பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ஆய்வு வெற்றியின் பின்புலம்....
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆய்வுகளைப் படித்தபிறகுதான் இலக்கிய ஆய்வை எவ்வாறு சமூக, வரலாற்று, பொருளாதாரப் பின்னணியுடன் அணுகவேண்டும் என்பதை நான், பேரா. கேசவன் உட்பட பலரும் தெரிந்துகொண்டோம். அவரைத் தொடர்ந்து, பேரா. க. சிவத்தம்பி அவர்கள். இருவருக்கும் தமிழாய்வுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது இருவருக்கும் முனைவர் பட்ட வழிகாட்டி பர்மிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் ( George Thomson). கிரேக்க இலக்கியங்களைச் சமூகப் பார்வையில் ஆய்ந்தவர். அனைவரும் போற்றும் ஒரு மிகப் பெரிய மார்க்சியச் சிந்தனையாளர். கிரேக்கச் சமுதாயம்பற்றிய அவரது ஆய்வு (Studies in Ancient Greek Society - 1949-1955) உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற ஒன்றாகும். இதன் தடத்திலே மற்றொரு பேரறிஞர் ஜோசப் நீட்ஹாம் (Joseph Needham) ( சீனத்தின் நாகரிகமும் அறிவியலும் - "Science and Civilization in China ) என்ற மிகப்பெரிய ஆய்வுத் தொகுதிகளை வெளியிட்டார். இதுவும் ஆய்வாளர்கள் படிக்கவேண்டிய ஒரு மிகச் சிறந்த நூல். இவைபோன்று ஜே.டி. பர்னால் ( J D Bernal) எழுதியுள்ள ஒரு மிகப் பெரிய ஆய்வுநூலையும் ( "Science in History) ஆய்வாளர்கள் கட்டாயமாகப் படிக்கவேண்டும். இவர்களின் ஆய்வுத் தடத்தில் இந்தியாவில் பல தத்துவ ஆய்வுகளை வெளியிட்டுள்ளார் மறைந்த பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யா. அவற்றில் மிக முக்கியமாக ஆய்வாளர்கள் படிக்கவேண்டியது ''உலகாயதம்'' ( "Lokayatha : A study in Ancient Indian Materialism"). இந்த நூலைத் தமிழகத்தின் பேராசிரியர் எஸ். தோத்தாரி அவரகள் தமிழில் மொழிபெயர்த்து, என்சிபி ஹைச் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு நூல்கள் அனைத்தும் பேராசிரியர் க. கைலாசபதி, க. சிவத்தம்பி, நா. வானமாமாலை ஆகியோரின் ஆய்வின் வெற்றிக்குப் படிக்கற்களாக அமைந்தன. எனவே தமிழாய்வாளர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களையும் வாங்கிப் படித்தால், அவர்களது ஆய்வுகள் மிகச் சிறப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லை! நான் மேற்குறிப்பிட்டுள்ள நூல்கள் அனைத்தும் அனைத்துத் துறை ஆய்வாளர்களும் படிக்கவேண்டிய நூல்கள். மிகச் சரியான ஆய்வுமுறைகளை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கும். இவை அனைத்தும் ஆய்வாளர்களுக்கான ஆய்வு வழிகாட்டல் ( Research Methodology) பாடத்தில் இடம்பெறவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக