பேராசிரியர் கோ. கேசவன் … 80 – களில் சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர். மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவைபற்றி மிக ஆழமான ஆய்வுகளை முன்வைத்தவர். பேரா. க. கைலாசபதி, பேரா. க. சிவத்தம்பி , பேரா. நா. வானமாமலை போன்றோரின் வரிசையில் இடம் பிடித்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப்பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். 1970 முதல் அவரது மறைவுவரை (1998 ) 28 ஆண்டுகள் தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவருடைய முதல் நூலாகிய ‘ மண்ணும் மனித உறவுகளும் ‘ என்ற நூலுக்கும் ‘இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’ என்ற நூலுக்கும் பேரா. க. கைலாசபதி அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். ‘தனக்கு ஆராய்ச்சிப் பயணத்தில் மற்றொரு தோழன் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ‘ என்று அவர் தெரிவித்திருந்தார். ‘ தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் மட்டங்களில் மார்க்சிய விமர்சனம் கால்கோள்கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கோ. கேசவன்’ என்று பேரா. க. சிவத்தம்பி குறிப்பிடுகிறார். கேசவனின் முனைவர் பட்ட ஆய்வானது பாரதியியல் ஆகும். ‘பள்ளு இலக்கியம் – ஒரு சமூகவியல் பார்வை’ , கதைப்பாடல்களும் சமூகமும் ‘ ‘ இலக்கிய விமரிசனம் – ஒரு மார்க்சியப் பார்வை’ ‘ தமிழ்ச்சிறுகதைகளில் உருவம்’, ‘திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்’, ‘பாரதியும் அரசியலும்’, தலித் இலக்கியம் – சில கட்டுரைகள்’ ‘ பாரதி முதல் கைலாசபதி வரை’ ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியம், மொழி சம்பந்தப்பட்ட இவரது குறிப்பிடத்தக்க ஆய்வுகளாகும். தமிழ்ச்சமூகம்பற்றி வேறு பல ஆய்வுநூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். பேரா. க . கைலாசபதி போன்றே இவரும் திடீரென்று தனது 51 வயதிலேயே இவ்வுலகத்தைவிட்டு மறைந்தார் என்பது மிகுந்த வேதனைக்குரியது. எனக்கும் இவருக்கும் சமூக, இலக்கியத் தளங்களில் 30 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு என்பதில் மகிழ்வடைகிறேன்.
— பேரா. கோ. கேசவன் உடன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக