நடமாடும் அகராதி என்று இன்று தமிழாய்வு உலகில் கூறவேண்டுமென்றால்.... அவர் ஒருவரே ஆவார்.. அவர்தான் பெரும்பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள்! இன்று தமிழ் உலகில் அகராதியியல் கோட்பாடுகளை முழுமையாகச் செயல்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் - ஆங்கில அகராதி என்றால் ... அது பேராசிரியர் தலைமையில் .... வழிகாட்டுதலில் ... உருவாக்கப்பட்ட ''க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'' ஒன்றுதான் என்று நான் கூறுவேன் ( ஆங்கிலம் - தமிழ் அகாரதி என்றால். அது பெரும்பேராசிரியர் அ. சிதம்பரநாதஞ் செட்டியார் அவர்களின் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம், சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு). அது வெறும் சொல்லுக்குப் பொருள் தருகிற ஒரு அகராதி இல்லை.... மாறாக, சொல் இலக்கணத்திற்குத் தேவையானவற்றையெல்லாம் தரக்கூடிய ஒன்று. இன்றும் ஒரு நாளைக்கு நூறுதடவைகளுக்குமேல் நான் அதைப் புரட்டிவருகிறேன். வியந்து நிற்கிறேன்! சொல்லின் நுட்பங்கள் வியக்கத்தக்க அளவில் வெளிப்பட்டு நிற்கின்றன. எங்களது கணினித்தமிழ் ஆய்வுக்கு இன்றளவும் உதவியாக இருக்கின்ற ஒரு படைப்பு இது! ஒன்றும் செய்யாமலே ஆரவாரம் செய்கிற மனிதர்கள் மத்தியில்.. கொஞ்சம்கூட தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல், கொஞ்சம்கூட அதிர்ந்து பேசாத... அல்லது பேசத்தெரியாத... ஒரு முழுமையான ஆய்வுப் பேராசிரியர்பற்றி 5 ஆண்டுகளுக்குமுன்பு நான் பதிவிட்ட ஒன்றை இன்று மீள்பதிவு இடுவதில் உண்மையில் பெருமகிழ்வடைகிறேன்.
பேரா. பா.ரா. சுப்பிரமணியன் … தமிழகத்தில் “ கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி “ என்றாலே பேராசிரியரின் நினைவு வரும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றபின்னர்,, கேரளாவில் பெரும்பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வில் பேராசிரியர் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அமைப்பியல் சார்ந்த நாட்டுப்புறவியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்தார். “An Introduction to the Study of Indian Folklore” என்ற அவரது ஆய்வு குறிப்பிடத்தகுந்தது. பின்னர் ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்து இந்திய ஆய்வுத்துறையில் 12 ஆண்டுகள் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். அதன்பின், பேரா. வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் அழைப்பின்பேரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரகராதித்திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அகராதியியலில் தனது பணியைத் திருப்பினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைக்குத் திரும்பி, மிகப் பெரிய திட்டமான கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதிப் பணிக்குப் பொறுப்பேற்று (1992) வெளிக்கொணர்ந்தார். அதைத் தொடர்ந்து மொழி அறக்கட்டளையின் சார்பாக வெளியிடப்பட்ட மரபுத்தொடர் அகராதிக்கும் (1997) , தமிழ் நடைக்கையேட்டிற்கும் (2004) பதிப்பாசிரியராக இருந்தார். 2005 –இல் சொல் வழக்குக் கையேடு என்ற நூலுக்கும் பதிப்பாசிரியராக இருந்தார். 2008 – இல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்குப் பெரிதும் உதவும் “ A Contemporary Tamil Prose Reader “ என்ற ஒரு மிகச் சிறப்பான நூலை வெளியிட்டுள்ளார். இன்று தமிழகத்தில் தலைசிறந்த அகராதியியல் பேராசிரியராகத் திகழ்கிறார். மிக அமைதியான , ஆனால் மிக ஆழமான சிந்தனையுடைய பேராசிரியர் இவர். இலக்கியம், இலக்கணம், மொழியியல் மூன்றிலும் திறன் உடையவர். திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேரா.P.R.S.பணியாற்றியுள்ளார் ( நன்றி - திரு. கட்டளை கைலாசம்).
0 கருத்துகள்:
கருத்துரையிடுக