும். ( கொரோனா ஆதிக்கம் செலுத்தினால், உடல் நலம் உள்ளவர் நோயாளியாக மாறலாம். போராட்டத்தின் ஊடே உடம்பின் தடுப்பாற்றல் இயக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், நோயாளி உடல்நலம் உள்ளவராக மாறுவார்.) ஆனால் பிரச்சினை தொடரும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான போராட்டம் தொடரும்!
( இந்த இரண்டு பதிவுகளிலும் கூறப்பட்டவை என் மூளையில் உதித்தவையோ அல்லது நான் கண்டிபிடித்த ''ஞானோதயமோ '' இல்லை ! எனது தத்துவ ஆசான்கள் கூறியவையே ஆகும்!)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India