skip to main |
skip to sidebar
10:29 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் நா. வானமாமலை … தமிழ் ஆய்வுலக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கின்ற ஒரு ஆய்வாளர். தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் என்ற துறைக்கு வித்திட்டவர். 1917 இல் பிறப்பு … 1980- இல் மறைவு. வேதியியலில் இளங்கலையும் எல் டி என்ற கல்வியியல் பட்டமும் பெற்றார். பிற்காலத்தில் எம் ஏ பட்டமும் பெற்றார். 1942 முதல் 47 வரை ஆசிரியராகப் பணியாற்றியவர் , பின்னர் அப்பதவியை விட்டு விலகி, தனியார் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி தனது வாழ்வின் இறுதி வரை அதை நடத்திவந்தார். அறிவியல் கட்டுரைகள் , சிறுவர் கதைகள் ஆகியவற்றைத் தொடக்கக்காலகட்டத்தில் எழுதி வந்தவர் பின்னர், முழுமையாகத் தமிழக வரலாறு, பண்பாடு, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய துறைகளில் பெருங்கவனம் செலுத்தத் தொடங்கினார். மார்க்சிய நோக்கில் இந்தியத் தத்துவங்களை ஆராய்ந்த தேபி பிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய வரலாற்றை ஆராய்ந்த கோசாம்பி ஆகியோரின் தாக்கத்தின் பயனாக, தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் தத்துவங்களையும் மார்க்சிய நோக்கில் இவரும் ஆராய்ந்து பல கட்டுரைகளையும் நூல்களையும் வழங்கியுள்ளார். 1967 – இல் ( 50 ஆவது பிறந்த நாள்) நெல்லை ஆய்வுக்குழு என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, ஆய்வாளர்களை ஒன்றிணைத்தார். 1969 – இல் ( 52 ஆவது பிறந்த நாள்) ‘ஆராய்ச்சி’ என்ற இதழைத் தொடங்கி தன் வாழ்நாள் இறுதிவரை 22 இதழ்களைக் கொண்டுவந்தார். பேரா. தெ.பொ.மீ. மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, நா. வா. அவர்களின் ஆறு நாட்டார் கதைப்பாடல்களையும் கதைகளையும் பதிப்புத்துறை சார்பாக வெளியிட்டார். 1975 – 76 இல் பேரா. வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் விருப்பப்படி திராவிட ஆய்வியல் கழகத்தின் ( DLA) சார்பாகத் தார்வார் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வை மேற்கொண்டார். இவரது நூல்களுக்காக நேரு நினைவுப்பரிசு, தமிழ் வளர்ச்சித்துறை பரிசு, சோவியத் நாடு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரது மறைவுக்குப் பிறகு இவருக்குச் சிறப்புச் செய்யும்வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டி.லிட். என்ற இலக்கியக் கலாநிதி பட்டத்தை வழங்கியது. 1970 – இலிருந்து அவர் மறைவுவரை நான் அவரிடம் தொடர்புகொண்டிருந்தேன். பேராசிரியர் பற்றிய முழுமையான விவரங்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. காமராசு அவர்களின் ‘நா. வானமாமலையின் தமிழியல் பங்களிப்பு ‘ என்ற (2006) முனைவர் பட்ட ஆய்வேட்டைப் பார்க்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக