திங்கள், 18 மே, 2020

பேராசிரியர் செ. சண்முகம்

பேராசிரியர் செ. சண்முகம் … தமிழகத்தின் குறிப்பிடத்தக்க மொழியியல் ஆய்வாளரில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் 1967 -69 ஆம் ஆண்டுகளில் முதுகலைப்படிப்பை மேற்கொண்டார். பின்னர் பூனாவில் டெக்கான் கல்லூரி முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனத்தில் பேரா. A.M. Ghatage அவர்களின் வழிகாட்டுதலில் Structural Semantics of Standard Tamil என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு ,1975-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். டெக்கான் கல்லூரிதான் இந்தியாவில் மொழியியலுக்கு வேராக அமைந்தது என்பது தெரிந்ததே. அங்கு நடைபெற்ற கோடைகால, குளிர்கால மொழியியல் வகுப்புகள்தான் இந்தியாவில் ஏராளமான மொழியியல் பேராசிரியர்களை உருவாக்கியது. அங்கு 2014 வரை 182 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். முனைவர் செ. சண்முகம் பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1987 வரை அங்கே பணியாற்றிய அவர், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை நிறுவப்பட்டவுடன், அங்கு பேராசிரியர் கி. கருணாகரன் அவர்களுடன் இணைந்து, தனது பணியைத் தொடர்ந்து, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இக்கால மொழியியல் கோட்பாடுகளில் அனைவரும் பாராட்டத்தக்க அறிவுபடைத்தவர். மொழியியலின் எந்தப் பிரிவுகளையும்பற்றியும் தெளிவாகப் பேசக்கூடியவர். சாம்ஸ்கியின் மாற்றிலக்கணம், பொருண்மையியல், கருத்தாடல் ஆய்வு, தமிழ் இலக்கணம் போன்றவை அவருடைய சிறப்புத்துறைகள். தமிழகத்தில் முதன்முதலாகக் கணினிமொழியியல் அடிப்படையில் தமிழ்ப்பெயர்த்தொடர் உருவாக்கத்திற்கு நிரல் உருவாக்க வழிகாட்டியவர். கணினிமொழியியலில் சிறப்பான பயிற்சியைக் கனடாவுக்குச் சென்று பெற்றார். ஜப்பான், தாய்லாந்து, மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மொழியியல் வகுப்பு எடுத்தவர். இவருடைய திறமையைத் தமிழகம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது எனது ஆதங்கம். மிக அமைதியானவர். பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களின் அக்கா மகன். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India