திங்கள், 18 மே, 2020

பேராசிரியர் கி. கருணாகரன்

பேராசிரியர் கி. கருணாகரன் … மூத்த மொழியியல் பேராசிரியர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் முதுகலைப் படிப்பு தொடங்கியவுடன் (1964 ஆண்டு), அதில் பட்டம் பெற்றவர். பின்னர் 1966 –இல் அங்கேயே விரிவுரையாளராகத் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கி 20 ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். 1985 –இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையின் தலைவராகப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். தற்போது மலேயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பணியாற்றிவருகிறார். இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மேற்கொண்டவர். கனடா டோராண்டோ பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். ஆசிரியப் பணியை 1966 –இல் தொடங்கிய பேராசிரியர் இன்றுவரை ( அகவை 74) அப்பணியைத் தொடர்ந்துவருகிறார் என்பது இவரது தனிச் சிறப்பு. இவரது துணைவியாரும் ஒரு மொழியியல் ஆய்வாளரே.
சமுதாய மொழியியல், மொழிவளர்ச்சித்திட்டம் , இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிற்றுவித்தல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆசிரியர் – மாணவர் என்ற வேறுபாடின்றி மாணவர்களுக்குத் தானே முன்வந்து உதவிசெய்யும் இயல்புடையவர். முப்பதுக்கும் மேற்பட்ட மொழியியல் நூல்களை எழுதியுள்ளார். என்னை எப்போதும் மொழியியல் ஆய்வில் ஊக்கப்படுத்தி வருபவர். 2013 ஆம் ஆண்டு மலேயாப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியல் பயிலரங்கம் ஒன்றை இளம் கணினிமொழியியல் ஆய்வாளர்கள் முனைவர் அருள்மொழி, கி. உமாதேவி ஆகியோருடன் இணைந்து நான் நடத்துவதற்கும், 2013 கோலாலாம்பூரில் நடைபெற்ற 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கணினித்தமிழ்பற்றி ஒரு மைய ஆய்வுரை நிகழ்த்துவதற்கும் உதவியவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India